HBD Periyar: ‘சமத்துவம், சகோதரத்துவம், சம தர்மம்' .. பெரியார் பிறந்தநாளில் உறுதிமொழி எடுத்த அமைச்சர் உதயநிதி..!
பெரியாரின் 145வது பிறந்த நாளை முன்னிட்டு சேலத்தில் அவரது திருவுருவ சிலைக்கு அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் மற்றும் முத்துசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பெரியாரின் 145வது பிறந்த நாளை முன்னிட்டு சேலத்தில் அவரது திருவுருவ சிலைக்கு அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் மற்றும் முத்துசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பகுத்தறிவு தந்தை பெரியாரின் பிறந்த நாள் விழா ஆண்டுதோறும் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் சமூக நீதி நாளாகவும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இன்று பெரியாரின் 145வது பிறந்த நாள் விழா கொண்டாடப்படுகிறது. வேலூரில் பெரியார், அண்ணா பிறந்தநாள் விழா, திமுக பவள விழா என முப்பெரும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.
இதனிடையே சேலத்தில் ஆட்சியர் அலுவலகம் அருகே அமைந்துள்ள பெரியாரின் திருவுருவ சிலைக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. இதில் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி ஆகியோர் கலந்து கொண்டு பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் சமூக நீதி நாள் உறுதி மொழியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாசிக்க நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.
அப்போது, “பிறப்புக்கும் எல்லா உயிர்க்கும் என்ற அன்பு நெறியும், யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பண்பு நெறியும் எனது வாழ்வியல் வழிமுறையாக கடைபிடிப்பேன். சுயமரியாதை ஆளுமைத் திறனும், பகுத்தறிவு கூர்மை பார்வையும் கொண்டதாக என்னுடைய செயல்பாடுகள் அமையும். சமத்துவம், சகோதரத்துவம், சம தர்மம் ஆகிய கொள்கைகளுக்காக என்னையே நான் ஒப்படைத்துக் கொள்வேன். மானுடப்பற்றும், மனிதாபிமானமும் ஒன்றே எனது இரத்த ஓட்டமாக அமையும். சமூக நீதியையே அடித்தளமாக கொண்ட சமுதாயம் அமைக்கும் எனது பயணம் தொடர இந்த நாளில் நான் உறுதியேற்கிறேன்” என உதயநிதி சொல்ல மற்றவர்கள் திரும்ப கூறினர்.
இந்நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம், சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், மேயர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.