Aadi Festival: கோட்டை மாரியம்மன் திருக்கோவில் ஆடிப் பண்டிகை.. என்ன சிறப்பு? எந்த மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை?
நாளை 10-ஆம் தேதி விழாவில் முக்கிய நிகழ்வாக பொங்கல் வைத்தல் மாவிளக்கு எடுத்தல் மற்றும் பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தும் நிகழ்ச்சிகள் நடக்க உள்ளது.
சேலம் மாவட்டத்தில் ஆடி பண்டிகை என்பது மிகச் சிறப்பாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்றாகும். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கு அமலில் இருந்ததால் ஆடி மாதம் பண்டிகையானது முற்றிலும் நிறுத்தப்பட்டது. இந்த ஆண்டு கொரோனா பரவல் குறைந்து இருப்பதால் சேலம் மக்கள் மகிழ்ச்சியோடு ஆடி மாதத்தை வரவேற்று கொண்டாடி வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் உள்ள 18 பட்டிக்கும் காவல் தெய்வமாக விளங்கி வரும் கோட்டை மாரியம்மன் திருக்கோவிலின் ஆடிப் பண்டிகை வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.
சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து மாரியம்மன் மற்றும் காளியம்மன் கோவில்களில் கடந்த 26 -ஆம் தேதி பூச்சாட்டுகள் விழா உடன் மிகச் சிறப்பாக தொடங்கியது. இதன்பின் 8 ஆம் தேதி நேற்று இரவு சக்தி அழைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் நாளை 10-ஆம் தேதி விழாவில் முக்கிய நிகழ்வாக பொங்கல் வைத்தல் மாவிளக்கு எடுத்தல் மற்றும் பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தும் நிகழ்ச்சிகள் நடக்க உள்ளது. தொடர்ந்து 16 ஆம் தேதி அன்று பால்குட ஊர்வலம் மற்றும் மகா அபிஷேகத்துடன் விழா நிறைவு பெறும்.
கோட்டை மாரியம்மன் திருக்கோவில் ஆடி பண்டிகையை முன்னிட்டு நாளை சேலம் மாவட்டம் முழுவதும் ஒரு நாள் உள்ளூர் விடுமுறை அறிவித்து சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் கார்மேகம் உத்தரவிட்டுள்ளார். இதனை ஈடு கட்டும் விதமாக 17.09.2022 அன்று பணி நாளாக உத்தரவிட்டுள்ளது.
ஆடி மாதம் முழுவதும் சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அம்மன் திருக்கோவில்களிலும் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்படும். ஆடி முதல் நாள் முதல் கடைசி நாள் வரை என்பதால் சேலம் கோட்டை மாரியம்மன் திருக்கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டும். குகை, அம்மாபேட்டை, செவ்வாய்பேட்டையில் உள்ள அம்மன் திருக்கோவில்களிலும் சிறப்பான அலங்காரம் செய்யப்பட்டும். தொடர்ந்து 22 நாட்கள் நடைபெறும் ஆடி பண்டிகை பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து ஆடி இரண்டாம் வாரம் கம்பளி நடுவது, மூன்றாம் வாரம் பூ கரகம் எடுப்பது, அலகு குத்துதல், பொங்கல் வைப்பது, வண்டி வேடிக்கை போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பண்டிகை ரத்து செய்யப்பட்டது. கொரோனா நோய் தொற்று குறைந்து வருவதால் இந்த ஆண்டு மாரியம்மன் பண்டிகை கொண்டாட்டத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் சேலம் மாவட்டம் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து மாரியம்மன் மற்றும் காளியம்மன் கோவில்களில் பசம்பாவிதங்களை தடுக்க கோவில்களில் சிசிடிவி பொருத்தி கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். பாதுகாப்பு பணியில் 1000 கணக்கான காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
மேட்டூர் அணையில் இருந்து உபரிநீராக காவிரி ஆற்றில் அதிக அளவில் தண்ணீர் திறக்கப்படுவதால் ஆடி மாதம் முழுவதும் காவிரி ஆற்றில் புனித நீராட தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி காவேரி ஆற்றில் குளிக்க முயற்சி செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டது.