(Source: ECI/ABP News/ABP Majha)
Vijay students meet : நாளை விஜய் பேசப்போகும் அரசியல் என்ன ? கட்சித் துவங்கிய பின் முதல் நிகழ்ச்சி ..! ஏற்பாடுகள் தீவிரம்
thalapathy vijay students meet " கட்சி துவங்கிய பிறகு நடிகர் விஜய் கலந்து கொள்ளும் முதல் நிகழ்ச்சி என்பதால், எதிர்பார்ப்பு கூடியுள்ளது "
நாளை முதற்கட்டமாக தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வில் , தொகுதிவாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு பரிசு தொகை வழங்கி நடிகர் விஜய் பாராட்டுகிறார். இதற்கான ஏற்பாடுகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
விஜயும் மாணவர்களும்
கடந்த ஆண்டு நடிகர் விஜய் மக்கள் இயக்கம் சார்பில், 234 தொகுதிகளிலும் சிறப்பாக மதிப்பெண் பெற்ற 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கும் தனது கையால் , உதவித்தொகை கொடுத்து பாராட்டுகளை தெரிவித்தார். காலை 10 மணி அளவில் துவங்கிய நிகழ்ச்சி நள்ளிரவு வரை நீடித்தது. மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கிய நிகழ்வு, தமிழ்நாடு அளவில் பேசு பொருளானது. கடந்த ஆண்டு விஜய் மக்கள் இயக்கம் சார்பாக செய்யப்பட்டு இருந்த நிகழ்ச்சி இம்முறை, தமிழக வெற்றி கழகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இரண்டு கட்டமாக
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நாளை 21 மாவட்ட மாணவர்களுக்கு வருகின்ற முதற்கட்டமாக பரிசுகளை வழங்குகிறார். நடிகர் விஜய், அதன்படி அரியலூர், கோவை, தருமபுரி, திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, நீலகிரி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தென்காசி, தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, மதுரை, நாமக்கல், திருப்பூர், விருதுநகர் உள்ளிட்ட 21 மாவட்ட மாணவர்களுக்கு ஜூன் 28ம் தேதி பரிசு வழங்கப்பட இருக்கிறது.
இரண்டாம் கட்டமாக 19 மாவட்ட மாணவர்களுக்கு வருகின்ற ஜூலை 3ம் தேதி பரிசுகளை நடிகர் விஜய் வழங்குகிறார். அதன்படி ஜூன் 3ம் தேதி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், புதுச்சேரி, கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, நாகப்பட்டிணம், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் முதல் மதிப்பெண் பெரும் மாணவர்களுக்கு பரிசுகளை வழங்குகிறார்.
விஜய் செய்யப் போவது என்ன ?
கடந்த முறை நடிகர் விஜய் மக்கள் இயக்கமாக இருந்த பொழுது, அரசியல் சார்ந்த கருத்துக்களை முன்வைத்திருந்தார். குறிப்பாக பெரியார் , அம்பேத்கர் மற்றும் காமராஜர் போன்ற தலைவர்கள் குறித்து பேசி இருந்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. நீங்கள் தான் அடுத்த வாக்காளர்கள் தலைவர்களைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள், ஓட்டுக்கு காசு வாங்க கூடாது என பெற்றோரை வலியுறுத்துங்கள் என பேசி இருந்தது குறிப்பிடத்தக்கது.
இம்முறை அரசியல் தலைவராக ..
கடந்த முறை நடிகராக மட்டுமே விஜய் இந்த கருத்துக்களை தெரிவித்து இருந்தால், இம்முறை விஜய் அரசியல் கட்சியின் தலைவராகவும் இருப்பதால், விஜய் எந்த மாதிரியான கருத்துக்களை பேச உள்ளார் என்பது குறித்து பொதுமக்களிடையே ஆர்வம் எழுந்துள்ளது. நடந்து முடிந்த தேர்தலை பற்றி விஜய் பேசுவாரா ? என கேள்வியும் எழத் துவங்கியுள்ளது . நிச்சயம் தற்பொழுது இருக்கும் அரசியல் சூழல் குறித்தும், விஜய் மறைமுகமாக பேசுவார் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஏற்பாடுகள் தீவிரம்
இந்தநிலையில் இம்முறை சென்னை, திருவான்மியூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் பாராட்டு விழா நடைபெற உள்ளது. இரண்டு கட்டமாக நடைபெறுவதால் கடந்த ஆண்டு போல் இல்லாமல் இம்முறை, நிகழ்ச்சி மாலைக்குள் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் மாணவர்கள் மற்றும் பெற்றோர் அனைவருக்கும் , அறுசுவை உணவு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வந்து செல்வதற்கான போக்குவரத்தும் கட்சி சார்பில் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. தொடர்ந்து மாணவர்களுக்கு, 5000 ரூபாய் ஊக்க தொகையும் வழங்க உள்ளார். அரசியல் கட்சி துவங்கிய பிறகு விஜய் கலந்து கொள்ளும் முதல் நிகழ்ச்சி என்பதால், எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.