(Source: ECI/ABP News/ABP Majha)
ஓசூரில் ஓட்டலில் காவலாளியை கொன்று பணம் திருடிய சிறுவன் உட்பட 3 பேர் கைது
ஒரூர் பகுதியில் ஓட்டல் காவலாளி கொலை வழக்கில் சிறுவன் உள்பட 3 கொள்ளையர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஏஎஸ்டிசி அட்கோ பகுதியில் தனியார் ஓட்டல் இயங்கி வருகிறது. இதில், திருவண்ணாமலை மாவட்டம் போளூரை சேர்ந்த தாமோதரன் (60) என்பவர் காவலாளியாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த 26 ஆம் தேதி ஓட்டலின் மேற்கூரையை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் கல்லா பெட்டியில் இருந்த பணத்தை திருடிவிட்டு, காவலாளி தாமோதரனை குத்திக்கொலை செய்து விட்டு தப்பியோடி விட்டனர். இது குறித்து, ஓசூர் மாநகர காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி அதனை வைத்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், ஆணைக்கல் பகுதியை சேர்ந்த அப்ரித் (23), மத்திகிரி பகுதியை சேர்ந்த தோஷிப் (20), மற்றும் 16 வயது சிறுவன் ஆகியோர் தனியார் ஓட்டல் காவலாளியின் கொலை சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதில், அப்ரித் மீது ஓசூர், மத்திகிரி உள்ளிட்ட காவல் நிலையங்களில் வழிப்பறி, கொள்ளை, திருட்டு போன்ற வழக்குகள் உள்ளன. இதனையடுத்து, ஓசூர் நகர காவல்நிலைய ஆய்வாளர் விஜயகுமார் தலைமையிலான காவலர்கள் அப்ரித் தோஷிப் மற்றும் சிறுவன் ஆகியோர்களை கைது செய்து விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில், அப்ரித், தோஷிப், 16 வயது சிறுவன் ஆகியோர் கடந்த 26 ஆம் தேதி கர்நாடக மாநிலம் பெங்களூரில் தங்கி உள்ளனர். இந்நிலையில், கையில் இருந்த பணம் முழுவதும் செலவாகி விட்டதால், கொள்ளையடிக்க திட்டமிட்டனர்.அதன்படி, அங்கிருந்து கிளம்பி ஓசூர் நோக்கி வந்துள்ளனர் அப்போது சாலையோரம் உள்ள ஓட்டலில் திருட முடிவு செய்துள்ளனர். தொடர்ந்து, 16 வயது சிறுவனை வாசலில் காவலுக்கு நிற்க வைத்துவிட்டு ஓட்டலின் மேற்கூரை பிரித்து அப்ரித், தோஷிப் உள்ளே சென்றுள்ளனர். அப்போது அங்கிருந்த சிசிடிவி கேமரா ஓயரை பிடிங்கி விட்ட அவர்கள் கல்லாவில் இருந்த பணத்தை திருட முயன்றனர். ஆனால் அதனை எடுக்க முடியாததால் அருகே இருந்த கத்தியை வைத்து நெம்பினர்.
அப்போது, கல்லா அருகே படுத்திருந்த காவலாளி சத்தம் கேட்டு எழுந்து விடுவார் என எண்ணி அங்கிருந்த கத்தியால் அப்ரித், காவலாளி தாமோதரனை குத்திக்கொலை செய்துள்ளான். அதனைத்தொடர்ந்து, கல்லாவை உடைத்து அதில் இருந்த 79,500 ரூபாயை கொள்ளையடித்துவிட்டு தப்பிச்சென்றது விசாரணையில் தெரிய வந்தது. விசாரணைக்கு பின்னர் 3 நபர்களையும் கோர்ட்டில் ஆஜர்படுத்திய காவல்துறையினர் அம்ரித், தோஷிப், ஆகியோரை கிருஷ்ணகிரி கிளை சிறையிலும், 16 வயது சிறுவனை சேலம் சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும் அடைத்தனர். ஓட்டலில் நகை பணம் கொல்லை அடிக்க சென்ற இடத்தில் காவலாளி கத்திவிடுவாரோ என பயந்து காவலாளியை கத்தியால் குத்தியால் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.