PTR slams TKS Elangovan: '2 முறை கட்சி பதவி பறிக்கப்பட்ட வயதான முட்டாள்’ : டிகேஎஸ் இளங்கோவனை குறிப்பிடுகிறாரா பி.டி.ஆர்?
கலைஞர் கருணாநிதியாலும், தற்போதைய திமுக தலைவர் ஸ்டாலினாலும் இரண்டு முறை கட்சி பொறுப்பு பறிக்கப்பட்டவர் டி.கே.எஸ்.இளங்கோவன். அதனை குறிப்பிட்டே பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அவரை சாடியுள்ளார்
ஜி.எஸ்.டி கூட்டத்தில் தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்காததும் அதற்கு அவர் சமூக வலைதளமான ட்விட்டரில் அளித்திருக்கும் பதிலும் சர்ச்சைகளுக்கு வித்திட்ட நிலையில், இது குறித்து தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த திமுக மூத்த தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு பொருளாதார அறிவு மிகுதியாக இருந்தாலும், அரசியல் அனுபவம் என்பது குறைவு என்று குறிப்பிட்டதுடன், முதல்வர் மு.க.ஸ்டாலின் இப்படியெல்லாம் பேசக்கூடாது என்று அறிவுறுத்தியுள்ளார். அதையும் மீறி இப்படி எரிச்சல் அடைந்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை அழைத்து தலைமை கண்டிப்பார்கள் என குறிப்பிட்டிருந்தார்.
ஆட்சியில் இருக்கும் தனது கட்சியின் நிதி அமைச்சர் பற்றி திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான டி.கே.எஸ்.இளங்கோவன் பேசியது திமுகவினர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. சமூக வலைதளங்களில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு ஆதரவாக திமுக ஐ.டி-விங்கும், டி.கே.எஸ்.இளங்கோவன் பேசியதுதான் சரி என்று பிற கட்சியை சார்ந்தவர்களும் பதிவிட்டு வருவதால் ட்விட்டர் தளம் பற்றி எரிந்துக்கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், இன்று இன்னொரு பதிவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பிடிஆர் பழனிவேல்தியாகராஜன், டி.கே.எஸ்.இளங்கோவனை மறைமுகமாக கடுமையாக சாடியுள்ளார்.
அதில், கட்சியின் இரண்டு முக்கிய தலைவர்களால், இரண்டு முறை கட்சி பொறுப்பு பறிக்கப்பட்ட ‘வயதான முட்டாளை’ அழைத்து, என்னை பற்றி பேசச் சொல்லி உளற வைத்திருக்கிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளதோடு, இரண்டு கிலோ இறால் கொடுத்து வாங்கும் அளவுக்கு தகுதியுள்ளவர்தான் அவர் என கடுமையாக தாக்கியுள்ளார்.
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் இந்த பதிவுகளுக்கு ட்விட்டரில் கடுமையான எதிர்வினைகள் வந்ததாலும், ஏன் பெயரை சொல்ல அஞ்சுகின்றீர்கள் என பலர் கேட்டதாலும், பதிவு போட்ட சில மணி நேரங்களிலேயே அந்த பதிவை அவர் நீக்கிவிட்டார்.
திமுக தலைவராக இருந்த கலைஞர் கருனாநிதியாலும், தற்போதைய தலைவர் மு.க.ஸ்டாலினாலும் இரண்டு முறை கட்சி பொறுப்பு பறிக்கப்பட்டவர் டி.கே.எஸ்.இளங்கோவன் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2015ஆம் ஆண்டு ஊடகங்களுக்கு பேட்டி அளித்த டி.கே.எஸ்.இளங்கோவன் திமுக எத்தனை இடங்களில் போட்டியிடும் என தன்னிச்சையாக அறிவித்தார், இதனால் அதிருப்தியடைந்த அப்போதைய திமுக தலைவர் கருணாநிதி, அவரை செய்தித் தொடர்பாளர் பொறுப்பில் இருந்து நீக்கினார். இதேபோல, கடந்த 2018ஆம் ஆண்டு பேட்டி அளித்த டி.கே.எஸ்.இளங்கோவன், அறிவாலயத்தில் மறைந்த கருணாநிதிதியின் சிலையை சோனியா காந்தி திறப்பார் என்றும் சிலை திறப்பு விழாவிற்கு அதிமுகவினருக்கு அழைப்பு விடுக்கப்படமாட்டாது எனவும் தெரிவித்தார்.
கருணாநிதி சிலை திறப்பு குறித்து திமுக தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடும் முன்பே, முந்திக்கொண்டு டிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்ததை கண்டு அதிருப்தி அடைந்த திமுக தலைவர் ஸ்டாலின், அவரின் செய்தித் தொடர்பு செயலாளர் பொறுப்பை பறித்தார்.
இந்த இரண்டு சம்பவங்களை குறிப்பிட்டே பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கருத்து பதிவிட்டுள்ளார். ஆனால், அவர் டிகேஎஸ் இளங்கோவன் பெயரை குறிப்பிடவில்லை.