மேலும் அறிய
தருமபுரி நகர்மன்ற கூட்டத்தில் திமுக உறுப்பினர்கள் - அதிகாரி வாக்குவாதம்
அப்பொழுது நகர் நல அலுவலர் ராஜ ரத்தினம் குறுக்கிட்டு பேசும்போது, திமுக உறுப்பினருக்கும், அலுவலருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

வாக்குவாதம்
தருமபுரி நகர்மன்ற கூட்டத்தில் அடிப்படை வசதிகளை செய்து தரவில்லை என திமுக உறுப்பினர்கள் சரமாரியாக புகார் தெரிவித்தனர்.
தருமபுரி நகராட்சியில் நகர்மன்ற சாதாரண கூட்டம் திமுகவை சேர்ந்த நகர்மன்ற தலைவர் லட்சுமி தலைமையில் நடைபெற்றது. இதில் அதிமுக, திமுக நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு தருமபுரி நகராட்சியில் உள்ள 33 வார்டுகளில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்து பேசினார். அப்பொழுது அதிமுக உறுப்பினர்கள் சார்பில் பல்வேறு புகார்கள் நகர் மன்றத்தில் தெரிவித்தனர். மேலும் நகராட்சிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதியான சாலை, கழிவுநீர், கால்வாய் கால்வாய், மின்விளக்கு உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை செய்து தரவில்லை என திமுக உறுப்பினர்களே, திமுக நகர மன்ற தலைவர் மீது சரமாரியாக குற்றச்சாட்டுகளை தெரிவித்தனர்.
மேலும் சந்தைப்பேட்டை பகுதியில் சாலை மோசமாக இருக்கின்ற இடத்தில் குழிகளுக்கு மண்ணை கொட்ட வேண்டும், இல்லையென்றால் புதிதாக சாலை அமைத்து தர வேண்டும். இதற்கு பலமுறை புகார் தெரிவித்தும் நகர்மன்றத்தில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என உறுப்பினர் பேசினார். அப்பொழுது நகர் நல அலுவலர் ராஜ ரத்தினம் குறுக்கிட்டு பேசும்போது, திமுக உறுப்பினருக்கும், அலுவலருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. அப்பொழுது இருவரும் ஒருவருக்கு ஒருவர் ஒருமையில் பேசினர். இதனால் நகர் மன்ற கூட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. நகர் மன்ற கூட்டத்தில் ஆளுங்கட்சியை எதிர்த்து எதிர்க்கட்சியினர் சரமாரியாக புகார் தெரிவித்து வருகின்ற நிலையில், தருமபுரி நகர மன்ற கூட்டத்தில் மட்டும், ஒவ்வொரு கூட்டத்தின் போதும் திமுக உறுப்பினர்களே திமுக நகர மன்ற தலைவர் மீது அடுக்கடுக்கான புகார்களை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
செய்தி - 2
தருமபுரி போக்குவரத்து காவல் துறைக்கு, தனியார் நிதி நிறுவனம் சார்பில் சுமார் ரூ.4.25 லட்சம் மதிப்பில் 50 இரும்பு தடுப்புகள் நன்கொடையாக வழங்கல்.
தருமபுரி நகர் முழுவதும் பல்வேறு இடங்களில் போக்குவரத்து காவலர்கள் போக்குவரத்து விதிகளை சரி செய்யவும், விபத்துக்களை தடுக்கவும் இரும்பு தடுப்புகளை வைத்து போக்குவரத்தை சீர் செய்து வருகின்றனர். இதில் மக்கள் அதிகமாக நடமாடும் இடங்களில், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்ற இடங்களில், நான்கு சக்கர வாகனங்களை அனுமதிக்காத அளவிற்கு இரும்பு தடுப்புகள் வைக்கப்பட்டு வருகிறது. இதற்கு காவல் துறையினருக்கு பல்வேறு தரப்புகளில் இருந்து இரும்பு தடுப்புகளை நன்கொடையாக வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் தருமபுரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தனியார் நிதி நிறுவனம் சார்பில் தருமபுரி மாவட்ட காவல் துறைக்கு விபத்துக்களை தடுப்பதற்கு தேவையான 50 இரும்பு தடுப்புகள், ரூ.4.25 லட்சம் மதிப்பில் நன்கொடையாக வழங்கியுள்ளனர். இதனை தனியார் நிதி நிறுவன ஊழியர்கள், 50 இரும்பு தடுப்புகளையும் தருமபுரி நான்கு ரோட்டில் உள்ள போக்குவரத்து காவல் நிலையத்தில் உள்ள காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து இரும்பு தடுப்புகளை பெற்றுக் கொண்ட காவலர்கள், தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் நன்றி தெரிவித்து, பொன்னாடை அணிவித்து மரியாதை செய்தனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















