மேலும் அறிய
அரசு வீடு வழங்க லஞ்சம்; தகாத வார்த்தையில் திட்டிய ஊராட்சி மன்ற தலைவர் - மாற்றுத்திறனாளி தற்கொலை
லஞ்சம் கேட்டது மட்டுமல்லாமல் அவதூறான வார்த்தைகளால் திட்டியதால் மன உளைச்சல் ஏற்பட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட மாற்றுத்திறனாளி.

குடும்பத்தினர் சாலைமறியல்
அரூர் அருகே அரசு வீடு வழங்க லஞ்சம் கொடுக்காததால், ஊராட்சி மன்ற தலைவர் தகாத வார்த்தைகளால் திட்டியதாக மாற்றுத்திறனாளி தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி மாவட்டம் அரூர் அருகே கொக்கரப்பட்டி கிராமத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி பழனிவேல், (35) சுகுனா தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பழனிவேல், வசிக்கும் வீடு சேதம் அடைந்துள்ளது. இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு வீடு வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்து தரப்படும் என்று உறுதியளித்துள்ளார். இதனால் சேதமடைந்த வீட்டில் குடும்பத்தோடு வசித்து வந்த பழனிவேல், கொக்கரப்பட்டி பஞ்சாயத்து தலைவர் மணிமாறனிடம் தங்களுக்கு வீடு ஒதுக்கீடு செய்யுமாறு கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அரசு தொகுப்பு வீடு வழங்க லஞ்சம் கொடுத்தால் மட்டுமே வீடு ஒதுக்கீடு செய்யப்படும் என்று அப்போது கூறப்பட்டதாக தெரிகிறது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக கொக்கரப்பட்டி பகுதியில் தொடர் மழை பெய்ததால், சேதமடைந்த வீட்டில் தங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பழனிவேல் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் அந்த பகுதியில் உள்ள நியாய விலை கடை வளாகத்தில் தங்கியுள்ளார். இதுபற்றி தகவலறிந்த கிராம நிர்வாக அலுவலர் அங்கு சென்று, பழனிவேல் மற்றும் குடும்பத்தினரை சமாதானப்படுத்தியுள்ளார். இதையடுத்து குடும்பத்தினருடன் வீட்டுக்கு திரும்பிய
பழனிவேல் சேதமடைந்த வீட்டை சீரமைக்க முடியவில்லையே என்று மன வேதனையில்
இருந்துள்ளார். அப்பொழுது மீண்டும் பஞ்சாயத்து தலைவர் மணிமாறனிடம் வீடு வழங்க வலியுறுத்தியதாக தெரிகிறத. அதற்கு பஞ்சாயத்து தலைவர் பழனிவேலை தரக்குறைவான வார்த்தைகளால் பேசியதாகவும், அதனால் மன உளைச்சல் ஏற்பட்டு தனது வீட்டின் மேற்கூரையில் தூக்கிட்டு மாற்றுத் திறனாளி பழனிவேல் தற்கொலை செய்து கொண்டார்.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்த கோபிநாதம்பட்டி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பழனிவேலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அரசு கொடுக்கும் தொகுப்பு வீட்டை மக்களின் பயன்பாட்டிற்கு கொடுப்பதற்கு லஞ்சம் கேட்டது மட்டுமல்லாமல் அவதூறான வார்த்தைகளால் திட்டியதால் மன உளைச்சல் ஏற்பட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட மாற்றுத்திறனாளி பழனிவேலுக்கு நியாயம் கிடைக்க வேண்டி கொக்கராப்பட்டி பஞ்சாயத்து தலைவர் மணிமாறன், மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என அரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டும், ரவுண்டானாவில் அமர்ந்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் அமைதி பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனால் சுமார் 2 மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
அரசியல்
உலகம்
பொழுதுபோக்கு





















