Urban Local Body Election: தேர்தல் நேரத்தில் கூறிய ரகசியத்தை பயன்படுத்தி உதயநிதி நீட் தேர்வை ரத்து செய்யலாமே - பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சார பயணத்தை துவங்குவதற்கு முன்பாக பெரியசோரகையில் உள்ள சென்றாயப்பெருமாள் திருக்கோயிலில் இருந்து பிரசாரத்தை தொடங்குவது வழக்கம்.
சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதிக்குட்பட்ட வனவாசி பகுதியில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இதில் வனவாசி, ஜலகண்டாபுரம், நங்கவள்ளி பேரூராட்சிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தார்.
முன்னதாக, சேலம் நங்கவள்ளி அருகே பெரியசோரகை கிராமத்தில் உள்ள சென்றாயப்பெருமாள் திருக்கோவிலில் சாமி தரிசனம் செய்தார். குறிப்பாக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சார பயணத்தை தொடங்குவதற்கு முன்பாக பெரியசோரகையில் உள்ள சென்றாயப்பெருமாள் திருக்கோயிலில் இருந்து பிரசாரத்தஒ தொடக்குவது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதைத்தொடர்ந்து வேட்பாளர்கள் மத்தியில் உரையாற்றிய எடப்பாடி பழனிசாமி, ”ஸ்டாலின் வார்த்தை ஜாலங்கள் மூலம் மக்களை ஏமாற்றி வருகிறார். திமுக என்றாலே தில்லு முள்ளு செய்யக்கூடிய கட்சி என்பதால் அதிமுகவினர் விழிப்புடன் இருக்க வேண்டும் .சட்டப்பேரவைத் தேர்தலின்போது பொய்யான கவர்ச்சிகரமான திட்டத்தை அறிவித்து ஆட்சி அமைத்தனர்.
மக்களை ஏமாற்றி ஆட்சி அமைத்துவிட்டு ஆட்சிக்கு வந்தவுடன் மக்களை மறந்துவிடுவார்கள். திமுக ஆட்சி அமைந்த எட்டு மாதத்தில் என்ன திட்டத்தை நிறைவேற்றினார்கள்?. முதலமைச்சரின் சைக்கிள் பயணம், நடைபயிற்சி, டீக்கடையில் டீ குடிக்கும் காட்சிகளைத்தான் பார்க்க முடிகிறது; மக்களுக்கு நன்மை செய்யும் காட்சிகளை பார்க்க முடியவில்லை.
நீட் தேர்வை எதிர்கொள்ள கிராம பகுதி மாணவ, மாணவியருக்கு இருக்கும் சிரமத்தை கருத்தில் கொண்டு 7.5 சதவிகித உள் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இதன்மூலம் 574 பேர் அரசு மருத்துவக்கல்லூரியில் ஏழை எளிய மாணவர்கள் சேர்ந்துள்ளனர். அதிமுக ஆட்சி காலத்தில் கூட்டு குடிநீர் திட்டம், அனைத்து பகுதிகளுக்கும் பேருந்து வசதி, வறண்ட ஏரிகளை நிரப்பும் திட்டம் என பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பல திட்டங்கள் தற்போது முடக்கி வைக்கப்பட்டுள்ளன. எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் மட்டும் 15 பேர் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் 75 பேர் மருத்துவக்கல்லூரியில் சேர்ந்துள்ளனர். தேர்தல் நேரத்தில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என பொய்யான வாக்குறுதி கொடுத்தார்கள்.
உதயநிதி ஸ்டாலின் தேர்தல் நேரத்தில் கூறிய ரகசியத்தை பயன்படுத்தி நீட் தேர்வை ரத்து செய்யலாமே!!! ஏன் செய்யவில்லை. ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் நான் கொண்டு வந்த திட்டம் சிறந்த திட்டம் என்பதால் அதை பின் தொடர்கின்றனர். மக்கள் அதிமுகவிற்கு வாக்களிக்க தயாராக உள்ளனர், அதை வேட்பாளர்கள் முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்றார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்