டெல்டா மாவட்டங்களில் நிலக்கரி சுரங்கம் அமைப்பதை தமிழக பாஜக ஏற்றுக் கொள்ளவில்லை - கே.பி.ராமலிங்கம்
மத்திய அரசு அடித்தட்டு மக்கள் தொடங்கி விஞ்ஞானிகள் வரை அனைத்து தரப்பிற்குமான திட்டங்களை செயல்படுத்தி வருவதால் உலகின் விஸ்வகுருவாக இந்தியா மாறியிருப்பதாக கே.பி.ராமலிங்கம் தெரிவித்தார்.
சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டி பகுதியில் பாரதிய ஜனதாக் கட்சியின் ஸ்தாபகர் தின விழா இன்று கொண்டாடப்பட்டது. இதனையொட்டி, மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்களை பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் தாமரை சேவை மையத்தின் செயல்பாடுகளை பாரதிய ஜனதாக் கட்சியின் மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம், பாரதிய ஜனதாக் கட்சியின் ஸ்தாபர் தினத்தையொட்டி, தமிழகம் முழுவதும் அனைத்து கிளைகளிலும் கொடியேற்று விழா, புதிய உறுப்பினர் சேர்க்கை, மூத்த உறுப்பினர்களை கெளரவித்தல் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அடுத்து வரும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதாக் கட்சி சார்பில் அதிக எண்ணிக்கையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழகத்தில் வெற்றி பெறவும், சட்டப்பேரவைத் தேர்தலில் அதிக இடங்களை வென்று ஆட்சிப் பொறுப்பில் அமரும் வகையில் பாரதிய ஜனதாக் கட்சித் தொண்டர்கள் களத்தில் செயல்பட்டு வருகின்றனர்.
மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்களை பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் பாரதிய ஜனதாக் கட்சி சார்பில் தாமரை சேவை மையம் மாவட்டம்தோறும் அமைக்கப்பட்டு வருகிறது. வேறு எந்த அரசியல் கட்சியும் செய்யாத வகையில் இந்த சேவை மையம் பொதுமக்களுக்காக நடத்தப்பட்டு வருகிறது. காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு நிலக்கரி சுரங்கம் அமைக்கப்படும் என்பதை தமிழக பாரதிய ஜனதாக் கட்சி ஏற்றுக் கொள்ளவில்லை. இது தொடர்பாக மத்திய அரசுக்கு மாநிலத் தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார். மேலும் சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சரையும் சந்தித்து விவசாயிகளைப் பாதிக்கும் இந்த திட்டத்தை செயல்படுத்தக்கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார். நிலக்கரி சுரங்கம் அமைப்பது தொடர்பாக மத்திய அரசு இறுதி முடிவெடுக்கவில்லை. அதற்குள்ளாக மத்திய அரசினை ஏதாவது குறை சொல்ல வேண்டும் என்பதற்காக சில சமூக விரோத சக்திகள் இப்பிரச்சினையில் அரசியல் செய்கின்றன.
வளர்ந்த நாடுகளுடன் இந்தியா போட்டியிட்ட காலம் போய், வல்லரசு நாடுகளுடன் போட்டி போடும் அளவிற்கு நாட்டின் வளர்ச்சியை பிரதமர் மோடி அதிகப்படுத்தியுள்ளார். அடித்தட்டு மக்கள் தொடங்கி விஞ்ஞானிகள் வரை அனைத்து தரப்பினருக்குமான திட்டங்கள் வாயிலாக உலகின் விஸவகுருவாக இந்தியா திகழ்கிறது. தமிழகத்தில் மாற்று கட்சியினுடைய ஆட்சி நடைபெறுகிறது என்பதற்காக திட்டங்கள் செயல்படுத்தாமல் மத்திய அரசு நிறுத்தவில்லை. தங்களுக்கு வாக்களிக்காத மக்களுக்கும் சேர்த்து மிக அதிக எண்ணிக்கையிலான திட்டங்களை மத்திய அரசு தமிழகத்தில் செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக விமான நிலைய விரிவாக்கம், வந்தே பாரத் ரயில் சேவை தொடக்கம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வருகிறார். அயராத பணிகளிடையேயும் தமிழக மக்களின் மீது அவர் வைத்துள்ள பாசத்தையே இது காட்டுகிறது என்றார் அவர்.
இந்நிகழ்ச்சியில், பாரதிய ஜனதாக் கட்சி சுற்றுச்சூழல் பிரிவு மாநிலத் தலைவர் கோபிநாத், சேலம் மாநகர் மாவட்ட பாரதிய ஜனதாக் கட்சித் தலைவர் சுரேஷ்பாபு, மாவட்ட செயலாளர் செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.