தமிழகத்தில் அம்பேத்கர் கொள்கைகளை கொண்டு வந்தவர் பெரியார்; 80% பெண்கள் படிக்க திராவிட மாடலே காரணம்- அமைச்சர் பொன்முடி.
துபாயில் கடலில் ஒரு நகரம் மற்றும் ஹோட்டல் இருக்கிறது. அது எல்லாம் இருக்கிற போது கலைஞரின் பேனா சிலை அமைப்பது தொடர்பாக அரசியலுக்காக பேசி வருகின்றனர்.
சேலம் பெரியார் பல்கலைக்கழக வளாகத்தில் கலைஞர் கருணாநிதி ஆய்வு மையம் புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்துகொண்டு புதிய ஆய்வு கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
பின்னர் மேடையில் அமைச்சர் பொன்முடி உரையாற்றியதாவது:
நான் கல்லூரியில் பேராசிரியராக இருந்தேன். மாணவர்களை சந்தித்து அரசியல் பாடங்களை பயிற்றுவித்துள்ளேன். எல்லோரும் தமிழ்ப்பெயர் சூட்டிக் கொள்ள வேண்டும். கல்லூரியில் பேராசிரியராக இருந்தபோது என் பெயர் தெய்வ சிகாமணி. ஆசிரியர்கள் பெயரை சொல்ல மாட்டார்கள். இன்ஷியல் வைத்துத்தான் மாணவர்களுக்கு பழக்கம். புனைப்பெயராக பொன்முடி என்கிற தெய்வ சிகாமணி என்று இருந்தது. கலைஞரின் அறிவுரையை ஏற்று பொன்முடி என்று மட்டும் வைத்துக் கொண்டேன்.
தமிழ்மொழி உணர்வு இருக்க வேண்டும்
80 சதவீதம் மகளிர் படிக்கிறார்கள் என்றால் அதற்கு திராவிட மாடல் ஆட்சியே காரணம். இளைஞர்களுக்கு தமிழ்மொழி உணர்வு, தமிழ்நாட்டு உணர்வு இருக்க வேண்டும். எல்லோருக்கும் உள்ளுணர்வு தமிழாக இருக்க வேண்டும். மாணவர்களுக்கு கிடைக்கும் ஆற்றல் கொஞ்சம் நஞ்சமல்ல. அதைத்தான் நான் முதல்வன் என்ற திட்டத்தின் மூலம் மாணவர்களை ஆற்றலை, திறமையை, செயல்பாட்டினை வளர்த்துக் கொள்ள முதலமைச்சர் ஸ்டாலின் அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறார்.
புதுமைப் பெண் திட்டத்தின் மூலம் அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு பயின்று வரும் மாணவிகளுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அரசுப் பள்ளிகளில் பயிலும் கிராமப்புற ஏழை எளிய மாணவர்கள் பயன்பெற்று வருகிறார்கள். தென்னாற்காடு மாவட்டத்தில் ஒரேயொரு பல்கலைக்கழகமாக அண்ணாமலை பல்கலைக்கழகம் இருந்தது. ஆனால் தற்போது அதிக எண்ணிக்கையில் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் இருப்பதற்கு திராவிட மாடல் ஆட்சியே காரணம்.
ஆய்வு செய்யும் மாணவர்கள் பெரியார், அண்ணா மற்றும் கலைஞரின் ஆய்வுகள் குறித்து முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும். கலைஞர் ஆய்வு மையத்தில் 2 ஆண்டு பட்டப்படிப்பு தொடங்கப்படும். கடந்த 10 ஆண்டுகளாக கலைஞர் ஆய்வு மையம் முடங்கியிருந்தது. முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தபிறகே ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கியுள்ளன.
திராவிட மாடல்
திராவிட மாடல் என்றால் யாரையும் சங்கடப்படுத்த அல்ல. யாரையும் பிரித்து பார்க்க அல்ல. ஒவ்வொருவருக்கும் தாய்மொழி உணர்வும், தாய்நாட்டு உணர்வும் வேண்டும். சமூகநீதி என்பதை அனைவருக்கும் என்பதையே திராவிட மாடல் வலியுறுத்துகிறது. தமிழகத்தின் வரலாறு முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும். செம்மொழி அந்தஸ்து பெற்று தந்தது என்பது மட்டுமல்ல தமிழ்நாடு என்று பெயர் வைத்ததே திராவிட மாடல் ஆட்சிதான். தமிழகத்தின் எதிர்காலம் மாணவர்கள்தான். அதற்காக நான் முதல்வன், ஸ்கில் டவலப்மென்ட் அளிக்கப்படுகிறது. முழுமையாக பயிற்சி பெற வேண்டும். தமிழ்நாட்டைப் பற்றி, தமிழ் மொழியைப் பற்றி அதிகமாக ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும்.
பெரியார் அம்பேத்கருடன் நெருங்கி பழகியவர். தமிழகத்தில் அம்பேத்கர் கொள்கைகளை கொண்டு வந்தவர் பெரியார். எல்லோரும் சமம். எல்லோரும் மனிதர்கள் என்பதை திராவிட இயக்கம்தான் கொண்டு வந்தது. வகுப்புக்கு ஒரு பெண் மட்டுமே பயின்று வந்த காலம் போய் 80 சதவீதம் பெண்கள் பயில்வதற்கு திராவிட இயக்கமே காரணம்.
