Trade Union Strike: ‘வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் சம்பளம் கட்’ - தமிழ்நாடு அரசு
இந்த வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று தொ.மு.ச உள்ளிட்ட 10 தொழிலாளர் சங்க நிர்வாகிகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆதரவு கோரினர்.
![Trade Union Strike: ‘வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் சம்பளம் கட்’ - தமிழ்நாடு அரசு Trade Union Strike TN Govt Employee Salary will be cut who participate in all india strike March 28, 29- iraianbu Trade Union Strike: ‘வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் சம்பளம் கட்’ - தமிழ்நாடு அரசு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/10/812f81abad82b330a1a2022f4fe776d6_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
மார்ச் 28, 29 ஆகிய தினங்களில் நடைபெறும் நாடுதழுவிய போராட்டத்தில் கலந்துகொண்டால் அந்த நாள்களுக்கான சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்று தலைமைச்செயலாளர் இறையன்பு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கக்கூடாது, தொழிலாளர்களுக்கு விரோத சட்டங்களை திரும்பப் பெற வேண்டும், பெட்ரோலிய பொருட்கள் மீதான விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும், முறைசாரா தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை நசுக்கக்கூடாது, விவசாயிகள் விவசாய தொழிலாளர்கள் உரிமைகளை தட்டிப் பறிக்கக் கூடாது, மேலும் மின்சார திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும், தேசிய பணமாக்கும் கொள்கை உள்ளிட்ட எந்த பெயராலும் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க கூடாது, புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும், குறைந்தபட்ச ஓய்வூதியத்தை அதிகப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 28, 29,தேதிகளில் போராட்டம் நடத்தபப்டும் என்று மத்திய தொழிற்சங்கங்கள் அறிவித்திருந்தன. இந்த போராட்டத்திற்கு மாநில தொழிற்சங்கங்களிடம் ஆதரவு கோரியிருந்தன.
இதனையடுத்து, மார்ச் 28 அன்று நடைபெறும் போராட்டத்தில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம், கூட்டுறவுத்துறை, நீதித்துறை, தொழில் பயிற்சி அலுவலர்கள் சங்கம், பொது சுகாதாரத் துறை அலுவலர்கள் சங்கம், உணவு பாதுகாப்பு அலுவலர் சங்கம், சத்துணவு ஊழியர் சங்கம், சுகாதார ஆய்வாளர்கள் சங்கம், அனைத்து மருந்தாளுநர்கள் சங்கம், சுகாதார போக்குவரத்து துறை ஊழியர் சங்கம், நெடுஞ்சாலை துறை சாலை பணியாளர்கள் சங்கம், கல்வித் துறை நிர்வாக அலுவலர்கள் சங்கம் உள்ளிட்டு 70க்கும் மேற்பட்ட சங்கங்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்பார்கள் என்று தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் அறிவித்திருந்தது.
அதோடு, இந்த வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று தொ.மு.ச உள்ளிட்ட 10 தொழிலாளர் சங்க நிர்வாகிகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆதரவு கோரினர். இதனையடுத்து அகில இந்திய பொது வேலைநிறுத்தத்திற்கு திமுக முழு ஆதரவு அளிக்கும் என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்திருந்ததோடு, திராவிட முன்னேற்றக் கழகத்தினரும், கழக தொழிலாளர் முன்னேற்றச் சங்க பேரவை நிர்வாகிகளும், தொழிலாளர்களும் பங்கேற்று- தொழிலாளர்களின் உரிமைகளை மீட்டெடுத்திடவும்- அகில இந்திய பொது வேலைநிறுத்தம் வெற்றி பெற்றிடவும் முழு மூச்சுடன் போராட்டக் களத்தில் நின்று ஆதரவளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.
இந்த போராட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் சுமார் 50 லட்சம் அரசுப் பணியாளர்கள் கலந்துகொள்வார்கள் என்று கூறப்பட்டது. ஆனால், இதற்கு மாறாக இந்த போராட்டத்தில் கலந்துகொண்டால் ஊதியம் பிடிக்கப்படும் என்றும், போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஊழியர்களுக்கு போக்குவரத்துத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. அதோடு, மார்ச் 28, 29 ஆகிய தேதிகளில் ஊழியர்கள் விடுமுறை எடுக்க அனுமதி கிடையாது எனவும் ஏற்கனவே அளிக்கப்பட்ட விடுப்புகளும் ரத்து செய்யப்படுவதாக போக்குவரத்துத்துறை கூறியிருக்கிறது. இதே போன்று மின்சாரத்துறையும் அதன் பணியாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிலையில், மார்ச் 28, 29 ஆகிய தேதியில் அரசுப்பணியாளர்களுக்கு எந்த விதமான விடுப்பும் அனுமதிக்கப்பட மாட்டாது என்றும், விடுப்பு எடுத்தால் 10.30 மணிக்குள் தகவல் தெரிவிக்க வேண்டும். அன்றைய தினம் அவர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்றும், இந்த இரண்டு நாள்களில் பணிக்கு வந்தவர்கள், வராதவர்கள் பற்றிய தகவல்களை துறை வாரியாக அனுப்பி வைக்கவும் அனைத்துத் துறைச் செயலாலர்களுக்கும் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு ஐஏஎஸ் சுற்றறிக்கை மூலம் உத்தரவிட்டுள்ளார்.
ஆளும் கட்சியான திமுக இந்த போராட்டத்திற்கு ஆதரவு அளித்திருக்கும் நிலையில், இந்த போராட்டத்தில் பங்கேற்கக் கூடாது என்று தமிழ்நாடு அரசு அறிவித்திருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)