Manipur Violence: கலவரத்தைக் கட்டுப்படுத்தாமல் இணையசேவையை முடக்குவதா? - மணிப்பூர் குறித்து பொங்கிய அமைச்சர் உதயநிதி
Udhayanidhi Stalin: இந்தியாவின் மிகச் சிறிய மாநிலங்களில் ஒன்றான மணிப்பூர் மாநிலம் கடந்த மே மாதம் தொடங்கி இன்று வரை அமைதி இல்லாமல் உள்ளது.
Udhayanidhi Stalin: இந்தியாவில் அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் இருந்து கிரிக்கெட் உலகக்கோப்பைத் தொடர் நடைபெறவுள்ளது, கடந்த மாதம் சந்திரயான் 3 விண்கலம் நிலவின் தென் பகுதியில் வெற்றிகரமாக தரையிரக்கப்பட்டது. இந்த மாதம் இந்தியாவின் புதிய நாடாளுமனறக் கட்டிடம் திறக்கப்பட்டு, இரு அவைகளும் அங்கு நடைபெற்றது. இதில் மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டினை இரு அவைகளும் நிறைவேற்றியது என உலகம் முழுவதும் இந்தியா குறித்தான பேச்சு இப்படியாகத்தான் இருக்கிறது. இது இல்லாமல் கனடா இந்தியா பிரச்னையும் மிக முக்கிய அங்கம் வகிக்கிறது.
இப்படி இந்தியா குறித்து உள்ளூர் தொடங்கி உலக நாடுகள் வரை இந்த பேச்சுதான். ஆனால் இந்தியாவின் மிகச் சிறிய மாநிலங்களில் ஒன்றான மணிப்பூர் மாநிலம் கடந்த மே மாதம் தொடங்கி இன்று வரை அமைதி இல்லாமல் உள்ளது. குறிப்பாக அங்கு உள்ள பெரும்பான்மை மெய்தி சமூக மக்களுக்கும், பழங்குடி குக்கி சமூக மக்களுக்கும் இடையே நடந்த இனக்கலவரம்தான்.
இந்த இனக்கலவரத்தின் காரணமாக இதுவரை 160 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வீடுகளை விட்டு வெளியேறி, வெளி இடங்களில் தஞ்சம் புகுந்துள்ளன. தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கக் கோரி மெய்தி சமூக மக்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த மே மாதம் பழங்குடியினர் பேரணி நடத்தினர். இந்த பேரணியில் வன்முறை வெடிக்க, மணிப்பூர் முழுவதும் கலவரம் பற்றி கொண்டது.
மணிப்பூர் முழுவதும் வன்முறை பரவுவதற்கு சமூக வலைதளங்களில் பரப்பப்படும் பொய்யான தகவல்களும் வதந்திகளுமே காரணம் என குற்றச்சாட்டு எழுந்த நிலையில், கடந்த மே மாதம் 23ஆம் தேதி, இணைய சேவை முடக்கப்பட்டது. அரசு ஒப்புதல் பெறப்பட்ட மொபைல் எண்களை தவிர்த்து அனைத்து மொபைல்களிலும் இணைய சேவை முடக்கப்பட்டது. இதை தொடர்ந்து, சுமார் 140 நாட்களாக இணைய சேவை இன்றி மணிப்பூர் மக்கள் தவித்து வந்தனர்.
இணைய சேவை மீண்டும் முடக்கம்:
இந்த நிலையில், மணிப்பூரில் கடந்த 23ஆம் தேதி முதல் இணைய சேவை மீண்டும் வழங்கப்பட்டது. இது தொடர்பான அறிவிப்பை மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங் வெளியிட்டார். மணிப்பூரில் இணைய சேவை முடக்கப்பட்டதற்கு எதிராக அம்மாநில உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், சில இடங்களில் மட்டும் இணைய சேவை வழங்க உத்தரவிட்டது.
இணைய சேவை வழங்கப்பட்டது, பள்ளிகள் திறக்கப்பட்டது என மணிப்பூர் இயல்பு நிலைக்கு நகர்ந்து வந்த நிலையில், சமீபத்தில் வைரலான வீடியோவால் ஒட்டுமொத்த நாடும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில், ” மணிப்பூரில் நடந்து வரும் வன்முறை மிகுந்த கவலை அளிக்கிறது. எல்லாவற்றையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகக் கூறிக்கொள்ளும் 'விஸ்வகுரு' மணிப்பூரில் சட்டம் ஒழுங்கை மீட்டெடுப்பதில் படுதோல்வி அடைந்துள்ளார். இணைய சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டதன் மூலம், இரண்டு மெய்தி மாணவர்கள் கொல்லப்பட்டது போன்ற பயங்கரமான சம்பவங்களை அம்பலப்படுத்தியுள்ளது. இந்த செயல்பாட்டில் முழு நாட்டையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. வன்முறையை கட்டுப்படுத்துவதற்கு பதிலாக, அரசாங்கம் மீண்டும் இணைய சேவையை நிறுத்தியுள்ளது. மாநில மற்றும் மத்தியில் ஆட்சியில் உள்ள பிஜேபி அரசாங்கங்கள் பொறுப்பேற்று மணிப்பூரைக் காப்பாற்ற வேண்டிய நேரம் இது.” என குறிப்பிட்டுள்ளார்.