"திமுக ஆட்சிக்கு வந்தாலே பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை; கொலைகள் அதிகரிப்பு” - எல்.முருகன்
திமுக மக்களை ஏமாற்றுவதற்காக தவறான தேர்தல் அறிக்கையை தந்துள்ளது. தேர்தல் அறிக்கையில் கூறியதை செய்வதற்கு தவறிவிட்டார்கள்.
சேலத்தில் பாரதிய ஜனதா கட்சியின் துணைத் தலைவரும், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினருமான கே.பி.ராமலிங்கம் இல்லத் திருமண விழாவிற்கு வருகை தந்த மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் மணமக்களை வாழ்த்தினார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியது, இந்தியாவில் கடந்த எட்டு ஆண்டுகளில் எண்ணற்ற சாதனைகளை செய்துள்ளோம். கடந்த 70 ஆண்டுகளாக காங்கிரஸ் செய்யத் தவறிய திட்டங்களை பாரதிய ஜனதா கட்சி 8 ஆண்டுகளில் செய்துள்ளது. குறிப்பாக பொதுமக்கள் அனைவரின் கனவாக உள்ள அனைத்து மக்களுக்கும் வீடு கட்டும் திட்டத்தில் பலர் பயனடைந்து வருகின்றனர் என்றார். 2014 ஆம் ஆண்டுக்கு முன்பு கழிப்பிட தேவை குறித்து பேசுவது தயக்கமாகவே இருந்தது. பாஜக ஆட்சியில் அனைத்து பள்ளிகளுக்கும், ஏழை மக்களின் வீடுகளுக்கும் கழிப்பிடம் கட்டி கொடுத்து இருக்கிறோம்.
இது மட்டுமில்லாமல் அயோத்தியில் ராமர்கோவில் கட்டுவோம் என்று சொன்னோம். அது தற்போது நடந்து கொண்டிருக்கிறது. விரைவில் மக்களுக்கு அர்ப்பணிப்போம். பாஜகவின் அடிப்படை கொள்கைகளை நிறைவேற்றி உள்ளோம் என்றும் கூறினார். ஆனால் தமிழகத்தில் நகைக்கடன் தள்ளுபடி என்று சொல்லி, அதற்கு பல்வேறு விதிமுறைகளை கூறி தள்ளி வைத்துள்ளனர். விதிமுறைகளால் மக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். திமுக மக்களை ஏமாற்றுவதற்காக தவறான தேர்தல் அறிக்கையை தந்துள்ளது. தேர்தல் அறிக்கையில் கூறியதை செய்வதற்கு தவறிவிட்டார்கள். அதை நிறைவேற்றுவதற்கு திராவிட முன்னேற்ற கழகம் முன்வர வேண்டும் என்றும் தெரிவித்தார்.
திமுக ஆட்சிக்கு வந்தாலே பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுவிடுகிறது. பாலியல் குற்றங்கள், கொலைகள் அதிகரித்துள்ளது. மக்கள் வேதனையில் உள்ளனர். எதற்கு திமுகவிற்கு ஓட்டுப் போட்டோம் என்ற வேதனையில் மக்கள் உள்ளனர் எனவும் பேசினார். மத்திய அரசின் ஒவ்வொரு திட்டங்களுக்கும் அதிக பயணிகள் தமிழகத்தில் தான் உள்ளனர். எக்ஸ்பிரஸ் சாலைகளால் சிறிய சிறிய ஊர்கள்கூட விமான நிலையங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தேர்வு செய்யப்பட்டுள்ள 5 மீன் பிடி துறைமுகங்களில் சர்வதேச தரம் கொண்டதாக மாற்றுவதில், சென்னை காசிமேடு துறைமுகமும் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது என்று கூறியுள்ளார். மேலும் ஆளுநர் குறித்து திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் வெற்று விளம்பரத்திற்காக பேசி வருகின்றனர் என்று கூறினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்