கிருஷ்ணகிரி : மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு முதியவர்கள் இருவர் தற்கொலை முயற்சி.. என்ன நடந்தது?
தங்களுக்கு சொந்தமான வீடு மற்றும் நிலத்தை உறவினர்கள் அபகரித்துக் கொண்டதாக வயதான தம்பதி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர்
தமிழகத்தில் கொரோனா பெரும்தொற்று காரணமாக வாரம் தோறும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நோய் தொற்று பரவல் காரணமாக நிறுத்தப்பட்டது. இதனால் பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை மனுவாக எழுதி ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்த பெட்டியில் போட்டு வந்தனர். இந்த நிலையில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில், இன்று முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும் என அரசு அறிவித்தது.
இதைத்தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஜெயச்சந்திர பானு ரெட்டி தலைமையில் நடைபெற்றது. இதில் அனைத்து அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமான பொதுமக்கள் தங்களது நீண்ட நாள் தீர்க்கப்படாமல் உள்ள பிரச்சனைகள் மற்றும் குடிநீர் சாலை பட்டா போன்ற கோரிக்கைகளை முன்வைத்து மனுவாக வழங்கினர்.
இவற்றைப் பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் விரைவாக தங்களது பணி மீது உரிய விசாரணை நடத்தி தகுதியின் அடிப்படையில் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என உறுதியளித்தார். இன்று முதல் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும் என அரசு அறிவிப்பை அடுத்து ஏராளமான பொதுமக்கள் காலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து மனுக்களை மாவட்ட ஆட்சியர் பெற்றார்.
அதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த இருவர் திடீரென தீக்குளிக்க முயற்சி செய்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவல்துறையினர் அவர்களிடம் இருந்து மண்ணெண்னை பாட்டிலை பிடுங்கி வீசினர். அதன்பிறகு அவர்கள் மீது தண்ணீர் ஊற்றினார். அதனைத்தொடர்ந்து அவர்களிடம் காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டனர். இந்த விசாரணையில் கிருஷ்ணகிரி அருகே சொக்காடி கிராமத்தைச் சார்ந்த சுப்பிரமணி மற்றும் அவரது மனைவி நாகம்மாள் வயதான தம்பதியரான இவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் மனு அளிக்க வந்தனர். மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெயை எடுத்து இருவர் மீது ஊற்றி தற்கொலை செய்துகொள்ள முயற்சி செய்தோம் என்றனர்
தங்களது கிராமமான சோக்காடி பகுதியில் தங்களுக்கு சொந்தமான வீடு மற்றும் நிலம் உள்ளது. அந்த இடத்தை அவர்களது உறவினர்கள் வெங்கடாசலம், சிவன் சின்னப்பிள்ளை, நடேசன், ஆகியோர் தங்களுக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து இருப்பதாக கூறி இவர்களது வீட்டையும் 5 சென்ட் நிலத்தையும் கொண்டு அடியாட்களை வைத்து மிரட்டுவதாகவும் எனவே தங்களது வீடு நிலத்தை இழந்து அனாதைகளாக நிற்பதாகவும் தெரிவித்து மாவட்ட ஆட்சியர் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.