உள்ளாட்சி உள்ளது உள்ளபடி: காஞ்சிபுரம் மாவட்டத்தில் கால் பதிக்கப் போவது யார்? A to Z களநிலவரம்!
TN Local Body Election: இங்கு ஒவ்வொரு கட்சியும் வாங்கிய ஓட்டுகள் முக்கியத்துவம் பெறுகிறது. இருப்பினும் திமுகவின் ஓட்டு விகிதம் அதிகமே.
சட்டமன்ற தேர்தல் நிறைவு பெற்ற திமுக தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்ற கையோடு தமிழ்நாட்டின் 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இது கட்சிகளின் பலம், பலவீனம் அறியும் தேர்தல் அல்ல. அதே நேரத்தில் மக்கள் யார் பக்கம் என்பதை எடை போடும் தேர்தல். ‛உள்ளாட்சியில் நல்லாட்சி’ என்கிற தாரகமந்திரத்தின் அடிப்படையில் இந்த தேர்தலை அரசியில் கட்சிகள் அவ்வளவு எளிதில் அனுகப்போவதில்லை. சில மாதங்களுக்கு முன் பொதுத்தேர்தலை சந்தித்த காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் தான் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. சில மாதங்களுக்கு முன் அங்கிருந்த மக்களின் மனநிலை எவ்வாறு இருந்தது? அங்கு எந்த கட்சி கோலோச்சியது? அங்கு அதிக ஓட்டு வாங்கிய கட்சி எது? என்பது குறித்து ஏபிபி நாடு ‛உள்ளாட்சி... உள்ளது உள்ளபடி‛ பகுதியில் பார்க்கலாம். அந்த வகையில் இன்று நாம் காண்பது காஞ்சிபுரம் மாவட்டம்....!
காஞ்சிபுரம் மாவட்டம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 5 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. அந்தந்த ஒன்றியங்கள் வாரியான வாக்காளர் விபரம் மற்றும் வாக்குச்சாவடி மையங்கள் குறித்த விபரம் இதோ:
ஒன்றியம் | ஆண் வாக்காளர் | பெண் வாக்காளர் | இதர வாக்காளர் |
காஞ்சிபுரம் | 51127 | 54705 | 12 |
வாலாஜாபாத் | 50710 | 54831 | 7 |
உத்தரமேரூர் | 50993 | 53423 | 7 |
ஸ்ரீபெரும்புதூர் | 44387 | 48964 | 11 |
குன்றத்தூர் | 134049 | 138464 | 41 |
மாவட்ட மொத்த வாக்காளர்கள் விபரம்:
மாவட்டம் | மொத்தம் | ஆண்கள் | பெண்கள் | இதர |
காஞ்சிபுரம் | 6,81,731 | 3,31,266 | 3,50,387 | 78 |
ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இதோ அதன் விபரம்:
முதல் கட்ட தேர்தல் |
காஞ்சிபுரம் உத்தரமேரூர் வாலாஜாபாத் |
இரண்டாம் கட்ட தேர்தல் |
குன்றத்தூர் ஸ்ரீபெரும்புதூர் |
யாருக்கு பலம்....? ‛உள்ளது உள்ள படி’!
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கட்சிவாரியாக பெற்ற வாக்குகளின் அடிப்படையிலும், கட்சிகள் பெற்ற வெற்றியின் அடிப்படையிலும் அந்த மாவட்டத்தில் கட்சிகளின் பலத்தை காணலாம்.