அம்பேத்கரின் கொள்கைகளை இந்தியாவில் தமிழகத்தில் பரப்பியவர் தந்தை பெரியார் மற்றும் திராவிட இயக்கம் மட்டுமே. மற்ற யாருக்கும் பங்கு கிடையாது. அம்பேத்கர், பெரியார், அண்ணா, கலைஞரின் கொள்கைகளை இன்றைக்கு திராவிட மாடல் ஆட்சியாக முதலமைச்சர் ஸ்டாலின் நடத்தி வருகிறார்.
பொறியியல் கல்வி பயிலும் மாணவர்களுக்கு 2 செமஸ்டரில் தமிழ் ஒரு பாடமாக கொண்டு வரப்பட்டுள்ளது. விரைவில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. கலைஞரின் பணிக்காக மட்டுமே ஆய்வு மையம் உருவாக்கப்பட்டுள்ளது. 14 வயதில் முரசொலி நாளிதழை ஆரம்பித்து தமிழுக்கு பாடுபட்டவர் கலைஞர். அவரின் வழியில் இன்றைய முதல்வர் ஸ்டாலினும். பேனா வைக்கிறது இன்றைக்கு பிரச்சினையாக உள்ளது. அந்த பேனா இல்லையென்றால் நாம் படித்திருக்கவே முடியாது.
தலைநிமிர்ந்து நாமெல்லாம் இருக்க அந்தப் பேனாவே காரணம். பெண்கள் அதிகம் கல்வி கற்க, அடித்தட்டு மக்களுக்கு சமூக நீதி அடிப்படையில் இட ஒதுக்கீடு கொடுத்தது கலைஞரின் பேனாதான். பெரியார் பல்கலைக்கழக மாணவிகள், பெரியார் மற்றும் கலைஞரை பற்றி நால்களை படித்து தெரிந்து கொள்ள வேண்டும். 14 வயதில் தொடங்கி கடைசி வரை கலைஞரின் பேனா எழுதியதால்தான் எங்களைப் போன்றவர்கள் கல்லூரிகளில் படிக்க முடிந்தது. தமிழக மக்களை உருவாக்கியது.
மாபெரும் தமிழ்க் கனவு திட்டத்தில் கல்லூரிக்கு 50 பேரை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு பேசும் திறனை வளர்க்க உயர்கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. எல்லா துறையிலும் மாணவர்கள் தங்களது ஆற்றலை வளர்த்துக் கொள்ள வேண்டும். அயலி பார்த்தேன். தமிழகத்தின் வரலாறே உருவாகி இருக்கிறது. அந்தக் கதையில் பெண் குழந்தைகளை படிக்க விடாமல் ஊர்க்கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது. கட்டுப்பாடுகளை தகர்த்து பெண்கள் கல்வி கற்க முயல்வது சிறப்பாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. அதெல்லாம் மாற்றியமைத்து எல்லோரும் கல்வி பயிலும் வாய்ப்பினை உருவாக்கியது திராவிட மாடல்தான். மாணவிகள் தமிழ்நாட்டின் வரலாற்றை தெரிந்து கொள்ள வேண்டும்.
தமிழ்நாடு என்பதே கொஞ்சம் பேருக்கு பிடிக்கவில்லை
தமிழ்நாடு என்பதே கொஞ்சம் பேருக்கு பிடிக்கவில்லை. வெறும் புத்தகம் மட்டுமே படிக்காமல் எல்லாவற்றையும் தெரிந்து கொண்டால்தான் சரியாக இருக்கும். எல்லோரும் ஒருங்கிணைந்து இந்தப் பணியை செய்ய வேண்டும். தமிழ்நாட்டிற்கென தனியாக கல்விக் கொள்கையை வகுக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். 5-ம் வகுப்பு, 8-ம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு என்பதை ஏற்க முடியாது. தமிழ்நாடு தமிழ் உணர்வு என்று செயல்பட வேண்டும். வெளிநாட்டிற்கு ஆங்கிலம், உள்ளூருக்கு தமிழ் என 2 மொழிகள் மட்டுமே போதும். இருமொழிக் கொள்கையே தமிழகத்திற்கு போதும். இதை எதிர்த்து எந்த திட்டம் வந்தாலும் அதை மீறி இருமொழிக் கொள்கையை முதலமைச்சர் ஸ்டாலின் நிச்சயம் செயல்படுத்துவார். எங்கு சென்றாலும் மொழி உணர்வு, நாட்டு உணர்வு இருக்க வேண்டும். அனைவரும் சமம், ஆண் பெண் சமம் என்பதை ஏற்று அனைவருக்கும் பரப்ப வேண்டும்.’’
இவ்வாறு பொன்முடி தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பொன்முடி, ’’பேனா சிலை அமைப்பதற்கான ஏற்படுகளை முதலமைச்சர் ஸ்டாலின் மேற்கொண்டு வருகிறார். மகாராஷ்டிராவில் சிவாஜி சிலை வைத்திருக்கிறார்கள் அது ஒன்று புதிது அல்ல. நமது தமிழகத்திலும் வள்ளுவர் சிலை பாம்பன் பாலம் ஆகியவை கடலில் உருவாக்கப்பட்டிருக்கின்றன. துபாயில் கடலில் ஒரு நகரம் மற்றும் ஹோட்டல் இருக்கிறது. அது எல்லாம் இருக்கிற போது கலைஞரின் பேனா சிலை அமைப்பது தொடர்பாக அரசியலுக்காக பேசி வருகின்றனர். கலைஞரின் பேனா என்பது வரலாற்றை மாற்றி அமைத்த பேனா என்ற முறையில், அந்த வரலாற்றை தமிழக இளைஞர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் தான் தமிழக முதல்வர் செயல்படுத்தி வருகிறார்’’ என்று பொன்முடி தெரிவித்தார்.