அதிமுக-பாமக கூட்டணியில் விரிசலா? பாமக வலுவான இடங்களில் அதிமுக தோல்வி எனச்சொல்லும் புகழேந்தி
ஒரு கட்சியுடன் கூட்டணி வைப்பதும் பின்னர் அக்கட்சி கூட்டணியில் இருந்து வெளியேறி வெற்றிக்கு நாங்கள்தான் காரணம் என்ற கூறுவதையே பாட்டாளி மக்கள் கட்சி தொழிலாக கொண்டுள்ளதாக அதிமுக செய்தித் தொடர்பாளர் புகழேந்தி அன்புமணி ராமதாஸ் மீது கடும் விமர்சனங்களை வைத்துள்ளார்
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி இல்லை என்றால் அதிமுக 20 இடங்களில் கூட வெற்றி பெற்றிருக்க முடியாது எனவும், பாமக அதிமுக கூட்டணியில் இருந்ததால்தான் அதிக இடங்களை அதிமுகவால் பெற முடியவில்லை என்ற அதிமுக நிர்வாகிகளின் பேச்சை ஏற்க முடியாது எனவும், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தையெல்லாம் ஒரு பொருட்டாகவே கருதவில்லை எனவும் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் கூறியிருந்தார்.
அன்புமணி ராமதாசின் இந்த பேச்சுக்கு பதிலளிக்கும் விதமாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் அதிமுக செய்தித்தொடர்பாளர் புகழேந்தி.
2016 ஆண்டு தேர்தலில் ஜெயலலிதா இருந்த பொழுதே, வெற்றி பெற்றிருந்த 51 தொகுதிகளை அதிமுக மீண்டும் வென்று தக்க வைத்துக் கொண்டிருப்பதாகவும், பா.ம.கவுடன் கூட்டணியில் 6 சட்டமன்ற தொகுதிகளில் மட்டும் அதிமுக வெற்றி பெற்றுள்ளது என அதிமுக செய்தித் தொடர்பாளர் புகழேந்தி கூறினார். தேக்குமரத்தில் மரங்கொத்தி கொத்திக்கொண்டே இருந்ததாம்; நாம் கொத்துவதால்தான் தேக்கு மரம் விழுந்துவிட்டது என்று சொல்லி மரங்கொத்தி நினைத்து கொண்டதாம். இதைப்போல பாமக இருந்ததால்தான் இத்தனை தொகுதிகளில் அதிமுக வென்றதாக அன்புமணி கூறுகிறார். இதை ஏற்றுக்கொள்ள முடியாது எனக்கூறிய புகழேந்தி. ஓபிஎஸை ஒரு பொருட்டாகவே நினைப்பதில்லை என்ற அன்புமணியின் பேச்சை சுட்டிக்காடி, ஓபிஎஸ் கையெழுத்து போட்டு, 35 அதிமுக எம்.எல்.ஏக்களின் ஆதரவில்தான்தான் அன்புமணி ராஜ்யசபா எம்பி ஆகியுள்ளதாக குறிப்பிட்டார்.
மேலும் ஒரு கட்சியை பற்றி குற்றம் சொல்லிக்கொண்டே இருந்தால் யாராலும் ஏற்க முடியாது என்ற அவர், ”பாமக உடன் பயணித்ததால்தான் அதிமுக தோற்றுவிட்டது என கூறினால் உங்களுக்கு எவ்வுளவு கோபம் வரும் என கேள்வி எழுப்பினார். பாட்டாளி மக்கள் கட்சி வலுவாக உள்ளதாக கூறப்படும் விழுப்புரம், திண்டிவனம், விருத்தாசலம், கடலூர், திருவள்ளூர் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் அதிமுக தோல்வி அடைந்துள்ளது என்பதை குறிப்பிட்ட புகழேந்தி.
பாமகவினர் எங்களோடு ஒத்துப்போகலாமே தவிர எங்கள் தலைவர்களை குறை கூறுவதை ஏற்க முடியாது என்றும், கூட்டணியில் இருந்து கொண்டே அந்த கட்சியை விமர்சிப்பதே பாமகவிற்கு தொழிலாக போய்விட்டது என்றும் ஒரு கூட்டணியில் சேர்ந்துவிட்டு, வெளியில் வந்து எங்களால்தான் அந்த கூட்டணி வென்றது என பாமக கூறுவதையும் எங்களால் ஏற்க முடியாது என புகழேந்தி திட்டவட்டமாக கூறினார். மேலும் பாஜகவுடன் சேர்ந்ததாலேயோ, பாமகவுடன் கூட்டணி சேர்ந்ததாலேயோதான் அதிமுக தோல்வி அடைந்தது என இதுவரை அதிமுக நிர்வாகிகள் எங்கும் சொல்லவில்லை என்று கூறிய அவர், வன்னியர்களுக்கு கொடுக்கப்பட்ட 10.5 சதவீத இட ஒதுக்கீடு பல்வேறு மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதையும் புகழேந்தி சுட்டிக்காட்டினார்.