சட்டமன்ற தொகுதிகள் |
ஆலந்தூர் ஸ்ரீபெரும்புதூர் உத்திரமேரூர் காஞ்சிபுரம் |
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தமுள்ள 4 சட்டமன்ற தொகுதிகளில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளே வெற்றி பெற்றன. இருப்பினும் கட்சிகள் பெற்ற ஓட்டுகள் அடிப்படையில் சில சதவீதங்கள் வித்தியாசத்தில் தான் அதிமுக-திமுகவின் வாக்கு விகிதம் இருந்தது. நான்கு தொகுதிகளிலும் இதே நிலையே தொடர்ந்தது. சட்டமன்ற தொகுதியில் கட்சிவாரியாக பெற்ற வெற்றிகள் மற்றும் வாக்குகள் இதோ:
1.ஆலந்தூர் சட்டமன்ற தொகுதி:
வேட்பாளர் | கட்சி | பெற்ற வாக்குகள் |
டி.எம்.அன்பரசன் | திமுக | 116785 |
வளர்மதி | அதிமுக | 76214 |
சரத்பாபு | மக்கள் நீதிமய்யம் | 21139 |
முகமது தமீம் அன்சாரி | எஸ்.டி.பி.ஐ., (அமமுக) | 1770 |
ஆர்.கார்த்திகேயன் | நாம் தமிழர் | 16522 |
ஆலந்தூர் சட்டமன்ற தொகுதியில் திமுகவின் டி.எம்.அன்பரசன் 40,571 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார். அதே நேரத்தில் அந்த தொகுதியில் மக்கள் நீதி மய்யம் மற்றும் நாம் தமிழர் கட்சியின் வாக்குகள் கவனிக்கப்பட வேண்டியவை. அந்த இரு கட்சிகளும் இணைந்து 37,661 வாக்குகளை பெற்றிருக்கின்றன. அத்தோடு அதிமுகவின் பிளவுப் பிரிவான அமமுக.,வின் வாக்குகளை கூட்டினால் 39,431 வாக்குகள் வருகிறது. இதோடு ஒப்பிடும் போது திமுக வேட்பாளர் கூடுதலாக 1000 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார். இங்கு ஒவ்வொரு கட்சியும் வாங்கிய ஓட்டுகள் முக்கியத்துவம் பெறுகிறது. இருப்பினும் திமுகவின் ஓட்டு விகிதம் அதிகமே.
2.ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதி:
வேட்பாளர் | கட்சி | பெற்ற வாக்குகள் |
செல்வப்பெருந்தகை | காங்கிரஸ் | 115353 |
கே.பழனி | அதிமுக | 104474 |
தங்கவேல் | மக்கள் நீதிமய்யம் | 18870 |
பெருமாள் | அமமுக | 3144 |
டி.புஷ்பராஜ் | நாம் தமிழர் | 22034 |
ஸ்ரீபெரும்புதூர் தொகுதியை பொருத்தவரை திமுக கூட்டணி என்கிற முறையில் ஓட்டு அறுவடை செய்யப்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் செல்வப்பெருந்தகை அதிமுக வேட்பாளர் பழனியை விட 10,879 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார். அதே நேரத்தில் நாம் தமிழர் கட்சி மட்டும் 22034 வாக்குகள் அங்கு பெற்றிருக்கிறது. மக்கள் நீதி மய்யம் 18870 வாக்குகள் பெற்றிருக்கிறது. இந்த இரு கட்சிகளுமே வெற்றி வித்தியாசத்தை விட கூடுதல் வாக்குகள் பெற்றுள்ளன. அமமுக 3144 ஓட்டுகள் பெற்றிருக்கிறது. ஸ்ரீ பெரும்பதூரை பொருத்தவரை கடந்த தேர்தலில் வெற்றி, தோல்வியை தீர்மானிப்பதில் நாம் தமிழர் மற்றும் மக்கள் நீதிமய்யம் கட்சிகள் பெரிய பங்காற்றியிருக்கின்றன.
