மேட்டூர் அனல் மின் நிலைய விபத்து; உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம்
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூபாய் 25 லட்சம் நஷ்ட ஈடு மற்றும் அரசு பணி வழங்க வேண்டும் என உறவினர்கள் அனல் மின் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம்.
மேட்டூர் அனல் மின் நிலையத்தில 840 மெகாவாட் கொண்ட முதல் பிரிவில் 3-வது அலகில் நிலக்கரி சேமிப்பு தொட்டி அருகே 7 ஒப்பந்த தொழிலாளர்கள் நேற்று மாலை பணிபுரிந்தனர். அப்போது, நிலக்கரி சேமிப்பு தொட்டி திடீரென சரிந்து விழுந்தது. இதில் தொழிலாளர்கள் 7 பேரும் நிலக்கரி குவியலில் சிக்கி கொண்டனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற அனல் மின் நிலைய தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு நிலக்கரி குவியலில் சிக்கி படுகாயமடைந்த ஒப்பந்த தொழிலாளர்கள் ஸ்ரீகாந்த், மனோஜ் குமார், சீனிவாசன், முருகன், கௌதம் ஆகியவரை மீட்டு சிகிச்சைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
நிலக்கரி குவியலில் சிக்கிக் கொண்ட வெங்கடேஷ் மற்றும் பழனிசாமி உயிரிழந்தனர். அவர்களின் உடல் சுமார் 5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து சரக டிஐஜி உமா, மேட்டூர் துணை ஆட்சியர் பொண்மணி, அனல் மின் நிலைய தலைமை பொறியாளர் விவேகானந்தன், மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் ஆகியோர் நேரில் பார்வையிட்டு மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இதனிடையே, ஆய்வு பணிக்காக கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்த சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் தகவலறிந்து நேற்றிரவு புறப்பட்டு மேட்டூருக்கு வந்தார். மேட்டூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஒப்பந்த தொழிலாளர்களை நேற்று நள்ளிரவு நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அப்போது, மருத்துவர்களிடம் தொழிலாளர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்தும், அவர்களின் உடல்நலம் குறித்தும் கேட்டறிந்தார். பின்னர், விபத்தில் உயிரிழந்த வெங்கடேஷ் மற்றும் பழனிசாமி குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். அப்போது, மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி உடனிருந்தார். தொடர்ந்து, அனல் மின் நிலையத்தில் விபத்து ஏற்பட்ட பகுதியை அமைச்சர் ராஜேந்திரன், ஆட்சியர் பிருந்தா தேவி, ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர், திமுக சார்பில் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு ரூ 50,000 மற்றும் உயிரிழந்தவர்களுக்கு ரூ 1,00,000 நிதியை அமைச்சர் ராஜேந்திரன் வழங்கினார்.
இந்நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் இன்று காலை அனல் மின் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 25 லட்சம் நஷ்ட ஈடு மற்றும் அரசு பணி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இதனை தொடர்ந்து, அனல் மின் நிலையம் நிர்வாகம் சார்பில் தமிழ்நாடு அனல் மின் நிலைய இயக்குநர் செந்தில்குமார், மேட்டூர் டிஎஸ்பி ஆரோக்யராஜ், வட்டாட்சியர் ரமேஷ் ஆகியோர் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த முற்றுகை போராட்டத்தால் அனல் மின் நிலையத்திற்கு பணிபுரிய வந்த அரசு அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் ஆகியோரை பணிக்கு செல்ல விடாமல் தடுத்து நிறுத்தியுள்ளனர். மேட்டூர் சேலம் தேசிய நெடுஞ்சாலையில் 300-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிக்கு செல்லாமல் சாலையில் நின்று கொண்டு இருக்கின்றனர். இதனால் அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில் பேருந்துகள், கன ரக வாகனங்கள் மாற்றுப்பாதையில் அனுப்பி வைக்கப்பட்டன. இதனால் அனல் மின் நிலையம், மேட்டூர் அரசு மருத்துவமனையில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருவதால் மேட்டூர் டிஎஸ்பி ஆரோக்யராஜ் தலைமையில் 100க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், விபத்தில் உயிரிழந்த வெங்கடேஷ் மற்றும் பழனிசாமி குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் தலா ரூபாய் 10 லட்சம் மற்றும் விபத்தில் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் ஐந்து பேருக்கு தலா 2 லட்சம் ரூபாயினை சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் வழங்கினார்.