மேட்டூரில் இருந்து சென்னை சென்ற ஒரு டன் மீன்... மானிய கோரிக்கையை நிறைவேற்றியதற்கு எம்.எல்.ஏ கொடுத்த ட்ரீட்.
சட்டப்பேரவை வளாகத்தில் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் தலைமையில் விருந்து அளிக்கப்பட்டது.
தமிழக சட்டப்பேரவையில் தமிழக நீர்வளத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் பல பகுதிகளில் உள்ள ஆறு, அணை, ஏரி உள்ளிட்ட பல்வேறு நீர் நிலைகளை மேம்படுத்துவது குறித்து விவாதம் நடத்தப்பட்டது.
மேலும் தமிழக நீர்வளத்துறை சாதனைகள் 2023 புத்தகம் வெளியிடப்பட்டது. இதன் தொடர்ச்சியாக சட்டப்பேரவை வளாகத்தில் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் தலைமையில் விருந்து அளிக்கப்பட்டது.
இதற்காக மேட்டூர் அணையில் இருந்து சுமார் ஒரு டன் மீன்கள் சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டு முதல்வர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் இந்த விருந்தில் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவத்திடம் கேட்டபோது, ”சட்டப்பேரவையில் தமிழக நீர்வளத்துறை சார்பில் மானிய கோரிக்கைகள் இன்று விவாதிக்கப்பட்டது. கடந்த ஆண்டு நீர்வளத்துறை மானிய கோரிக்கையில் மேட்டூர் அணைக்கு அதிகப்படியான மீன் குஞ்சுகளை தர வேண்டும் என கோரிக்கை வைத்தேன். அதன் அடிப்படையில் கடந்த ஆண்டு வழக்கத்தை விட அதிகமாக மீன் குஞ்சுகளை தமிழக அரசு மேட்டூர் அணைக்கு வழங்கியது.
இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் முதல்வர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற அரசு அதிகாரிகள் என அனைவருக்கும் மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் ஒரு டன் மேட்டூர் அணை மீன்களைக் கொண்டு விருந்தளித்தேன். மீன்களை சாப்பிட்ட அனைவரும் மிகவும் சுவையாக உள்ளதாக கூறினார். குறிப்பாக முதல்வர் தனிப்பட்ட முறையில் அனைத்து, மேட்டூர் அணை மீனை முதல்முறையாக சாப்பிடுகிறேன். மிகவும் சுவையாக இருந்தது” என்று கூறியதாக தெரிவித்தார்.
மேலும், இந்த ஆண்டு மானிய கோரிக்கையில் மேட்டூர் அணைக்கு ஒரு கோடி மீன் குஞ்சுகள் வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்க உள்ளதாகவும் தெரிவித்தார். இது மட்டுமின்றி மேட்டூர் அணையில் கழுவி நீர் கலப்பது, காவிரி ஆற்றல் மீன்பிடிக்கும் மீனவர்களுக்கான பல்வேறு கோரிக்கைகள் வைக்க உள்ளதாகவும், அதனை தமிழக அரசும் நீர்வளத் துறையும் நிறைவேற்றும் என நம்பிக்கை உள்ளது எனவும் மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் தெரிவித்தார்.