ADMK Leadership Issue : ”ஆள் இல்லா” அதிமுகவான அஇஅதிமுக.. இடியாப்ப சட்டச் சிக்கலில் “இரட்டையர்கள்”
தர்ம யுத்தத்தின்போது, சசிகலாவை தைரியமாக எதிர்த்த ஓபிஎஸ்-ஸா, இப்படி திணறுகிறார் என வெளிப்படையாக சொல்லும் அளவுக்கு, ஓபிஎஸ் அணி மிகவும் சுருங்கிவிட்டது.
• தமிழகத்தின் மிகப்பெரிய கட்சியான அனைந்திந்திய அண்ணா திமுக-வின் வரலாற்றில், இதுவரை நடைபெறாத அளவுக்கு மிக மோசமான ஒரு பொதுக்குழு நடந்து முடிந்துள்ளது. இந்த பொதுக்குழுவே செல்லாது என்று சிலர் சொல்வதால், நடந்தது பொதுக்குழுவா, இல்லையா என்பதும் தற்போது கேள்வியாகிவிட்டது.
• ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் கூடியிருந்த அவையில், கூச்சல் ,குழப்பம், வெளிநடப்பு, அவைத்தலைவர் தேர்வு என நடந்து முடிந்தது பொதுக்குழு. செயற்குழு நடந்ததா என்பதும் நடத்தினவர்களுக்கு மட்டுமே வெளிச்சம்.
• அனைத்திந்திய அண்ணா திமுக என இந்திய அளவில் பிரபலமான கட்சி, எம்ஜிஆர், ஜெயலலிதா போன்ற வலிமையான ஆளுமைகளால் நடத்தப்பட்ட போது, பொதுக்குழு என்பது கட்சியினருக்கு ஒரு திருவிழாபோல் இருக்கும். ஆனால், தற்போது இபிஎஸ், ஓபிஎஸ் போன்ற ஆளுமைகளின் காலத்தில், சம்பிரதாய கூட்டமாகவே, பொதுக்குழு நடைபெறுகிறது. அதிலும், இன்று நடைபெற்ற கூட்டம், வரலாறு கண்டிராத கூட்டமாகவே நடந்தது. இந்தப்பொதுக்குழுவே செல்லாது என ஒருதரப்பு ஆணித்தரமாக கூறுகிறது.
• இன்றைய பொதுக்குழுவை பார்க்கும்போது, அஇஅதிமுக-வில், ஆள் இல்லாத, அதாவது தலைமை ஆளுமை இல்லாத அதிமுக-வாக திணறிக்கொண்டிருக்கிறது என்பது மட்டுமே நிதர்சனமாகத் தெரிகிறது. இந்தத் திணறல், தற்போதைக்கு தொடர்கதையாக ஓடும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை என்பதுதான் அக் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் பலரின் கருத்து
• இன்றைய பொதுக்கூட்டத்தில் பேசுவதற்காக தயாரிக்கப்பட்ட 23 தீர்மானங்களையும் நிராகரிப்பதாக, முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் அறிவித்ததில் இருந்து தொடங்கிய கூச்சலும் குழப்பமும், கூட்டம் முடியும் வரை நீடித்தது. இன்றைய காலை நிலவரப்படி, கட்சியின் நம்பர் ஒன்னாக இருந்த ஓபிஎஸ்-ஸும் அவரது சில ஆதரவு நிர்வாகிகளும் கூட்டத்தில் இருந்தே வெளியேறியதும், ஜெயிக்க ஆரம்பித்துவிட்டார் இபிஎஸ் என்பதை சொல்லாமல் சொல்லியது என்றால் தவறில்லை.
• நேற்று இரவில் இபிஸ்-ஸுக்கு ஆதரவாக வீசிய சட்டக்காற்று, அதிகாலையில் ஓபிஎஸ்-ஸுக்கு ஆதரவாக மாறியது. ஆனால், இன்ற முற்பகலில் தொடங்கி, நண்பகல் வரை நீடித்த பொதுக்குழுவில் நடைபெற்ற நிகழ்வுகள், யார் பக்கமும் இல்லாமல், புதிதாக, இடியாப்ப சட்டச்சிக்கலுக்கு அழைத்துச் சென்று இருக்கிறது எனக் கூறுகின்றனர் இருதரப்பு சட்ட ஆலோசகர்கள்.
