அங்கு இருந்து அழைப்பு வந்துவிட்டதா? பாமகவில் இருந்து விலகத் தயார்! ஜி.கே.மணி பரபரப்பு பேட்டி ..
தீய சக்திகள், துரோகிகள், கைக்கூலிகள் யார் என பட்டியல் கொடுத்தால், நாங்கள் விலகிக்கொள்ள தயாராக இருக்கிறோம் என சேலத்தில் ஜி.கே.மணி பேட்டி

சேலம் : தீய சக்திகள், துரோகிகள், கைக்கூலிகள் யார் என பட்டியல் கொடுத்தால், நாங்கள் விலகிக்கொள்ள தயாராக இருக்கிறோம் என சேலத்தில் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.
நான் விலக தயார்!
பாட்டாளி மக்கள் கட்சியின் (பா.ம.க.) தலைவர் அன்புமணி ராமதாஸ், "மருத்துவர் ராமதாசுடன் (தந்தை) தீய சக்திகள், துரோகிகள், கைக்கூலிகள் இருக்கும் வரை அவருடன் சேர மாட்டேன்" என்று தெரிவித்த நிலையில், "அந்தப் பட்டியல் கொடுத்தால், நானாக இருந்தாலும் சரி, யாராக இருந்தாலும் விலகிக் கொள்ளத் தயாராக இருக்கிறோம்" என்று பா.ம.க. கவுரவத் தலைவர் ஜி.கே. மணி சேலத்தில் கூறியுள்ளார்.
சேலத்தில் அன்புமணி ஆதரவாளர்களால் தாக்கப்பட்டுக் காயமடைந்த பா.ம.க. நிர்வாகிகளை மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் கூறிய பின் ஜி.கே. மணி செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர், "பா.ம.க.-வினரே பா.ம.க.-வினரை வீச்சரிவாள், இரும்பு ராடு, கற்கள் போன்றவற்றால் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். முக்கியக் குற்றவாளிகள் அன்று காரில் இருந்து இறங்கியிருந்தால், அங்கேயே அவர் காலியாகி இருப்பார். பல இளைஞர்களுக்குப் படுகாயம் ஏற்பட்டுள்ளது. இது எவ்வளவு அவமானகரமான, வேதனையான செயல்" என்று வருத்தம் தெரிவித்தார். தாக்குதலில் காயமடைந்துள்ள நடராஜ் என்பவரைக் கொலை செய்யத் திட்டமிட்டுள்ளதாகப் போலீஸ் தெரிவித்துள்ளதாகவும், உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் நிலைமை மோசமடையும் என்றும் அவர் எச்சரித்தார்.
விலகிக் கொள்ளத் தயார்:
தொடர்ந்து ஜி.கே. மணி பேசியதாவது: "மருத்துவர் ராமதாசுடன் தீய சக்திகள், துரோகிகள், கைக்கூலிகள் இருக்கும் வரை தந்தையுடன் சேர மாட்டேன் என்று அன்புமணி தெரிவித்துள்ளார். கொலை முயற்சி நடப்பதாக அவர் கூறியிருக்கிறார். அந்தத் தீய சக்திகள் யார், யார் என்று பட்டியல் கொடுத்தால், அதில் நானாக இருந்தாலும் சரி, யாராக இருந்தாலும் விலகிக் கொள்ளத் தயாராக இருக்கிறோம். அதன் பிறகாவது மருத்துவர் ராமதாசும், அன்புமணியும் சந்தித்து, பா.ம.க.-வை வலுப்படுத்தட்டும்."
சந்திப்பைத் தவிர்த்தது அன்புமணிதான்:
அன்புமணியை யாரும் ராமதாசைச் சந்திக்கத் தடுக்கவில்லை என்று மறுத்த ஜி.கே. மணி, "மருத்துவமனையில் ராமதாஸ் இருந்தார். திருமண நாள், பிறந்த நாள் வந்தது. அப்போது அன்புமணி ஏன் சந்திக்கவில்லை? நான்கு மாதங்களாக இருவரும் ஒன்றாகச் சேர வேண்டும் என நான் முயற்சித்தேன். பிரிந்து போனவர் அன்புமணிதான். அதன் பின் நடைபயணம், கொலை முயற்சி எல்லாம் நடக்கிறது. இது தேவையா?" என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், வன்னியர்களுக்கு மட்டுமின்றி, ஓ.பி.சி. உள்ளிட்ட ஆறு சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு பெற்றுத் தந்த மருத்துவர் ராமதாஸை நாகரிகக் குறைவாகப் பேசுகின்றனர்; "ஜி.கே. மணி குடும்பத்தைப் பிரித்துவிட்டதாகப் பதிவிடுகின்றனர். 45 ஆண்டுகளாகக் கட்சிக்காக உழைத்தவனுக்கு இதுதான் பரிசா?" என்றும் குறிப்பிட்டார்.
ஜி.கே. மணி மீது குற்றச்சாட்டு:
ஜி.கே. மணியின் பேட்டிக்கு எதிர்வினையாற்றி, பா.ம.க. ஆதரவாளர்கள் சில கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.
ஜி.கே. மணியின் தலைவர் பதவி பறித்ததில் இருந்து அவர் அன்புமணி மீது வன்மத்துடன் இருந்துவந்ததாக கூறப்படுகிறது, தொடர்ந்து அவரது மகன் தமிழ்குமரனுக்கு இளைஞர் சங்க தலைவர் பதிவியை வாங்கினார். அந்தப் பதவி நீண்ட நாள் நிலைக்கவில்லை. இந்தநிலையில் தந்தை மகனுக்குமான பிரச்சினை தொடங்கியது, இதனை பயன்படுத்திகொண்ட அவர் கட்சியில் பிளவை ஏற்படுத்தினார் என்ற குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.
ஜி.கே. மணி தற்போது மாற்றுக் கட்சியுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கிறார். அந்தக் கட்சிக்கு செல்ல அவர் ஏற்கனவே முடிவெடுத்துவிட்டார். அவர் வேறு கட்சிக்குச் செல்ல இருப்பதால்தான், இது போன்ற சில்மிஷங்களில் ஈடுபட்டு வருகிறார். அருள் உள்ளிட்டோரைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு, ஜி.கே. மணி தன்னுடைய ஆதிக்கத்தைக் காட்ட முயற்சிக்கிறார். இப்போது ராமதாஸிடம் இருந்து பிரிந்து செல்ல காரணத்தை கண்டுபிடித்து விட்டார், அதனால்தான் ஜி.கே.மணி இப்போது இப்படி பேச தொடங்கி விட்டார் என தெரிவிக்கின்றனர்.





















