சொத்துவரி, மின்கட்டணம், பால் விலை உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி சேலத்தில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்
சேலம் கன்னங்குறிச்சி பேரூராட்சியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் அதிமுகவின் கழக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செம்மலை கலந்துகொண்டு திமுக அரசை கண்டித்து கண்டன உரையாற்றினார்.
திமுக அரசின் 18 மாத ஆட்சியில் சொத்து வரி, மின் கட்டண உயர்வை கண்டித்தும், கட்டண உயர்வை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பேரூராட்சிகளில் இன்றைய தினம் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் தலைமை ஏற்கனவே அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இதனிடையே புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்பட 17 மாவட்டங்களில் இன்று நடைபெற இருந்த ஆர்ப்பாட்டங்கள் வரும் 16ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டன. இதையடுத்து எஞ்சிய மாவட்டங்களில் இன்றைய தினம் ஏற்கனவே அறிவித்தபடி கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது. அதன்படி சேலம் கன்னங்குறிச்சி பேரூராட்சியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் அதிமுகவின் கழக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செம்மலை கலந்துகொண்டு திமுக அரசை கண்டித்து கண்டன உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியது, "ஊர் முழுவதும் மக்கள் ஒன்று பேசிக்கொண்டு இருக்கிறார்கள். அது என்னவென்றால் எடப்பாடி பழனிசாமி மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும். எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி, இந்த ஆட்சியை ஒப்பிடுகையில் எவ்வளவோ பரவாயில்லை என்கிறார்கள். நிழலின் அருமை வெயில் வந்தால் தான் தெரியும், அதுபோன்றுதான் தமிழக மக்கள் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் நிழல் போன்று இருந்தது. ஆனால் தற்அதிமுகபோது திமுக ஆட்சி வெயில் போல சுட்டெரித்து வருகிறது என்றார். அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஆட்சியாளர்களை பார்த்து ஒன்றை மட்டும் தான் கேட்கிறார். சொன்னிங்களே செஞ்சீங்களா என்று தான் கேட்கிறார். திமுக ஆட்சிக்கு முன்பு கொடுக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை" என்றார்.
மேலும், " திமுக தேர்தல் வாக்குறுதியில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்தார்கள் ஆனால் இதுவரை நடைமுறைப்படுத்தவில்லை. பெண்களுக்கு கேஸ் சிலிண்டர் வழங்குவதற்கு மானியமாக 200 ரூபாய் கொடுக்கிறேன் என்றார்கள். இளைஞர்கள் வாங்கிய கல்விக்கடன் முழுமையாக ரத்து செய்யப்படும் என்று கூறினார்கள் ஆனால் இதுவரை செய்யவில்லை. அதேபோன்று நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று தேர்தல் வாக்குறுதியில் சொன்னார்கள் செய்தார்களா? இப்படிப்பட்ட நிலைமையில் தான் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது" என்று விமர்சித்தார்.
மேலும், “ஆட்சிக்கு வந்தவுடன் நகை கடன் 5 பவுன் வாங்கியவர்களுக்கு ரத்து செய்யப்படும் என்றார்கள், இதை நம்பி தமிழகத்தில் 48 லட்சம் பேர் கூட்டுறவு வங்கியில் ஐந்து சவரனுக்கு அடகு வைத்தார்கள். இவர்கள் அனைவருக்கும் நகைக்கடை தள்ளுபடி செய்திருக்க வேண்டும். ஆனால் இவர்கள் நகை கடன் நேரத்து செய்தது வெறும் 15 லட்சம் பேருக்கு மட்டுமே என்றார். மீதமுள்ளவர்கள் நகையை அடகு வைத்து தற்போது கடனாளியாக உள்ளனர். அம்மா மினி கிளினிக்கை மூடிவிட்டு மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தை தொடங்கினார். ஆனால் சரியான வகையில் மருந்துகள் கூட கிடைப்பதில்லை” என்றார். மின்சாரத்துறை மற்றும் டாஸ்மாக்கில் நடைபெறும் ஊழல்கள் மட்டுமே போதும் திமுக ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப என்று திமுக ஆட்சியை விமர்சித்து பேசினார்.
தொடர்ந்து சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.