சொந்த வீட்டுக்கே சூனியம் வைத்துவிட்டீர்களே.. புரட்சித்தலைவி மன்னிப்பாரா? : கொந்தளித்த சசிகலா
திமுகவினர் நமது இயக்கத்தைப் பார்த்து பொறாமைப்பட்ட காலங்கள் கடந்து தற்பொழுது நடக்கும் நிகழ்வுகளை பார்த்து ஆனந்தத்தோடு ரசித்துக் கொண்டிருக்கிறார்கள் - சசிகலா
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வி.கே சசிகலா தொண்டர்களை சந்திக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார், இதில் திண்டிவனத்தில் துவங்கிய பயணத்தின் இறுதியாக மரக்காணத்தில் வி.கே சசிகலா தொண்டர்களை சந்தித்தார் மரக்காணத்தில் சசிகலாவின் ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர் இதனை தொடர்ந்து பேசிய சசிகலா கூறியதாவது:-
அதிமுகவில் ஒரு சிலரின் சுயநலத்தால் வெற்றி சின்னமான இரட்டை இலை சின்னத்னதில் போட்டியிட முடியாத சூழ்நிலைக்கு நமது கழக தொண்டர்கள் தள்ளப்பட்டு இருப்பது மிகவும் வேதனையை அளிக்கிறது எனவும், ஏதாவது சூழ்ச்சிகளை செய்து அவரவர்கள் உயர் பதவியில் நீடிப்பதற்காக அடிமட்ட கழகத் தொண்டர்கள் தலைமைக்கு, வருவதற்கு முட்டுக்கட்டை போடுவது எந்த விதத்தில் நியாயம் எனவும் இது கழக தொண்டர்களுக்கு இழைக்கும் மிகப் பெரிய துரோகம் எனவும், ஒருசிலரின் அரசியல் லாபத்திற்காக அப்பாவி தொண்டர்களை பலியாக்குவதா? உங்களுடைய சுய விருப்பு, வெறுப்புகளுக்காக இரட்டை இலை சின்னத்தை இது போன்று முடக்குவதற்கு யார் முதலில் உங்களுக்கு அதிகாரம் கொடுத்தது.? சொந்த வீட்டிற்கே சூனியம் வைத்து விட்டீர்களே.
புரட்சித்தலைவரும், புரட்சிதலைவியும் உங்களை மன்னிப்பார்களா? உங்களை உருவாக்கிய இயக்கத்திற்கு இருபெரும் தலைவர்களுக்கு நீங்கள் காட்டும் நன்றியா இதுதானா.? ஆண்டுக்கு ஒருமுறை அவரவர் விருப்பப்படி கட்சியின் சட்ட திட்டங்களை மாற்றுவதற்கு யாருக்கும் எந்த அதிகாரமும் இல்லை, அதே போன்று புரட்சித்தலைவர் உருவாக்கிய சட்டதிட்டங்களை திருத்தம் செய்வதை எந்த தொண்டர்களும் மனப்பூர்வமாக விரும்பவில்லை, இந்த யதார்த்தத்தை புரிந்து கொண்டு அனைவரும். ஒன்றிணைந்தால், அதுவே இருபெரும் தலைவர்களுக்கு நாம் காட்டும் மிகப்பெரிய நன்றிக் கடனாகும் என தெரிவித்தார்
தொடர்ந்து பேசிய சசிகலா, திமுகவினர் நமது இயக்கத்தைப் பார்த்து பொறாமைப்பட்ட காலங்கள் கடந்து தற்பொழுது நடக்கும் நிகழ்வுகளை பார்த்து ஆனந்தத்தோடு ரசித்துக் கொண்டிருக்கிறார்கள், ஒன்றை மட்டும் உறுதியோடு தெரிவித்துக் கொள்கிறேன். திமுகவினரின் எண்ணம் ஒருநாளும் ஈடேறாது, அவர்கள் ஊதும் மகுடிக்கு ஒரு சிலர் வேண்டுமானால் மயங்கலாம், ஆனால் எதற்கும் மயங்காத எண்ணில் அடங்கா தொண்டர்களை கொண்டது நம் அதிமுக இயக்கம், திமுகவினருக்கு நாமே இடம் கொடுத்து விடக்கூடாது என்றுதான் நான் மிகவும் பொறுமையாக இருக்கிறேன், அனைவருக்கும் வலியுறுத்தி ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்கிறேன், வேற்றுமையை மறந்து ஒற்றுமையாக இருந்து இந்த இயக்கம் இன்னும் நூறாண்டுகள் ஆனாலும் மக்களுக்காவே இயங்கும் என்ற அம்மாவின் எண்ணம் ஈடேற வேண்டும் என தெரிவித்தார்,
#JUSTIN | ”நான் அதிமுகவின் பொதுச்செயலாளர்” - வி.கே.சசிகலா பேட்டிhttps://t.co/wupaoCQKa2 | #AIADMK #ADMK #sasikala #ammk #ttvdhinakaran #TNpolitics pic.twitter.com/U7DFGxzMtY
— ABP Nadu (@abpnadu) July 5, 2022
மரக்காணம் பகுதியில் உள்ள பொதுமக்களின் முக்கிய பிரச்சனைகளான எக்கியார்குப்பம் கடற்கரை பகுதியில் மீனவர்கள் படகுகள் நிறுத்துவதற்கு ஏதுவாக மீன்பிடித் துறைமுகம் அமைக்க வேண்டும் எனவும், பிரசித்தி பெற்ற பூமிஸ்வரர் கோவிலை முறையாக பராமரிக்க வேண்டும் எனவும், கிழக்குக்கடைக்கரை சாலை பகுதிகளில் அதிகமாக விபத்துக்கள் நடைபெறுவதால் மரக்காணம் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும் எனவும் திமுகவுக்கு கோரிக்கை விடுத்தார். திமுக செய்யவில்லை என்றால் அடுத்து வரும் நம்முடைய ஆட்சியில் நிச்சயமாக இவை அனைத்தும் நிறைவேற்றப்படும் எனவும் தெரிவித்தார்.