Election Petition: சேலத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் கொடுக்க வந்த கட்சியினர் மீது புகார்
தேர்தல் பிரச்சாரத்திற்கு இந்திய விமானப்படை ஹெலிகாப்டரை பயன்படுத்தியதற்காக பிரதமர் மோடியின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் சார்பாக மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார்.
சேலம் கெஜ்ஜல்நாயக்கன்பட்டி பகுதியில் நேற்று முன்தினம் பாஜக கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பாக தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அதற்காக இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டரில் வந்து இறங்கினார். அவரது வாகனத்திற்கு முன்பாகவும், பின்பாகவும் இரண்டு விமான படை ஹெலிகாப்டர்கள் பாதுகாப்பிற்கு வந்தது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் போது இந்திய விமானப்படை ஹெலிகாப்டரை தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தியது சட்டப்படி குற்றம் என்றும் புகார் மனுவில் தெரிவித்துள்ளனர்.
இந்திரா காந்தி தகுதி நீக்கம்:
மேலும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் அப்போதைய பிரதமருமான இந்திரா காந்தி கடந்த 1975 ஆம் ஆண்டு நடந்த பிரச்சாரத்திற்கு ஐஏஎஃப் ஹெலிகாப்டரை பயன்படுத்தியதால் தேர்தல் ஆணையத்தினால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார் இதனை புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளனர். தேர்தல் நடத்தை விதிகளின்படி எந்த ஒரு தலைவரும், பிரதமர் அல்லது முதல்வர் கூட பிரச்சார நோக்கத்திற்காக அரசாங்க இயந்திரத்தை பயன்படுத்தக் கூடாது என்பது இசிஐ விதி தேர்தல் நடத்தை விதி அமுலுக்கு வந்த பிறகு சேலம் மாநகராட்சியில் மேயர் மற்றும் துணை மேயர் அதிகாரப்பூர்வ வாகனங்கள் திரும்ப பெறப்பட்டது. அதே விதி பிரதமருக்கும் பொருந்தும் என்று எண்ணுவதாக மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
காங்கிரஸ் கோரிக்கை:
எனவே காங்கிரஸ் கட்சி கமிட்டியின் சார்பாக கொடுக்கப்படும் புகார் மீது உரிய விசாரணை நடத்தி பிரதமர் நரேந்திர மோடியின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான புகார் மனுவை காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் செந்தில் மற்றும் சேலம் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் பாஸ்கர் உள்ளிட்டோர் தேர்தல் நடத்தும் அலுவலர் சந்தித்து புகார் மனு அளித்தனர். எனவே பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்திற்கு தடை விதிக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
புகார் அளித்தவர்கள் மீது எழுந்த புகார்:
புகார் கொடுக்க வந்த போது காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் செந்தில் மற்றும் காங்கிரஸ் கட்சியின் சேலம் மாநகர் மாவட்ட தலைவர் பாஸ்கர் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியின் கொடியை காரில் பறக்க விட்டவாறு மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலகத்திற்கு வருகை தந்தனர். குறிப்பாக கழுத்தில் அனைவரும் காங்கிரஸ் கட்சியின் துண்டை கழுத்தில் அணிந்தவாறு வருகை தந்தனர். நாடாளுமன்றத் தேர்தல் வேட்பு மனு தாக்கல் இன்று முதல் துவங்கி உள்ள நிலையில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலகத்திற்கு வேட்பாளரை தவிர்த்து யாரும் கட்சி துண்டு அணிந்து வரக்கூடாது என்று விதிமுறை உள்ளது.மேலும் வாகனங்களில் கட்சி கொடியை பயன்படுத்தக் கூடாது என்ற விதிமுறைகள் உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியினர் பயன்படுத்தினர். பின்னர் பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் காரில் இருந்த கட்சி கொடியை பயன்படுத்தக் கூடாது கழட்டுமாறு அறிவுறுத்தினர். இதையடுத்து காரில் இருந்த கட்சிக்கொடி அகற்றப்பட்டது. தேசியக்கொடி போன்று காங்கிரஸ் கட்சியின் கட்சிக்கொடி இருந்ததால் அதிகாரிகள் என்ற குழப்பத்தில் வாகனத்தை உள்ளே விட்டு விட்டதாக காவல்துறையினர் தரப்பில் விளக்கம் அளித்துள்ளனர்.