Vinod Gandhi : ’இவருக்கு எம்.எல்.ஏ சீட்டா?’ வினோத் காந்திக்கு எதிராக கொந்தளிக்கும் ராணிப்பேட்டை உடன்பிறப்புகள்..!
’பல நேரங்களில் வினோத் காந்தி எங்கே இருக்கிறார் என்பது அவரது குடும்பத்திற்கே தெரியாது என்ற விமர்சனம் உள்ள நிலையில், எம்.எல்.ஏ சீட் கொடுத்தால் மக்கள் பணிகளை எப்படி செய்வார்? என்ற கேள்வி எழுந்துள்ளது’

ஆட்சியை தக்க வைத்து வரலாற்று சாதனைப் படைக்க வேண்டும் என்று திமுக கங்கனம் கட்டிக்கொண்டி வேலைப் பார்த்துக்கொண்டிருக்கையில் ஒரு சில மாவட்ட நிர்வாகிகள் திமுகவை பின்னுக்கு தள்ள கங்கனம் கட்டிக்கொண்டு பணியாற்றி வருகின்றனர். அப்படியான லிஸ்டில் வரும் ஒரு மாவட்டம்தான் ராணிப்பேட்டை.
அமைச்சர் காந்தி மகன் மீது அடுக்கடுக்கான புகார்கள்
ராணிப்பேட்டை திமுக மாவட்ட செயலாளராக இருப்பவர் கைத்தறித்துறை அமைச்சர் காந்தி. அவர் மீது துறை ரீதியாக அடுக்கடுக்கான புகார்கள் எழுந்து வரும் நிலையில், மாவட்ட நிர்வாகத்திலும் கடும் அதிருப்தி உருவாகியிருக்கிறது. அதற்கு காரணம் அவரது மகன் வினோத் காந்தி என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
குறிப்பாக, பொங்கலுக்கு இலவச வேட்டி சேலை கொடுக்கும் திட்டத்தில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்றுள்ளதாக எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை ஆகியோர் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர். அதே நேரத்தில், தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட முக்கிய பண்டிகையின்போது, கோ-ஆப்டெக்ஸ் மூலம் விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, அதற்கான பல்வேறு முன்னெடுப்புகள் எடுக்கப்படும். ஆனால், அமைச்சர் காந்தி கைத்தறித்துறை அமைச்சர் ஆன பின்னர், அப்படியான எந்த முன்னேற்ற நடவடிக்கைகளும் கைத்தறித்துறையில் எடுக்கப்படவில்லை என்றும் புகார்கள் எழுந்துள்ளன.
ராணிப்பேட்டையின் ராஜாவாக இருக்கும் வினோத் காந்தி
அமைச்சர் காந்தியின் தொகுதிக்கு உட்பட்ட அனைத்து டெண்டர்களையும் யாருக்குக் கொடுக்க வேண்டும்? எந்த நிறுவனத்துக்கு வழங்கவேண்டும்? என்று முடிவு செய்வது வினோத். கூடவே கைத்தறித் துறையின் வேஷ்டி, சேலை மூல பொருட்கள் கொள்முதல் தொடங்கி, அனைத்திலும் 15-20 சதவிகிதம் கமிஷன் பார்க்கிறார் வினோத் என்பதும் பெயர் குறிப்பிட விரும்பாத மாவட்ட நிர்வாகிகள் முன் வைக்கும் குற்றச்சாட்டு. இப்படி பெரும்பகுதி கமிஷனிலேயே போய்விடும் காரணத்தால், கடந்த ஆண்டு வழங்கப்பட்ட வேஷ்டியில் பருத்தி அளவு குறைந்து, பாலிஸ்டரின் அளவு அதிகமாகி வேஷ்டி, சேலைகள் தரமற்றதாக இருந்தது என்ற குற்றச்சாட்டு இருந்தது. இந்த முறையும் அதே லட்சணத்திலேயே வேஷ்டி, சேலை வந்தது. தேர்தல் நேரம் என்பதால், அந்த மலிவான வேஷ்டி, சேலைகள் திரும்ப அனுப்பப்பட்டு, வேறு வேஷ்டிகள் கொள்முதல் செய்யப்பட்டன. இந்த குழப்படிக்கு முக்கிய காரணமே வினோத்தின் திருவிளையாடல்தான் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
இதனைப் பயன்படுத்தி, அரசு மீது சரமாரி குற்றச்சாட்டுகளை வைக்க அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடங்கியிருக்கும் நிலையில், இது திமுக தலைமையை உஷ்ணமாக்கியுள்ளது.
விதிகளை மீறும் தொழிற்சாலைகள் – துணை போகிறாரா வினோத் காந்தி?