• தர்ம யுத்தத்தின்போது, சசிகலாவை தைரியமாக எதிர்த்த ஓபிஎஸ்ஸா, இப்படி திணறுகிறார் என வெளிப்படையாக சொல்லும் அளவுக்கு, ஓபிஎஸ் அணி மிகவும் சுருங்கிவிட்டது. அவருக்குப் பலமாக இருந்த பலர், தற்போது இபிஎஸ் அணியில் ஐக்கியமாகிவிட்டார்கள். மிச்சம் இருப்போரையாவது தக்க வைப்பாரா ஓபிஸ் என்பதுதான் தற்போது அதிமுக தொண்டர்களின் கருத்தாக இருக்கிறது.
• இன்றைய பொதுக்குழுவில், அஇஅதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் முதற்கொண்டு பெரும்பாலான முன்னணி நிர்வாகிகள் வரை அனைவரும், எடப்பாடியார் பக்கம் நின்றதை கண்கூடாக காண முடிந்தது. அதற்கான காரணம் குறித்து, பலர் பலவாறாகப் பேசினாலும், இபிஎஸ்-ஸின் ஆளுமைக்கு கிடைத்த வெற்றியாகவே, அவரது ஆதரவாளர்கள் உறுதிப்படத் தெரிவிகின்றனர். கட்சி தம் பின்னால் நிற்கிறது என்பதை ஊடகங்களுக்கும் இன்றைய கூட்டத்தின் மூலம் சொல்லி இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. தீர்மானங்கள் நிராகரிப்பு முதல் புதிய அவைத்தலைவர் தேர்வு வரை அனைத்துமே ஊடகங்களில் ஒளிபரப்பானது. பொதுவாக, இதுபோன்ற கட்சி பொதுக்குழுக் கூட்டங்களில், சில நிமிடங்களுக்குப் பிறகு வெளியே அனுப்பப்படும் செய்தியாளர்கள், கிட்டத்தட்ட முழு கூட்டத்திலும் இருந்தார்கள் என்பதே சற்று வித்தியாசமாக இருந்தது.
• சில தினங்களுக்கு முன், ABP நாடு-வில் பொதுக்குழுவில் என்ன நடக்கும் என்பதை, கிட்டத்தட்ட, இன்று நடந்ததை அப்படியே கூறியிருந்தோம். அந்த வகையில், நீதிமன்றங்களை நோக்கி அஇஅதிமுக எனக் குறிப்பிட்டது, அப்படியே தற்போது நடைபெறப் போகிறது. எடப்பாடி பழனிச்சாமியை பொறுத்தமட்டில், புதிய அவைத் தலைவராக தமிழ்மகன் உசேனை நியமித்து, அவர் மூலம் வரும் 11-ம் தேதி நடைபெறப்போகும் பொதுக்குழுவில், தமக்கு முடிசூட்டு விழா என்பதை கிட்டத்தட்ட சொல்லிவிட்டார்.
• அடுத்தடுத்த மாதங்களில் பொதுக்குழு நடத்தப்படுவதும், அதிமுக வரலாற்றில் இதுவே முதல்முறை என்றால் மிகையில்லை. தமிழகத்தின் பிரதான கட்சிகளில் ஒன்றான அதிமுக-வில் தற்போது வீசுகின்ற சுனாமிக்குக் காரணம், ஆளுமையான தலைமை இல்லை என்பதுதான். எடப்பாடியாரின் ஆள் சேர்ப்பு அரசியல், அவர் பின்னால் பெரும்பாலானோரை அணி வகுக்குச் செய்திருப்பது, ஓபிஎஸ்-ஸுக்குப் பெரும் சவாலாக மாறி இருக்கிறது.
• ஓபிஎஸ்-ஸின் அடுத்த நகர்வு என்பது நீதிமன்றங்களின் மூலம், தாம் தான் இன்னமும் கட்சியின் நம்பர் ஒன் என்பதை நிருபிக்க முயற்சிப்பார். அதேபோன்று, சசிகலா தரப்புடன் இணைந்து, எடப்பாடிக்குப் பெரும் சிக்கலை ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது. ஆனால், இதை எதிர்பார்த்திருக்கும் எடப்பாடி பழனிச்சாமி, அடுத்த கட்ட அரசியல் சதுரங்கத்திற்கு தயாராகி இருக்கிறார் என்பதையும் அவருடைய அதிரடி நகர்வுகளால் நம்ப முடிகிறது.
• கீழமை நீதிமன்றம், உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் என நீதிமன்றங்களை நோக்கி, இன்னும் கொஞ்ச காலத்திற்கு அஇஅதிமுக இருக்கப்போவது நிச்சயம். தலைமை ஆள் இல்லாததால், அனைத்திந்திய அண்ணா திமுக, தற்போது “ஆள் இல்லா” அதிமுக-வாக மாறிவிட்டது என்றால் மிகையில்லை.