Independence Day: சேலம் மாவட்ட 77வது சுதந்திர தின விழா கொண்டாட்டம் - கௌரவிக்கப்பட்ட பெண் ஓட்டுநர்
சிறப்பாகப் பணிபுரிந்துவரும் 94 காவல்துறையினர் உட்பட 305 அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் கார்மேகம் வழங்கினார்.
இந்திய திருநாட்டின் 77வது சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தேசியக் கொடியை ஏற்றி வைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து மாவட்டத்தில் சிறப்பாகப் பணிபுரிந்துவரும் 94 காவல்துறையினர் உட்பட 305 அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் கார்மேகம் வழங்கினார்.
மேலும், வேளாண்மைத் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் 47 பயனாளிகளுக்கு ரூ.50.45 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்கள். குறிப்பாக, டிரான்ஸ்பார்மரில் மின்சாரம் தாக்கி உயிருக்குப் போராடிய ஊழியரை துரிதமாகச் செயல்பட்டு உயிரைக் காப்பாற்றிய தனியார் பேருந்து ஓட்டுநர், சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பெண் ஓட்டுநராக எவ்வித விபத்துக்களும் ஏற்படுத்தாமல் சிறப்பாகப் பணியாற்றி வரும் கனரக வாகன ஓட்டுநரை கௌரவித்துள்ளனர். பின்னர் பல்வேறு அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவிகள் கண் கவர் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. சேலம் மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா தலைமையில் நடைபெற்ற சுதந்திர தின விழா நிகழ்ச்சியில், சேலம் சரக டிஐஜி ராஜேஸ்வரி, சேலம் மாநகர காவல் ஆணையாளர் விஜயகுமாரி, சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் கபிலன், சேலம் மாநகர துணை காவல் ஆணையாளர் கௌதம் கோயல் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தேசத்திற்காக உயிர் துறந்த ராணுவ வீரர்கள் நினைவுச் சின்னத்திற்கு மலர் வளையம் வைத்து சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் மரியாதை செலுத்தினார்.
இதேபோல் சேலம் மாநகராட்சி மைய அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் தேசியக்கொடியனை ஏற்றி வைத்தார். பின்னர் காவல்துறையினரின் மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் சேலம் மாநகராட்சியில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்களுக்கு நற்சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சேலம் மாநகர ஆணையாளர் பாலச்சந்தர், சேலம் மாநகராட்சியின் துணை மேயர் சாரதா தேவி, மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் மாநகராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடத்த உத்தரவிடப்பட்டது. அதன்படி சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. சுதந்திர தினத்தை முன்னிட்டு சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான கடைகளுக்கும் இன்று ஒரு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.