திருச்சியில் உலர் துறைமுகம்? துரை வைகோ வைத்த கோரிக்கை - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வாக்குறுதி
திருச்சியில் உலர் துறைமுகம் (Dry Port) அமைப்பது தொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை, எம்.பி துரைவைகோ டெல்லியில் சந்தித்து கோரிக்கை வைத்தார்.

திருச்சியில் உலர் துறைமுகம் அமைப்பது தொடர்பான துரைவைகோவின் கோரிக்கை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதியளித்துள்ளார்.
துரை வைகோ கோரிக்கை:
திருச்சியில் உலர் துறைமுகம் (Dry Port) அமைப்பது தொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை திருச்சி எம்.பி துரைவைகோ டெல்லியில் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் வழங்கிய கடிதத்தில், “ கடந்த 21.08.2025 அன்று உங்கள் அலுவலகத்தில் உங்களைச் சந்தித்து, திருச்சிராப்பள்ளியில் உலர் துறைமுகத்தை நிறுவுவதற்கு உங்கள் ஆதரவைக் கோரியதை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன். கலந்துரையாடலின் போது, இந்த திட்டத்திற்கு உங்கள் ஆதரவைத் தெரிவித்தீர்கள். மேலும் இந்தத் திட்டத்தில் முக்கிய பங்கு வகிப்பதால், உங்கள் அமைச்சகம் தேவையான அனைத்து ஒத்துழைப்பையும் வழங்கும் என்று கூறியிருந்தீர்கள்.
பிற அமைச்சர்களுடன் சந்திப்பு
முன்னதாக, துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சர், சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் மற்றும் வணிக அமைச்சர் ஆகியோரையும் சந்தித்தேன். அவர்கள் அனைவரும் இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்து, நேர்மறையான மற்றும் ஊக்கமளிக்கும் பதில்களை அளித்தனர். இந்த திட்டம் தொடர்பாக நான் தமிழ்நாடு அரசை அணுகியிருந்தேன். உலர் துறைமுகத்தை நிறுவுவதற்கு மாநிலத் தரப்பில் இருந்து தேவையான அனைத்து ஆதரவையும் வழங்க அவர்கள் தயாராக இருப்பதாகத் தெரிவித்தனர்.
விருப்பக் கடிதம் வழங்க வலியுறுத்தல்
இந்தத் திட்டத்தை ஆதரிக்க விருப்பம் தெரிவிப்பது குறித்து மத்திய அரசிடமிருந்து முறையான தகவல்தொடர்புக்காக மாநில அரசு காத்திருக்கும் நிலையில், திருச்சிராப்பள்ளியில் உலர் துறைமுகத்தை நிறுவுவதற்கு உங்கள் அமைச்சகத்திலிருந்து அதிகாரப்பூர்வ விருப்பக் கடிதத்தை வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். இது மாநில அரசு முன்னேறிச் சென்று செயல்படுத்தத் தேவையான நடவடிக்கைகளைத் தொடங்க உதவும். உங்கள் தொடர்ச்சியான ஆதரவு இந்தப் பிராந்தியத்தின் நீண்டகால விருப்பத்தை நிறைவேற்ற உதவும் என்றும், திருச்சிராப்பள்ளி மற்றும் மத்திய தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் என்றும் நான் மனதார நம்புகிறேன்” என துரை வைகோ குறிப்பிட்டு இருந்தார்.
அதனை பெற்றுக்கொண்டு படித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கோரிக்கைக்கு உரிய முன்னுரிமை கொடுத்து, பரிசீலித்து, தேவையான நடவடிக்கையை மேற்கொள்வதாக உறுதியளித்துள்ளார்.





