ராணிப்பேட்டையை பொறுத்தவரை, தோல் தொழிற்சாலை, ரசாயன தொழிற்சாலை நிறைந்திருக்கும் பகுதி. இப்போதுவரை அங்கிருக்கும் பெரும்பாலான நிறுவனங்கள், எந்த மறுசுழற்சியும் செய்யாமல், ரசாயன கழிவுகளை நிலத்தடியில் வெளியேற்றுகிறார்கள். இந்த நிறுவனங்கள் இவ்வளவு தைரியமாகச் செயல்பட முக்கிய காரணமே, வினோத் தான் என்பதும் எதிர்க்கட்சியான ராணிப்பேட்டை அதிமுகவின் குற்றச்சாட்டு.
”காந்தி, மூன்றாவது முறையாக எம்.எல்.ஏ. அதிலும் இம்முறை அமைச்சர் என்றபோதிலும் தொகுதியில் ஒரு மாற்றமும் இல்லை, முன்னேற்றமும் இல்லை. அதற்கு காரணம், நிறுவனங்களுக்கு சாதகமாக இருந்து, சுற்றுச்சூழலை நாசமாகிக்கொண்டிருக்கும் வினோத் காந்திதான். அதற்கு ஈடாக, நிறுவனங்கள் பல சலுகைகளை அவருக்கு செய்துகொடுத்து வருகிறது. இத்தனைக்கும் அவர் திமுகவின் சுற்றுச்சூழல் அணியின் இணைச்செயலாளர் என்று வேதனை பொங்க தெரிவிக்கின்றனர் அமைச்சர் தரப்புக்கு எதிராக மனநிலை கொண்ட உடன்பிறப்புகள்.”
மாவட்டத்தை படாதபாடு படுத்தும் வினோத்
இது ஒரு பக்கம் என்றால், தனது தந்தையின் உடல்நிலையை தனக்கு சாதமாகப் பயன்படுத்தி, மொத்த மாவட்ட நிர்வாகிகளையும் படாதாபாடுப்படுத்துகிறார் என்று கதறுகிறார்கள் ராணிப்பேட்டை திமுகவினர். தந்தை அமைச்சரானதுமே, வினோத்தின் ஆட்டமும் அதிகமாக தொடங்கியது. இதில், பாதிக்கப்பட்ட ஒன்றிய செயலாளர்கள் சிலர், வினோத்தின் செயல்பாடுகள் குறித்து தலைமைக்கு புகார் தெரிவித்தனர். அடுத்த ஒருசில மாதங்கள் அடக்கி வாசித்த வினோத், தேர்தல் நெருங்குவதால், மீண்டும் விஸ்வரூபமெடுத்து ஆடிக்கொண்டிருக்கிறார். வினோத் ஒருபக்கம் என்றால், அவரது மனைவி ஷீலா, மற்றும் வினோத்தின் சகோதரர் சந்தோஷ் ஆகியோரின் ஆதிக்கமும் மாவட்டத்திலும் துறையிலும் அதிகமாக இருக்கிறது என்பதுதான் இப்போது ராணிப்பேட்டை திமுகவின் ஹாட் டாப்பிக்காக இருக்கிறது.
அமைச்சருக்கான மரியாதையை கேட்கும் வினோத் – எம்.எல்.ஏ சீட் கிடைக்குமா?
அமைச்சர் தலைமை தாங்கும் அனைத்து அரசு, கட்சி நிகழ்ச்சிகளிலும் அமைச்சருக்குக் கொடுக்கப்படும் அதே மரியாதையை வினோத்துக்கும் கொடுக்க வேண்டும். இல்லையென்றால் சம்பந்தப்பட்ட அரசு, கட்சி நிர்வாகிகளை உண்டு இல்லை என்று செய்துவிடுவார்கள். மாவட்டத்தில் திரும்பும் பக்கம் எல்லாம் எதிர்ப்பு இருக்கும் வினோத் இந்த முறை தந்தையை வைத்து எப்படியாவது சீட் வாங்கிவிடவேண்டும் என்று காலில் சக்கரம் கட்டிக்கொண்டு சுற்றிக்கொண்டிருக்கிறார். இருந்தபோதிலும் உட்கட்சியில் அவருக்கு எதிராக இருக்கும் வெறுப்பும், அதிருப்தியும் சீட் கிடைத்தாலும், அவரை தோற்கடிக்கவேண்டும் என்று திட்டம் போட்டிருக்கிறார்கள் அதிருப்தியில் இருக்கும் உடன்பிறப்புகள். அதே நேரத்தில், அதிருப்தியாளர்களை அணைக்கட்டு நந்தகுமாரை வைத்து சமரசம் பேசும் வேளைகளில் இறங்கியிருக்கிறார் வினோத் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
வேட்பாளர்களை கவனமுடன் தேர்வு செய்யும் திமுக !
