Katchatheevu Issue: கச்சத்தீவு விவகாரம் இந்திரா காந்தி செய்த ராஜதந்திர நடவடிக்கை - காங்கிரஸ் புதிய விளக்கம்
கச்சத்தீவுக்கு மாற்றாக மன்னார் வளைகுடாவில் இலங்கைக்கு சொந்தமான கடல் நிலத்தை பெற்றோம் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செய்தி தொடர்பாளர் பி.வி.செந்தில் பேட்டி.
நாடு முழுவதும் கச்சத்தீவு பிரச்சனை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், சேலத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செய்தி தொடர்பாளர் பி.வி.செந்தில், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், "கச்சத்தீவை இலங்கைக்கு காங்கிரஸ் மற்றும் திமுக தாரை வார்த்து விட்டது. அதை மீட்பதே எங்கள் இலக்கு என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கச்சத்தீவு 285 ஏக்கர் கொண்ட மணல் திட்டு. ஒரு சொட்டு தண்ணீர் கூட அங்கு குடிக்க கிடைக்காது. 1901 ஆம் ஆண்டில் இருந்து பிரிட்டிஷ் அரசுதான் அந்த தீவை நிர்வாகம் செய்து வந்தது. பின்னர் இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகும் இந்தியா, இலங்கை மீனவர்கள் அதை பயன்படுத்தி வந்தனர். மீன் வலைகளை காய வைப்பதற்காகவும் அங்குள்ள தேவாலயத்தில் ஆண்டுக்கு ஒருமுறை விழா நடத்துவதற்காகவும் கச்சத்தீவு பயன்படுத்தப்பட்டு வந்தது.
இந்த நிலையில் 1974 ஆம் ஆண்டு அப்போதைய பாரதப் பிரதமர் இந்திரா காந்தி இலங்கை மற்றும் இந்திய கடல் எல்லையை வரையறுக்க முற்பட்டார். அதாவது வங்களா விரிகுடா மற்றும் மன்னார் வளைகுடா கடல் பகுதியை வரையறை செய்ய வேண்டும் என்று ஒரு திட்டத்தை முன்னெடுத்தார். அப்போதுதான் இலங்கை அரசு கச்சத்தீவு விவகாரத்தை முன் வைத்தது. இதையடுத்து இரு நாடுகளும் ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்டனர். சும்மா ஒன்றும் இந்திய அரசு கச்சத்தீவை இலங்கைக்கு கொடுக்கவில்லை. ஒன்றைக் கொடுத்து ஒன்றை பெறுவது தான் உடன்படிக்கை. அதன்படி 1974 ஆம் ஆண்டில் இந்திய நாட்டின் நலனை கருத்தில் கொண்டு, தமிழக மக்களுக்கும் மீனவர்களுக்கும் எது பலனளிக்கும் என்ற தொலைநோக்கில் கச்சத்தீவானது இலங்கைக்கு கொடுக்கப்பட்டது. அதற்கு மாறாக 1976 ஆம் ஆண்டு மார்ச் 23 ஆம் தேதி மன்னார் வளைகுடா - வங்காள விரிகுடா கடல் எல்லை வரையறை செய்யப்பட்டு, wadge bank என்ற பகுதியை இந்தியா எடுத்துக் கொண்டது. அந்த பகுதி கிட்டத்தட்ட 10,000 சதுர கிலோமீட்டர் கொண்ட கடல் நிலப்பரப்பு. கன்னியாகுமரியின் தெற்கே கடல் பகுதியை கடலுக்குள் இந்திய அரசால் மூழ்கி எடுத்துக் கொள்ளப்பட்டது.
அது இன்று 25 லட்சம் ஏக்கர் பரப்பளவு கொண்ட கடல் பகுதியாக உள்ளது. வெறும் 285 ஏக்கர் நிலத்தை கொடுத்துவிட்டு பத்தாயிரம் சதுர கிலோமீட்டர் கொண்ட 25 லட்சம் ஏக்கரை கடலில் இந்தியா எடுத்துள்ளது. இதுதான் அன்றைய பாரத பிரதமர் இந்திரா காந்தி செய்த ராஜதந்திர நடவடிக்கை. அந்த கடல் நில பரப்பில் 60க்கும் மேற்பட்ட அரிய வகை மீன் இனங்கள் உள்ளன. அந்த பகுதியை பயன்படுத்தி தான் கன்னியாகுமரி, குளச்சல் மற்றும் கேரள மாநில மீனவர்கள் பல லட்சம் பேர் பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில் அப்போதைய பாரதப் பிரதமர் இந்திரா காந்தியின் நீடித்த நிலையான முடிவை கொச்சைப்படுத்தும் வகையில் தற்போதைய பாரத பிரதமர் நரேந்திர மோடியும் பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலையும் பேசி வருகிறார்கள். அவர்களது பேச்சில் உண்மை இல்லை. தேர்தல் நேரத்தில் பாரதிய ஜனதா கட்சி நாடகம் நடத்துகிறது. அண்டை நாடுகளுடன் நட்புறவை மேம்படுத்த வேண்டும் என்பதற்காகவே இந்திரா காந்தி இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட்டார் என்பதுதான் உண்மை" என்று தெரிவித்தார்.