3.உத்தரமேரூர் சட்டமன்ற தொகுதி:
வேட்பாளர் | கட்சி | பெற்ற வாக்குகள் |
சுந்தர் | திமுக | 93427 |
சோமசுந்தரம் | அதிமுக | 91805 |
சூசையப்பர் | மக்கள் நீதிமய்யம் | 2100 |
ரஞ்சித்குமார் | அமமுக | 7211 |
காமாட்சி | நாம் தமிழர் | 11405 |
உத்தரமேரூர் சட்டமன்ற தொகுதியை பொருத்தவரை வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் சுந்தர், அதிமுக வேட்பாளர் சோமசுந்தரத்தை விட வெறும் 1622 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அங்கு அமமுக பெற்ற வாக்குகள் 7211. நாம் தமிழர் பெற்ற வாக்குகள் 11405. மக்கள் நீதி மய்யம் இங்கு பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்தவில்லை. அவர்கள் பெற்ற வாக்குகள் 2100 மட்டுமே. இங்கு அதிமுகவின் வெற்றிக்கு தேவையான வாக்குகள் சிதறடிக்கப்பட்டுள்ளது. முடிந்த வரை நாம் தமிழர், அமமுக, மநீம ஆகியவை ஓட்டுகளை பிரித்தன. வாக்கு விகிதம் என்று பார்க்கும் போது, திமுகவுக்கு இணையாக அதிமுகவும் நெருக்கத்தில் உள்ளது. அதுவும் அத்தனை வாக்குகள் பிரிக்கப்பட்ட பிறகும். அதே சாதகம் தான் திமுகவிற்கும், அத்தனை ஓட்டுகள் பிரிக்கப்பட்டும் திமுக வெற்றிக்கான வாக்குகளை பெற்றிருக்கிறது.
4.காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி:
வேட்பாளர் | கட்சி | பெற்ற வாக்குகள் |
எழிலரசன் | திமுக | 102712 |
மகேஷ்குமார் | பாமக | 91117 |
கோபிநாத் | மக்கள் நீதிமய்யம் | 12028 |
மனோகரன் | அமமுக | 2301 |
சல்தீன் | நாம் தமிழர் | 13946 |
காஞ்சிபுரம் தொகுதியை பொருத்தவரை அதிமுக கூட்டணியில் பாமகவின் மகேஷ்குமாரை திமுகவின் எழிலரசன் 11,595 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அங்கும் மக்கள் நீதி மய்யம் 12028 வாக்குகள், நாம் தமிழர் 13946 வாக்குகள் பெற்றுள்ளன. இது வெற்றி வித்தியாசத்தை விட அதிகமான ஓட்டுக்கள். இங்கு அமமுக பெரியதாக சோபிக்கவில்லை. 2301 வாக்குகள் மட்டுமே அக்கட்சி பெற்றுள்ளது. அதிமுக சார்பில் கூட்டணி கட்சியான பாமக போட்டியிட்டது. ஒருவேளை அதிமுக போட்டியிடும் பட்சத்தில் முடிவு மாறியிருக்கலாம். அல்லது இன்னும் நெருக்கமான எண்ணிக்கையில் தோல்வியை தழுவியிருக்கிலாம் என்கின்றனர். எது எப்படி இருந்தாலும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் வாக்குகள் அப்படியே கிடைத்திருக்கின்றன. அது உள்ளாட்சியிலும் தொடரலாம். காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசியல் கட்சிகள் சந்திக்கும் பலம், பலவீனம் உள்ளது உள்ளபடி இதோ!
கட்சி | பலம் | பலவீனம் |
திமுக |
கூட்டணி தொடர்கிறது ஏற்கனவே பெற்ற வெற்றி ஆளுங்கட்சி என்கிற சாதகம் குறுகிய காலத்தில் ஆட்சிக்கு கிடைத்த நற்பெயர் பண பலம் |
மநீம, நாம் தமிழர் வாக்குகள் உட்கட்சி பூசல் விஜய் மக்கள் இயக்கம் |
அதிமுக |
கடந்த கால வாக்கு விகிதம் பண பலம் |
பாமக கூட்டணி வெளியேற்றம் அமமுக வாக்குகள் மநீம, நாம் தமிழர் வாக்குகள் எதிர்கட்சியாக தேர்தல் சந்திப்பு விஜய் மக்கம் இயக்கம் |
நாம் தமிழர் |
சட்டமன்றத்தில் கிடைத்த வாக்குகள் கூட்டணி இல்லாதது |
உள்ளூர் செல்வாக்கு இல்லாத வேட்பாளர்கள் பண பலம் மாவட்டத்தில் முன்னெடுக்கும் தலைமை |
மக்கள் நீதி மய்யம் |
கடந்த சட்டமன்ற தேர்தலில் பெற்ற வாக்குகள் கமல் என்கிற அடையாளம் |
கட்சியில் ஏற்பட்ட பிளவு மாவட்டத்தில் முன்னேடுக்கும் தலைமை பண பலம் |