(Source: ECI/ABP News/ABP Majha)
ஜெயலலிதாவின் ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் சேலத்தில் கைது - காரணம் என்ன..?
எனக்கும், எனது குழந்தைக்கும் உயிருக்கு பாதுகாப்பு இல்லை நடவடிக்கை எடுக்கும்படி புகார் கொடுத்ததன் பெயரில் ஜலகண்டாபுரம் காவல் நிலையத்தில் வழக்குபதிவு செய்து பழனிவேல் கைது.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கொடநாட்டில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் சசிகலாவிற்கு சொந்தமான தேயிலை எஸ்டேட் உள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23 ஆம் தேதி நள்ளிரவு, எஸ்டேட்டுக்கு உள்நுழைந்த மர்ம கும்பல், அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ஓம்பகதூரை கொலை செய்துவிட்டு, பங்களாவுக்குள் சென்று அங்குள்ள பாறைகளை உடைத்து பல்வேறு முக்கிய ஆவணங்களை கொள்ளையடித்து சென்றனர். இச்சம்பவத்தில் ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் கனகராஜ் உட்பட 11 பேர் ஈடுபட்டதை காவல்துறையினர் விசாரணையில் கண்டுபிடித்தனர்.
அச்சம்பவம் நடந்த அடுத்த சில நாட்களில் ஆத்தூர் அருகில் உள்ள சந்தனகிரி என்ற இடத்தில் நடந்த விபத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் ஜெயலலிதாவின் முன்னாள் டிரைவர் கனகராஜ் உயிரிழந்தார். மற்றொரு முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட சயான், அவரது மனைவி, மகளுடன் கேரளாவில் காரில் செல்லும்போது ஏற்பட்ட விபத்தில் சயானின் மனைவி மற்றும் மகள் உயிரிழந்தனர். சயான் படுகாயத்துடன் உயிர் தப்பினார். இதைத் தொடர்ந்து சயான் உட்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கு ஊட்டியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சேலம் மாவட்டம் ஆத்தூரில் சாலை விபத்தில் உயிரிழந்த கனகராஜின் மனைவி கலைவாணி தனது கணவர் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார். இதனையடுத்து ஐந்து தனிப்படை அமைக்கப்பட்ட விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் கனகராஜின் மரணத்தில் அவரது சகோதரர் தனபாலுக்கு தொடர்புள்ளதாக காவல்துறையினர் கைது செய்து ஊட்டி கிளை சிறையில் அடைத்தனர். இதன்பின் ஒரு வாரத்திற்கு முன்னர் தனபால் நிபந்தனை ஜாமினில் வெளியே வந்துள்ளார்.
இந்த நிலையில் கனகராஜன் மனைவி கலைவாணி சேலம் ஜலகண்டாபுரம் காவல் நிலையத்தில் கனகராஜின் சகோதரர் பழனிவேல் என்பவர் மீது புகார் ஒன்றை அளித்துள்ளார். இதன் அடிப்படையில் பழனிவேல் கைது செய்யப்பட்டுள்ளார். கனகராஜ் இறந்துவிட்ட நிலையில் அவரது பெயரில் உள்ள நிலம் ஜலகண்டாபுரம் அருகே பணிகனூரில் உள்ளதால் அதை விற்று தருவதாக கூறி, கணவனின் சகோதரர் பழனிவேல் என்பவர் வர சொல்லியுள்ளார். அப்போது கனகராஜன் மனைவி கலைவாணி தாரமங்கலம் சென்றுள்ளார். அங்கிருந்து பழனிவேல் வீட்டுக்கு வரும்படியும் கனகராஜ் குழந்தைகளை அவரது பெற்றோர் பார்க்க விருப்பப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். அதற்கு கலைவாணி மறுத்துவிட்ட நிலையில் கனகராஜ் நிலத்தை விலை பேசி விற்றுகொள் என்று கூறிவிட்டு, நிலத்தை வாங்குபவர்களிடம் வாங்காத அளவிற்கு பிரச்சினை செய்து விட்டதாகவும், இது தொடர்பாக பழனிவேல் இடம் கலைவாணி கேட்டபோது, நீ கொடுத்த புகாரால் தனது சகோதரர் தனபால் சிறைக்கு சென்று உள்ளார். இதுவரை 4 லட்சம் வரை செலவாகியுள்ளது. எனவே, கொடுத்த வழக்கை திரும்பப் பெற்றால் இடத்தை விற்றுதர முடியும், எங்கும் செல்லமுடியாது என்று தகாத வார்த்தையில் திட்டியும், இதுதொடர்பாக காவல்துறையிடம் தெரிவிக்கக் கூடாது என்று மிரட்டியதாகவும் தெரிவித்துள்ளார். அப்போது அங்கிருந்து தப்பி ஓட முயன்றபோது அசிங்கப்படுத்தி, தவறாக பேசியதாக கூறியுள்ளார். எனவே எனக்கும், எனது குழந்தைக்கும் உயிருக்கு பாதுகாப்பு இல்லை நடவடிக்கை எடுக்கும்படி புகார் கொடுத்ததன் பெயரில் ஜலகண்டாபுரம் காவல் நிலையத்தில் 4 பிரிவின் கீழ் வழக்குபதிவு செய்து பழனிவேல் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்