ஒமிக்ரான்’ வைரஸ் அச்சுறுத்தல் - கடலூரில் அரசு மருத்துவமனைகளுக்கு வருபவர்களுக்கு தடுப்பூசி கட்டாயம்
’’நோயாளிகளுக்கு உதவியாளராக இருக்கும் உறவினர்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டுக் கொண்டால் மட்டுமே உள்ள அனுமதிக்கப்படுவார்கள்’’

உலகம் முழுவதும் கடந்த சில மாதங்களாக கொரோனா பதிப்பானது படிப்படியாக குறைந்து வந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய வகை கொரேனாா வைரசான ‘ஒமிக்ரான்’ தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரசுக்கு பயந்து பல நாடுகள் தங்களது எல்லைகளை மூடி உள்ளன. ஒமிக்ரான் பாதிப்பு உள்ள நாடுகளில் இருந்து விமான சேவைகளையும் ரத்து செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வரும் பயணிகளை கண்காணிக்க தனி குழு அமைக்கப்பட்டு உள்ளது. தமிழகம் வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை செய்து அவர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இதன்படி கடலூர் மாவட்டத்திற்கும் வெளிநாடுகளில் இருந்து வருவோரை கண்காணிக்க சுகாதாரத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். குறிப்பாக தென் ஆப்பிரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகளில் இருந்து வருவோரை கண்காணிக்க அதிகாரிகள் தயாராகி வருகின்றனர்.
இதற்கிடையில் இந்த வைரஸ் எச்சரிக்கையாக கடலூர் அரசு மாவட்ட மருத்துவமனைக்கு வருவோர் கட்டாயம் தடுப்பூசி போடவேண்டும் என்று கண்காணிப்பாளர் டாக்டர் சாய்லீலா அவர்கள் கூறினார். இருப்பினும் 100 சதவீதம் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட வேண்டும். முக கவசம் அணிய வேண்டும். அது தான் இதை தடுக்க நிரந்தர தீர்வாக இருக்கும் என்றார்.இது பற்றி அவர் மேலும் கூறுகையில், ஒமிக்ரான் வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர் அரசு மருத்துவமனைக்கு வரும் அனைவரும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி போட்டு இருக்க வேண்டும், குறிப்பாக நோயாளிகளை கவனிப்பதற்காக உடன் இருப்பவர்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டு இருக்க வேண்டும்.தடுப்பூசி போடாமல் வருவோருக்கு கடலூர் அரசு மருத்துவமனைக்கு வர தடை விதிக்கப்படுகிறது.
அதேபோல் மருத்துவமனைக்கு வரும் அனைவரும் முக கவசம் அவசியம் அணிய வேண்டும். இல்லையென்றால் அனுமதி கிடையாது. சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றார்.அரசு மருத்துவ மனையில் 800 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் மற்றும் மருத்துவர்கள் பணியில் உள்ளார்கள் எனவே அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக மக்களாகிய நீங்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொண்டு சிகிச்சை பெற வேண்டும் மேலும் நோயாளிகளுக்கு உதவியாளராக இருக்கும் உறவினர்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டுக் கொண்டால் மட்டுமே உள்ள அனுமதிக்கப்படுவார்கள் என கூறினார்.இல்லை என்றால் அரசு மருத்துவமனையிலே தடுப்பூசி போட்டுகொள்ள வேண்டும் என கேட்டுகொண்டார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

