சேலத்தில் அரசு பொருட்காட்சி.. தொடங்கிவைத்த அமைச்சர் கே.என்.நேரு
45 நாட்கள் நடைபெறும் இக்கண்காட்சியில் பொதுமக்களை கவரும் விதமாக பனிக்கட்டி உலகம், 3டி திரையரங்கம், ராட்டினம் போன்ற பொழுதுபோக்கு அம்சங்களும் இடம் பெற்றுள்ளது.
சேலத்தில் அரசு பொருட்காட்சியை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே என் நேரு இன்று தொடங்கி வைத்தார். அரசு பொருட்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள பல்வேறு அரசு துறைகளின் அரங்குகளை செய்தி மக்கள் தொடர்பு துறை அமைச்சர் சுவாமிநாதன் தொடங்கி வைத்தார். 45 நாட்கள் நடைபெறவுள்ள இந்த அரசு பொருட்காட்சியில் செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை, நகராட்சி நிர்வாகத்துறை, அறநிலையத்துறை, பள்ளிக்கல்வித்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை உட்பட 26 அரசுத்துறை அரங்குகளும், 6 அரசு சார்பு நிறுவனங்களின் அரங்குகள் என 32 அரங்குகள் இடம் பெற்றுள்ளன. சேலம் மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டிருந்த பணமரத்துப்பட்டி ஏறி போன்று அரங்கு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இந்த அரங்குகளில் அரசின் நலத்திட்ட உதவிகள் அவற்றை பெறுவதற்கான வழிமுறைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. பின்னர் 206 பேருக்கு 5 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் கே.என்.நேரு, சுவாமிநாதன் வழங்கினர்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை அமைச்சர் சுவாமிநாதன், கிராமங்களில் இருந்து வரும் மக்களும் ஒரு திட்டத்தை எப்படி பெற முடியும் என்பதை தெரிந்து கொள்ளும் வகையில் அனைத்து விளக்கங்களும் கொடுக்கும் வகையில் பொருட்காட்சி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டு உலகமே வியக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை தமிழக முதல்வர் செயல்படுத்தி வருகிறார். குடியரசுத் தலைவர்கள் பிரதமர் உள்ளிட்ட அனைவரும் அனைத்து தலைவர்களும் புருவத்தை உயர்த்தக்கூடிய வகையில் சதுரங்க போட்டியை நடத்தினார் என்று கூறினார்.
அதன்பின் பேசிய நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே என் நேரு, விவசாயிகள் வியாபாரிகள் மற்றும் அரசு சார்பாக நலத்திட்ட உதவிகள் எவ்வாறு வழங்கப்படுகிறது என்பது குறித்து மக்கள் தெரிந்து கொள்ளும் வகையிலும் பல்வேறு தொழிலாளர்களுக்கு வேலை ஏற்படுத்தி வரும் வகையிலும் பொருட்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. செய்தி துறை அமைச்சர் எந்த துறை எடுத்துக் கொண்டாலும் முகம் சுளிக்காமல் செயல்படுத்துகிறார் முதல்வர் சொல்லும் திட்டங்களை அப்படியே செயல்படுத்த கூடியவர் என்று பேசினார். 45 நாட்கள் நடைபெற உள்ள பொருட்காட்சியை சேலம் மாவட்டம் மட்டுமில்லாமல் சேலம் மாநகரை கவர்ந்த சில மக்கள் அனைவரும் பார்த்து பயன்பெற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கார்மேகம், சேலம் மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ், மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், சேலம் மாநகராட்சியின் துணை மேயர் சாரதா தேவி, சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அருள், மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம், சேலம் நாடாளுமன்ற உறுப்பினரை எஸ் ஆர் பார்த்திபன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 45 நாட்கள் நடைபெறும் இக்கண்காட்சியில் பொதுமக்களை கவரும் விதமாக பனிக்கட்டி உலகம், 3டி திரையரங்கம், ராட்டினம் போன்ற பொழுதுபோக்கு அம்சங்களும் இடம் பெற்றுள்ளது. தினசரி மாலை நேரங்களில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் அரசு பொருட்காட்சியை கண்டு களிக்க வருமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.