திமுக அரசே எடப்பாடி பழனிசாமிக்கு துணை போக வேண்டாம்; திருச்சி ஆர்ப்பாட்டத்தில் எழுந்த கோஷம்
கொடநாடு கொலை - கொள்ளை வழக்கில் உண்மையான குற்றவாளிகளை விரைவில் கண்டுபிடிக்க தி.மு.க. அரசை வலியுறுத்தி ஓ.பி.எஸ் அணி - அமமுக இணைந்து ஆர்ப்பாட்டம்.
அதிமுக மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில் நிகழ்ந்த கொலை, கொள்ளை வழக்கை விரைந்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கக் கோரி இன்று தமிழகம் முழுவதும் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் மற்றும் அமமுக தொண்டர்கள் சார்பில் மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக தேனி மாவட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கலந்துக்கொண்டார். தேனி பங்களாமேடு பகுதியில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அமமுக மற்றும் ஓ.பி.எஸ் அணியை சேர்ந்த நகர், ஒன்றியம் பேரூர், சார்பு அணி மற்றும் தலைமைக்கழக நிர்வாகிகள், உறுப்பினர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர். இந்த ஆர்பட்டத்தில் டிடிவி தினகரன் பேசுகையில், "தேனியில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் இந்த இடத்தில் தான் முதன்முதலில் என்னை நாடாளுமன்ற தேர்தலில் வேட்பாளராக ஜெயலலிதா அறிமுகம் செய்து வைத்தார். இங்கு கூடிய கூட்டம் பிரியாணி, மது மற்றும் காசுக்காக, வந்த கூட்டம் இல்லை. ஜெயலலிதாவிற்காக வந்த உண்மையான தொண்டர்கள்" என்றார்.
மேலும் ஓ.பி.எஸ் பேசுகையில், "ஆட்சிக்கு வந்த 3 மாதத்திற்குள் கொடநாடு கொலை கொள்ளை வழக்கை விரைந்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்போம் என ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார். ஆனால் 30 மாதங்களாகியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.கொடநாடு வழக்கு அதல, பாதாளத்திற்கு சென்று விட்டது. உண்மையான குற்றவாளிகள் விரைந்து பிடித்து நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழகம் முழுவதும் போராட்டம் தீவிரமடையும்" என தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து திருச்சி ஜங்ஷன் வழிவிடு வேல் முருகன் கோவில் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் கழக அமைப்பு செயலாளரும் திருச்சி மாநகர் மாவட்டக் கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வெல்லமண்டி நடராஜன் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் புறநகர் மாவட்டச் செயலாளர்கள் ரத்தினவேல், எம்.ஆர். ராஜ்மோகன், சாமிக்கண்ணு, அம்மா மக்கள் முன்னேற்றக்கழக தலைமை நிலையச் செயலாளர் ராஜசேகரன், அமைப்புச் செயலாளர் சாருபாலா தொண்டைமான், மாவட்ட செயலாளர்கள் செந்தில்நாதன், கலைச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் வக்கீல் ராஜ்குமார், பேரவை செயலாளர் ஜவஹர்லால் நேரு, ஆர்.சி.கோபி, வசந்தி, ஜோதிவானன், பத்மாவதி, முன்னாள் கோட்டத் தலைவர் மனோகரன், சௌந்தர், சுதாகர், எஸ். பி கார்த்திகேயன், சந்திரன், சுமங்கலி சம்பத், ஏபி சேகர், வைத்தியநாதன், ராஜா முகமது, தாயார் சீனிவாசன், மலைக்கோட்டை விஸ்வா, ஷாஜகான், கருமண்டபம் நடராஜன், மற்றும் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்துகொண்டனர்.
மேலும் கொடநாடு கொலை - கொள்ளை வழக்கில் உண்மையான குற்றவாளிகளை விரைவில் கண்டுபிடித்து சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். திமுக அரசு, எடப்பாடி பழனிசாமிக்கு துணை போகாமல் உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷங்களை எழுப்பினர்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்