(Source: ECI/ABP News/ABP Majha)
பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பனின் சகோதரர் மீது கடத்தல் புகார்..
கடத்தப்பட்டதாக கூறப்பட்ட பவித்ராவுடன் கோபி, காதல் திருமணம் செய்து கொண்டதாக கூறி, சேலம் மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் நேற்று மாலை தஞ்சமடைந்தனர்.
பாரா ஒலிம்பிக்கில் கடந்த 2016 ஆம் ஆண்டு உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கம் வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்த தங்க மாரியப்பன் தம்பி இளம் பெண்ணை கடத்திச் சென்று பெங்களூருவில் தங்க வைத்திருப்பதாக, நேற்று காலை போலீசில் புகார் தெரிவிக்கப்பட்ட நிலையில், அந்த மாணவியுடன் பாதுகாப்பு கேட்டு, சேலம் எஸ்.பி. ஆபிசில் தஞ்சமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம், காடையாம்பட்டி அருகே பெரிய வடகம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன். பாராலிம்பிக் போட்டியில் பங்கேற்று உயரம் தாண்டும் போட்டியில் தங்கம் வென்ற மாரியப்பன், தற்போது பெங்களூருவில் வசித்து வருகிறார். இவரது தம்பி கோபி ( 24 ) இவர் மீது, நேற்று காலை தீவட்டிப்பட்டி காவல்நிலையத்தில் பெரியவடகம்பட்டியைச் சேர்ந்த அண்ணாமலை என்பவர் புகார் தெரிவித்தார். அதில், விவசாய கூலி வேலை செய்துவரும் எனக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். மூத்த மகள் பவித்ரா ( 20 ) சேலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வருகிறார். கடந்த 27-ஆம் தேதி காலையில் இருந்து பவித்ராவை காணவில்லை. பல்வேறு இடங்களிலும் தேடியும் கிடைக்கவில்லை. எங்கள் ஊரைச் சேர்ந்த மாரியப்பனின் தம்பி கோபி, அவரை கடத்தி சென்று விட்டார். பெங்களூருவில் உள்ள மாரியப்பன் வீட்டில் பவித்ராவை அடைத்து வைத்துள்ளனர்.
மாரியப்பனின் மனைவி ரோஜாவின் பாதுகாப்பில் எனது மகளை வைத்துள்ளனர் . இதற்கு ஜெகநாதன், ராகுல்காந்தி, கிரிநாத், வசந்த் ஆகியோர் உடந்தையாக உள்ளனர். அவர்களிடமிருந்து மகளை மீட்டு கொடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். இதன் பேரில், தீவட்டிப்பட்டி இன்ஸ்பெக்டர் ஆனந்த குமார் விசாரித்து வந்தார்.
இந்நிலையில், கடத்தப்பட்டதாக கூறப்பட்ட பவித்ராவுடன் கோபி, காதல் திருமணம் செய்து கொண்டதாக கூறி, சேலம் மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் நேற்று மாலை தஞ்சமடைந்தனர். அவர்களிடம் அங்கிருந்த போலீசார் விசாரித்த பின்னர், ஓமலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, மகளிர் போலீசார் இரு வீட்டாரையும் அழைத்து சமரச் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். பாரா ஒலிம்பிக்கில் 2016 ஆம் ஆண்டு தங்கமும், 2020 ஆம் ஆண்டு டோக்கியோவில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் பென்ற மாரியப்பன் சகோதரர் மீது புகார் வந்துள்ளதால் சேலத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.