“அடித்தட்டு மக்களுக்கும் உயர்தர சிகிச்சை கிடைக்க வேண்டும் என்பதுதான் எங்களது நோக்கம்” - அமைச்சர் கே.என்.நேரு
சேலத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் விமரிசையாக நடத்தப்பட்டது.
சமூகநலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ் சேலம் மாவட்டத்தில் 700 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. சேலம் ஐந்து ரோடு பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என். நேரு கலந்துகொண்டு கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நடத்தும் நிகழ்வை துவக்கி வைத்தார். இங்கு 150 கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நடத்தப்பட்டது. இந்த விழாவில் சேலை, மஞ்சள், குங்குமம், வளையல் அடங்கிய சீர்வரிசை பொருட்கள் கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கப்பட்டது. மேலும் ஐந்து வகையான உணவுகள் கொண்ட உணவு வகைகளை ஏற்பாடு செய்து விருந்து நடத்தப்பட்டது. இந்த சமுதாய வளைகாப்பு விழாவில் கர்ப்பிணி பெண்களின் உறவினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்த விழாவில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில், “நகரத்தில் உள்ள பொதுமக்களுக்கு உயர்ந்த தர சிகிச்சை பெறுகின்றது எப்படி இருக்கிறதோ? அடித்தட்டு மக்களுக்கும் உயர்தர சிகிச்சை கிடைக்க வேண்டும் என்பதுதான் எங்களது நோக்கம். தமிழக முதல்வர் சுகாதார துறையில் பொதுமக்களுக்கு நிறைய சலுகைகளை அறிவித்து வழங்கி வருகிறார்” என்றார்.
பின்னர், சேலம் அழகாபுரம் பகுதியில் கூட்டுறவுத்துறை சார்பாக 69ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவில் 2876 பயனாளிகளுக்கு 25.73 கோடி அளவிலான கடன் உதவி, சேலம் மாவட்ட கூட்டுறவு நிறுவனங்களில் இருந்தபோது, உயிரிழந்த 12 பணியாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையிலான ஆணை வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகதுறை அமைச்சர் கே.என். நேரு பேசுகையில், “விவசாயிகளுக்கு வட்டி இல்லாத கடனாக 4000 கோடி வரை கூட்டுறவு துறை சார்பாக வழங்கப்பட்டு வருகிறது. மேலும் 40 ஆயிரத்துக்கு மேற்பட்ட கூட்டுறவு சங்கங்கள் உள்ளது. தமிழகம் முழுவதும் அனைத்து இடங்களிலும் கூட்டுறவு சங்கங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. அனைத்து தரப்பினர் உயர்வுக்காக கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகிறது. கூட்டுறவு சங்கங்கள் அனைத்து இடங்களிலும் செயல்படும் அளவிற்கு பெரும் வளர்ச்சி அடைந்துள்ளது. நெசவாளர்களுக்கு மட்டுமே 20 ஆயிரம் சங்கங்கள் உள்ளது.
தமிழகத்தில் ஒரு ஆட்சியை உருவாக்கக்கூடிய அளவிற்கு கூட்டுறவுத்துறைக்கு திறன் உள்ளது. பொதுவிநியோகம் திட்டம் மற்றும் கூட்டுறவு சங்கங்களும் இணைப்பிரியாமல் இருக்கும் துறைகளாக உள்ளது. விவசாயிகளுக்கு கடன் வழங்குதல், குறைவாக விலையில் வழங்குதல், அதுமட்டுமில்லாமல் அவர்கள் உற்பத்தி செய்த பொருட்களை விற்பனை செய்யும் செயல் உள்ளிட்ட அத்தியாவசியமாக கூட்டுறவுத்துறை பணியாற்றி வருகிறது. சிறப்பாக செயல்பட்டு வரும் கூட்டுறவு சங்கங்களை ஊக்குவிக்கும் வகையில் தான் விருதுகள் வழங்கப்படுகிறது.
கூட்டுறவுத்துறை மென்மேலும் வலுவுடையதாக இருக்கவேண்டும். விவசாயத்திற்காக எந்த ஒரு முதலமைச்சரும் இந்த அளவிற்கு செய்ததில்லை, அந்த அளவுக்கு தமிழக முதல்வர் சிறப்பாக செய்து வருகிறார்” என்று கூறினார்.
இதைத் தொடர்ந்து ரேசன் கடைகள் மூலமாக 5 கிலோ சிலிண்டர் விற்பனை செய்யும் திட்டம் துவக்கப்பட்டது. இதுமட்டுமில்லாமல் பயிர்கடன், மகளிர் சுயஉதவிக்குழு கடன், மாற்றுத்திறனாளி கடன், கறவை மாடு வளர்ப்பு கடன், வீடுஅடமான கடன் உள்ளிட்ட 10 பயனாளிகளுக்கு கடன் உதவி வழங்கினார். சேலம் மாவட்டத்தில் தனிநிதியத்தை உருவாக்கி ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு மாதம்தோறும் ஆயிரம் வழங்கும் திட்டத்தின் கீழ், சேலம் மாவட்டத்தில் 777 ஓய்வு பெற்ற கூட்டுறவு சங்க பணியாளர்களில், ஐந்து பணியாளர்களுக்கு கருணை ஓய்வூதிய ஆணை அமைச்சர் வழங்கினார்.