Masi Magam 2025: நாளை மாசிமகம்; புண்ணிய நதிகளில் ஏன் நீராட வேண்டும்? எந்த தெய்வத்தை வணங்கினால் என்ன நன்மை?
masi magam 2025: மாசிமகம் நன்னாளில் புனித நீர்நிலைகளில் நீராடுவதால் என்னென்ன நன்மைகள்? எந்த தெய்வத்தை வணங்குவதால் என்ன நன்மைகள்? என்பதை கீழே காணலாம்.

masi magam 2025: ஆன்மீகத்திற்கு மிகவும் உகந்த மாதத்தில் மாசி மாதமும் ஒன்றாகும். மாசி மாத்தில் மிகவும் முக்கியமான விசேஷ நாள் மாசி மகம் ஆகும்.
மாசி மாதத்தில் வரும் மக நட்சத்திரத்துடன் கூடிய பெளர்ணமி நாளே மாசிமகம் ஆகும். மாசி மகம் என்றாலே இந்துக்களின் மிகவும் முக்கியமான பண்டிகை ஆகும். மேலும், பராசக்தி தாட்சாயணியாக அவதரித்ததும், பிரம்மஹத்தியிடம் பிடிபட்ட வருணபகவானுக்கு சிவபெருமான் சாபவிமோசனம் அளித்ததும் இதே மாசிமகம் நன்னாளில் ஆகும்.
மாசி மகம் எப்போது?
நடப்பாண்டிற்கான மாசி மகம் மார்ச் 12ம் தேதி கொண்டாடப்படுகிறது என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இதன்படி, நாளை மாசிமகம் கொண்டாடப்படுகிறது. மகம் நட்சத்திரம் நாளை அதிகாலை 3.53 மணிக்கு பிறக்கிறது. நாளை அதிகாலை தொடங்கும் இந்த மகம் நட்சத்திரம் அடுத்த நாளான மார்ச் 13ம் தேதி காலை 5.09 மணி வரை வருகிறது. ஆனால், பெளர்ணமி அடுத்த நாளான மார்ச் 13ம் தேதியே பிறக்கிறது. இருப்பினும், நாளையே மாசி மக வழிபாடு செய்ய வேண்டும்.
மாசிமகம் நாளில் ஏன் நீராட வேண்டும்?
புண்ணிய நதிகளாக கங்கை, யமுனை, பிரம்மபுரத்திரா, கோதாவரி, நர்மதை, காவிரி உள்ளன. இந்த நதிகளில் நீராடினால் நாம் செய்த பாவங்கள் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. பக்தர்களின் பாவத்தை சுமக்கும் இந்த நதிகள் தங்கள் பாவத்தை போக்கிக் கொள்வது எப்படி? என்று சிவபெருமானிடம் வேண்டினர்.
அதற்கு சிவபெருமான் கும்பகோணத்தில் உள்ள மகாமக குளத்தில் நீராடும்படி கூறியுள்ளார். சிவபெருமான் புண்ணிய நதிகளை நீராட சொன்ன நாளே மாசி மகம் ஆகும். இதன் காரணமாகவே, கும்பகோணத்தில் உள்ள மாசிமக குளத்தில் இந்த மாசிமக நன்னாளில் நீராடினால் பாவங்கள் நீங்கி ஏராளமான பலன்களும், நன்மைகளும் கிடைக்கும் என்பது ஐதீகம். இதனால், நாளை கும்பகோணம் மாசிமக குளத்தில் நீராட ஆயிரக்கணக்கில் பக்தர்கள் குவிவார்கள். கும்பகோணம் மாசிமக குளத்தில் நீராட இயலாத பக்தர்கள் அருகில் உள்ள நீர்நிலைகளில் நீராடலாம்.
விரதம் எப்படி இருப்பது?
இந்த மாசிமக நன்னாளானது சிவபெருமான், முருகன், விநாயகர், விஷ்ணு என அனைத்து தெய்வங்களுக்கும் உற்ற நாளாகும். இந்த நாளில் விரதம் இருப்பதால் ஏராளமான நன்மைகள் உண்டாகும்.
குழந்தைப் பேறு வேண்டும் தம்பதிகள் முருகப்பெருமானை வேண்டி நாள் முழுவதும் விரதம் இருக்கலாம். மேலும், திருமண வாழ்க்கையில் பிரச்சினை உள்ளவர்கள் அம்பாளை வேண்டிக்கொள்ளலாம், அம்பிகைக்கு நடக்கும் குங்கும அர்ச்சனையில் பிரசாதமாக வழங்கப்படும் குங்குமத்தை தினமும் நெற்றியில் அணிந்து வரலாம்.
மாசி மக நன்னாளில் அனைத்திற்கும் மூலதாரமாக திகழும் சிவனை முழு மனதாக நினைத்து வணங்க வேண்டும். மேலும், குலதெய்வத்தை வேண்டி பொங்கல் வைத்தும் வழிபடலாம். பெருமாளுக்கு இந்த மாசிமக நன்னாளில் சத்யநாராயண பூஜை செய்வதும் நன்மை பெருக்கும்.
முன்னோர்களுக்கு இந்த மாசி மக நன்னாளில் தர்ப்பணம் கொடுப்பதும் சிறப்பு ஆகும். நீர்நிலைகளுக்கு சென்று விளக்கேற்றி வழிபடுவது சிறப்பு ஆகும்.
சத்யநாராயண பூஜை:
மாசிமக நன்னாளில் சத்யநாராயண பூஜை செய்வது வழக்கம். சத்யநாராயண பூஜை பெளர்ணமியில்தான் செய்ய வேண்டும். இதனால், நாளை மறுநாள் சத்யநாராயண பூஜை செய்ய வேண்டும். இந்த பூஜையை நாளை மறுநாள் மாலை செய்வது சிறப்பு ஆகும்.

