Crime: நீதிமன்றத்தில் நீதிபதியை கத்தியால் குத்திய அலுவலக உதவியாளருக்கு 10 ஆண்டு சிறை
பணியிட மாற்றத்தால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக ஆத்திரமடைந்து நீதிபதியை கத்தியால் குத்தியதாக தெரியவந்தது.
சேலம் மாவட்டம் அஸ்தம்பட்டி பகுதியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைந்துள்ளது. இங்குள்ள ஜெ.எம் -4 நீதிமன்றத்தில் மேஜிஸ்ட்ரேட் ஆக பணியாற்றி வருபவர் பொன் பாண்டியன். கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஒன்றாம் தேதி காலை அவருடைய அறையில் (ஷேம்பர்) இருந்து அழைப்பு மணி அடித்து உதவியாளரை அழைத்துள்ளார். இந்த நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளர் பிரகாஷ் என்பவர் உள்ளே சென்ற சிறிது நேரத்தில் நீதிபதி காயத்துடன் வெளியே ஓடி வந்துள்ளார். அப்போது அங்கிருந்த காவல்துறையினர் உள்ளே சென்று பார்த்தபோது அலுவலக உதவியாளர் பிரகாஷ் கையில் கத்தியுடன் இருந்துள்ளார். நீதிபதி பொன் பாண்டியனை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்றது தெரியவந்துள்ளது.
இதில் சிறிய காயத்துடன் உயிர் தப்பிய நீதிபதியை காவல்துறையினர் மீட்டு சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். தொடர்ந்து நீதிபதியை கத்தியால் குத்திய நீதிமன்ற ஊழியரை காவல்துறை கைது செய்து அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் விசாரணை நடத்தினர். விசாரணையில் பிரகாஷ் ஓமலூர் நீதிமன்றத்தில் பணியாற்றி வந்ததாகவும் பணியிடமாறுதல் வழங்கப்பட்டதால் அவர் சேலம் நீதிமன்றத்திற்கு பணிக்கு வந்ததாகவும் கூறப்பட்டது. இந்தப் பணி இடமாற்றத்திற்கு நீதிபதி பொன் பாண்டியன் தான் காரணம் என்றும் விசாரணையின் போது நீதிமன்ற ஊழியர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். இதனிடையில் நீதிபதி பொன் பாண்டியனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும். பணியிட மாற்றத்தால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக ஆத்திரமடைந்து நீதிபதியை கத்தியால் குத்தியதாக தெரியவந்தது.
இந்த நிலையில், நீதிபதியை கத்தியால் குத்திய பிரகாஷ்க்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஐந்தாயிரம் ரூபாய் அபராதமும், அபராதம் கட்டவில்லை என்றால் கூடுதலாக ஆறு மாதம் சிறை தண்டனையும் விதித்து சேலம் குற்றவியல் நடுவன் நீதிமன்றம் இரண்டாம் நீதிமன்றம் அமர்வு உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற ஊழியருக்கு நூற்றாண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்