அரூரில் மின் கசிவால் பற்றி எரிந்த பைக் ஷோரூம்... எரிந்து சாம்பலான புதிய பைக்குகள்..!
அரூரில் இருசக்கர வாகன ஷோரூமில் மின் கசிவு காரணமாக தீ விபத்து - 7 புதிய வண்டிகள், உதிரிபாகங்கள் உள்ளிட்ட ரூ.20 இலட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்.
தருமபுரி மாவட்டம் அரூர் ரவுண்டானாவில், சேலம் பிரதான சாலையில் உள்ள தரைத்தளத்துடன் கூடிய, மூன்றடுக்கு கட்டிடத்தில், தரைதளம் மற்றும் முதல் தளத்தில் இருசக்கர வாகன விற்பனை மற்றும் உதிரி பாகங்கள், சர்வீஸ் ஷோரூம் உள்ளது. இரண்டாம் தளத்தில், தனியார் நிதி நிறுவனம், மூன்றாம் தளத்தில் டிஎன்பிஎஸ்சி பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இதில் மொரப்பூர் பகுதியை சேர்ந்த மாதையன் என்பவர் இந்த இருசக்கர விற்பனையகத்தை நடத்தி வருகிறார். நேற்று இரவு வழக்கம் போல், வேலையை முடித்துக் கொண்டு பணியாளர்கள் சென்றுள்ளனர். இந்நிலையில் மின் கசிவு ஏற்பட்டு, தீ விபத்து ஏற்றப்பட்டுள்ளது. அப்பொழுது பூட்டிய கட்டிடத்தில் இருந்து புகை வெளியே வந்துள்ளது. இதனையறிந்த இருசக்கர வாகன விற்பனை நிலைய ஊழியர்கள், கதவை திறக்க முயற்சித்துள்ளனர். ஆனால் திறக்க முடியாததால், அரூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கதவை திறந்தனர். அப்பொழுது தீ பரவி, கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது. தொடர்ந்து மூன்று அடுக்குமாடி கட்டடங்களில் வேகமாக தீ பரவ தொடங்கியது. ஷோரூமிற்கு மேல்மாடியில் சிக்கியிருந்த தனியார் நிதி நிறுவன பணியாளர்கள் 5 பேரை தீயணைப்பு மீட்புப்படை வீரர்கள் பாதுகாப்பாக மீட்டனர். ஆனால் தீ மலமலவென பரவி புதிய இருசக்கர வாகனங்கள், உதிரி பாகங்கள், கணினி உள்ளிட்டவற்றில் பரவி எரிந்தது. இதனையறிந்த தீயணைப்பு வீரர்கள் அருகில் உள்ள பாப்பிரெட்டிபட்டி, ஊத்தங்கரை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்து கூடுதல், தீயணைப்பு வாகனங்களை வரவழைத்து தீயை அணைக்க முயற்சித்தனர். சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்க போராடினர். ஆனால் ஷோரூமில் இருந்த அனைத்தும் எரிந்து சாம்பலானது. இந்த தீ விபத்தில், விலையுயர்ந்த 7 புதிய இருசக்கர வாகனங்கள், உதிரி பாகங்கள், கணிணி, உள்ளிட்ட ரூ.20 இலட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானது.
மேலும் தீப்பற்றி எரிந்த ஷோரூம் அருகில் உள்ள வீடுகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். அதேபோல், தீ விபத்து நடந்த பகுதியில் அருகே இருந்த பெட்ரோல் விற்பனை நிலையம் பாதுகாப்பு கருதி தற்காலிகமாக மூடப்பட்டது. அரூரில் இருசக்கர வாகன ஷோரூமில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக அரூர் சேலம் பிரதான சாலையில் சுமார் மூன்று மணி நேரம், நகரில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மேலும் போக்குவரத்து மாற்று பாதையில் திருப்பிவிடப்பட்டது. இந்த தீ விபத்தால், அரூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்பட்டது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்