வரும் சட்டமன்ற தேர்தலில் 2வது முறையாக தொடர்ந்து ஆட்சியை தக்க வைத்து வரலாற்று சாதனை படைக்க வேண்டும் என்ற முனைப்பில் திமுக தலைமை செயல்பட்டு வருகிறது. அதனால், ஒவ்வொரு தொகுதி வேட்பாளர் தேர்விலும் இந்த முறை, கடந்த தேர்தல்களைவிட மிகுந்த கவனமுடம் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதற்காக, அரசு, உளவுத்துறை, தனியார் ஏஜென்ஸ்சிஸ், திமுக நிர்வாகிகள் என பல்வேறு கட்டங்களாக தொகுதிகளில் சர்வே எடுக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொருவர் கொடுக்கும் டேட்டாவையும் இன்னொரு டேட்டாவுடன் ஒப்பிட்டு பார்த்து, கள எதார்த்தம், நிர்வாகிகள் ஒத்துழைப்பு, செல்வாக்கு, அதிருப்தி, தனிப்பட்ட ஒழுக்கங்கள் உள்ளிட்டவைகளையெல்லாம் கருத்தில் கொண்டே இந்த முறை எம்.எல்.ஏ வேட்பாளர் தேர்வு செய்யப்படவுள்ளார். அரசன் என்பவன் ’ஒற்றனுக்கு ஒற்றன் வைத்திருக்க வேண்டும்’ என்ற ஒரு சொல்லாடல் உண்டு. அந்த சொல்லாடல் அடிப்படையிலேயே ஒரு தொகுதியை பல்வேறு நபர்கள், அமைப்புகளிடம் கொடுத்து விவரங்களை சேகரித்து வருகிறது திமுக தலைமை.
அப்படியான நிலையில், ராணிப்பேட்டை மாவட்டம் ரெட் அலெர்ட் லிஸ்டில் சிக்கியிருக்கிறது. வினோத் காந்தியின் செயல்பாடுகளால் தனிப்பட்ட முறையில் அமைச்சர் காந்தியே மன உளைச்சலில் இருப்பதாகவும், அவரின் குடைச்சல் தாங்காமல் ”இந்த முறை எனக்கு சீட்டே வேண்டாம், நீயே எம்.எல்.ஏ சீட்டை வாங்கிக்கொள்” என்று அவரிடம் சொல்லியுள்ளதாகவும் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
துரைமுருகனின் கோபம்
அதே நேரத்தில், பொதுச்செயலாளர் துரைமுருகனின் ஆதரவாளர்களாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் இருப்பவர்களையும், வினோத் காந்தி ஓரங்கட்டி வருவதால் துரைமுருகனுமே வினோத் காந்தி மீது வெறுப்பில் இருப்பதாகவும், வேட்பாளர் தேர்வில் வினோத் காந்தி பெயர் வரக் கூடாது என்பதில் அவரும் உறுதியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. கடந்த எம்.பி. தேர்தலில் சீட் கேட்ட வினோத் காந்தியின் பெயர் பரிசீலனை பட்டியலில் கூட இடம்பெறாமல் போனதன் பின்னணியில் இருந்தவர்கள், இப்போதும் அதே வேலையை கனக்கச்சிதமாக பார்த்து வருகிறார்கள் என்பதுதான் அந்த மாவட்டத்தின் பேசுபொருளாக இருக்கிறது.
அதே நேரத்தில் வினோத் காந்தி சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் படிக்கும்போது அவரது ஜூனியர்களான சிலரிடம் கடுமையாக நடந்துகொண்டதாகவும், அவர்கள் இப்போது திமுகவில் முக்கிய பொறுப்புகளில் இருப்பதாக கூறப்படும் நிலையில், அவர்களும் வினோத் காந்தியின் செயல்பாடுகள் குறித்து தலைமைக்கு தகவல் பாஸ் செய்திருப்பதாகவும் தகவல் கசிந்திருக்கிறது.

வெளிநாடு, வெளியூர் என்று பல நாட்கள் வெளியிடங்களில் இருக்கும் வினோத் காந்தி, சில நேரங்களில் எங்கே இருக்கிறார்? என்பது அவரது குடும்பத்தினருக்கு கூட தெரியாது என்ற நிலை இருப்பதாகவும், இப்படியானவருக்கு எம்.எல்.ஏ சீட் கொடுத்தால், அவர் எப்படி? தொகுதியையும் மக்களையும் கண்டுக்கொள்வார் என்பதுதான் அப்பகுதி திமுகவினரின் கவலையாக இருக்கிறது.
வினோத்தின் விளக்கம் என்ன ?
அவர் மீதான குற்றச்சாட்டுகள், புகார்கள், விமர்சனங்கள் இவற்றையெல்லாம் குறித்து விளக்கம் கேட்கவும், அவரது தரப்பு பணிகளையும், நியாயங்களையும் கேட்க, அமைச்சர் காந்தியின் மகனான வினோத்தை தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டோம். ஆனால், அவர் நமது அழைப்பை ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.






















