அம்பேத்கர் பிறந்தநாள் விழா... எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் ராஜேந்திரன் சேலத்தில் மரியாதை
அம்பேத்கர் 135 வது பிறந்தநாள் முன்னிட்டு சேலத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

சட்டமாமேதை அம்பேத்கர் 135 வது பிறந்தநாள் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அம்பேத்கரின் திரு உருவசிலைகளுக்கு பல்வேறு தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக சேலம் அம்பேத்கர் சதுக்கம் பகுதியில் உள்ள அம்பேத்கர் உருவசிலைக்கு காலை முதலே அனைத்து கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

முன்னதாக, சேலம் அம்பேத்கர் சதுக்கத்தில் உள்ள அம்பேத்கரின் திரு உருவ சிலைக்கு சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம்.செல்வகணபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதைத் தொடர்ந்து, அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி அதிமுக கட்சியினர் 500க்கும் மேற்பட்டோருடன் வருகை தந்து அம்பேத்கர் உருவசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனிடைய அம்பேத்கரின் பொன்மொழிகளை கோஷங்களாக எழுப்பி மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் செம்மலை, சட்டமன்ற உறுப்பினர்கள், அதிமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

தொடர்ந்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி, பாரதிய ஜனதா கட்சி, காங்கிரஸ், தமிழ் மாநில காங்கிரஸ், தமிழக வெற்றிக் கழகம், நாம் தமிழர் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட பல கட்சிகள் மற்றும் அமைப்புகள் அம்பேத்கரின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இதன் காரணமாக சேலம் அம்பேத்கர் சதுக்கம் முழுவதும் காவல்துறையினர் பாதுகாப்பு அதிகளவில் போடப்பட்டுள்ளது. குறிப்பாக இவ்வழியாக செல்லும் வாகனங்கள் மாற்றுப் பாதையில் அனுப்பி வைக்கப்பட்டது.





















