![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Mettur Dam: கர்நாடகாவில் இருந்து திறக்கப்பட்ட நீர் மேட்டூர் அணை வந்தடைந்தது
கர்நாடகாவில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் ஆனது நேற்று இரவு 9:45 மணிக்கு மேட்டூர் அணை வந்தடைந்தது. தற்போதைய நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்வரத்து 2,100 கன அடியாக அதிகரித்துள்ளது.
![Mettur Dam: கர்நாடகாவில் இருந்து திறக்கப்பட்ட நீர் மேட்டூர் அணை வந்தடைந்தது Released water from Karnataka reaches Mettur Dam TNN Mettur Dam: கர்நாடகாவில் இருந்து திறக்கப்பட்ட நீர் மேட்டூர் அணை வந்தடைந்தது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/26/380491db0902d06d2bb03192858103b71690395019346113_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதன் காரணமாக கர்நாடகா மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணை மற்றும் கபினி அணை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கிருஷ்ணராஜ சாகர் அணை மற்றும் கபினி அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கர்நாடகாவில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் ஆனது நேற்று இரவு 9:45 மணிக்கு மேட்டூர் அணை வந்தடைந்தது. தற்போதைய நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்வரத்து 2,100 கன அடியாக அதிகரித்துள்ளது. இது இன்று மாலைக்குள் 22,000 கன அடியாக அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதைத்தொடர்ந்து மேட்டூர் அணையின் நீர் வரத்து 177 கன அடியில் இருந்து 2,100 கன அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக 10,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் 12,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. மேட்டூர் அணையின் நீர் வரத்து அதிகரித்துள்ளதால் நீர் திறப்பு படிப்படியாக மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
மேட்டூர் அணையின் நீர் மட்டம் 65.80 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 29.19 டி.எம்.சி ஆகவும் உள்ளது. குறுவை, சம்பா சாகுபடி பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து 90வது ஆண்டாக கடந்த ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. சேலம், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை உட்பட 12 டெல்டா மாவட்டங்களில் 17 லட்சம் ஏக்கர் குறுவை, சம்பா பயிர்கள் பாசனம் பெறும். மேட்டூர் அணையின் கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக திறக்கப்பட்டிருந்த தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையில் இருந்து 1,500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
கர்நாடக அணைகள்:
கர்நாடக அணைகளை பொறுத்தவரை நேற்று கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 91.24 அடியாகவும் அணையின் நீர் இருப்பு 16.69 டி.எம்.சி ஆகவும் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 6,278 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில் அணையில் இருந்து வினாடிக்கு 20,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கபினி அணையை பொறுத்தவரை அணையின் நீர்மட்டம் 54.85 அடியாக உள்ள நிலையில், அணையின் நீர் இருப்பு 13.65 டி.எம்.சி ஆகவும் உள்ளது, அணை வினாடிக்கு 6,759 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில், அணையில் இருந்து வினாடிக்கு 2,600 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான கூர்க் பகுதியில் உருவாகும் காவிரி ஆறு குடகு, ஹாசன் , மைசூர், மாண்டியா, பெங்களூரு, ரூரல், ராம்ராஜ் நகர் ஆகிய மாவட்டங்கள் வழியாக தமிழ்நாட்டில் தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர் , திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் வழியாக சென்று வங்க கடலில் கலக்கிறது.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)