காங்கிரஸ் கட்சிக்குள் பரபரப்பு! மாணிக் தாகூர் போடும் ஸ்கெட்ச் யாருக்கு? செல்வப்பெருந்தகையின் எதிர்காலம் என்ன?
"காங்கிரஸ் கட்சியின் மாணிக் தாகூர் யாருக்கு ஸ்கெட்ச் போடுகிறார் என்பது குறித்து பல்வேறு தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது."

தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகச் செல்வப்பெருந்தகை பொறுப்பேற்ற பிறகு, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கட்சி பெற்ற 100 சதவீத வெற்றி அவருக்கு மேலிடத்தில் பெரும் நற்பெயரைப் பெற்றுத் தந்தது. கடந்த 25 ஆண்டு கால தமிழக காங்கிரஸ் வரலாற்றில், மற்ற தலைவர்களைக் காட்டிலும் ஊடக வெளிச்சத்திலும், தொண்டர்கள் மத்தியிலும் செல்வப்பெருந்தகை அசுர வேகத்தில் வளர்ந்து வருவது பழைய அதிகார மையங்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறி உள்ளதாக காங்கிரஸ் கட்சியினர் கூறுகின்றனர்.
தீவிரப் படுத்தும் நடவடிக்கைகள்
மேலும் இதுகுறித்து காங்கிரஸ் கட்சியினை கூறுகையில், குறிப்பாக, வரும் சட்டமன்றத் தேர்தலிலும் அவர் வெற்றியை ஈட்டிக் கொடுத்தால், தமிழக காங்கிரஸில் தங்களின் பிடி தளர்ந்துவிடும் என அஞ்சும் மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட மூத்த தலைவர்கள், அவரை முடக்குவதற்கான காய்நகர்த்தல்களைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
கூட்டணி விவகாரங்களில் தனிப்பட்ட கருத்துகளைப் பேசக்கூடாது என்று கே.சி. வேணுகோபால் அறிவுறுத்திய பிறகும், மாணிக்கம் தாகூர் திமுகவை நோக்கி ஆக்ரோஷமான விமர்சனங்களை முன்வைப்பது தற்செயலானது அல்ல.
திமுக தோற்ற தொகுதிகளைக் கேட்பது, கூட்டணி பேச்சுவார்த்தைக்கு முன்பே நிபந்தனைகளை விதிப்பது என அவர் காட்டும் வேகம், உண்மையில் திமுகவை பலவீனப்படுத்துவதற்காக அல்ல; மாறாகச் செல்வப்பெருந்தகையின் தலைமையிலான கூட்டணியில் விரிசலை உண்டாக்குவதற்காகவே. இதன் மூலம் கூட்டணி முறிந்தால் அதன் பழியைச் செல்வப்பெருந்தகை மீது சுமத்தலாம் அல்லது கூட்டணி அமைந்தாலும் இரு தரப்புக்கும் இடையே கசப்பை உண்டாக்கி தேர்தல் வெற்றியைப் பாதிக்கச் செய்யலாம் என்பதே அவரது கணக்காக இருக்கிறது என தெரிவிக்கின்றனர்.
பின்னணி என்ன ?
இனி எம்.எல்.ஏ அல்லது எம்.பி தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று மாணிக்கம் தாகூர் அறிவித்திருப்பது, ஒரு தியாகமாகத் தெரிந்தாலும் அது ஒரு மிகப்பெரிய அரசியல் ரிஸ்க் ஆகும். பதவிகளின் மேல் ஆசை இல்லாதவர் போன்ற பிம்பத்தை உருவாக்கி, செல்வப்பெருந்தகைக்கு எதிராகத் தான் எடுக்கும் முடிவுகளுக்குத் தார்மீக வலு சேர்க்க அவர் முயல்கிறார்.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ‘தி இந்து’ நாளிதழில் வெளியான செய்தியின்படி, சாதிய ரீதியான சீண்டல்கள் மற்றும் திருப்பரங்குன்றம் விவகாரத்தில் எழுந்த மோதல்கள் என இவர்களுக்கிடையிலான பகை நீண்டகாலமாகத் தொடர்ந்து வருகிறது. இந்த அதிகாரப் போட்டியில் செல்வப்பெருந்தகையின் வளர்ச்சியைத் தடுப்பதே மாணிக்கம் தாகூரின் முதன்மையான "ஸ்கெட்ச்" ஆகப் பார்க்கப்படுகிறது.























