DMK | தேர்தலுக்காக அதிமுகவை விட இருமடங்கு கூடுதல் நிதியை செலவழித்த திமுக.. முழு விவரம்!
தேர்தலுக்காக ஆன்லைன் பிரச்சாரத்தில் இந்தியாவிலேயே அதிக நிதியை செலவழித்ததாக சமூக வலைதள நிறுவனங்களால் தெரிவிக்க பாரதிய ஜனதா கட்சி தேர்தல் செலவு விவரங்களை இதுவரை தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்கவில்லை.
கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய 5 மாநிலங்களுக்கு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் 234 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட அதிமுகவை வீழ்த்தி 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சியை கைப்பற்றியது. இதன் மூலம் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு கோட்டைக்குள் நுழைந்தது.
புதுச்சேரியில் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி என்.ஆர்.காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. அசாம் மாநிலத்தில் ஹிமந்தா பிஸ்வா சர்மா தலைமையான பாஜக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்க வைத்தது. கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. மேற்கு வங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது.
இந்த நிலையில் 5 மாநில நில தேர்தலுக்கு கட்சிகள் செலவழித்த நிதி விபரங்கள் தேர்தல் ஆணையத்தில் சமர்பிக்கப்பட்டு உள்ளன. அந்த தகவலின் படி அதிக நிதி செலவிழித்த கட்சிகளின் விபரங்களை வெளியிட்டு உள்ளது தலைமை தேர்தல் ஆணையம்.
- திரிணாமூல் காங்கிரஸ்
தேர்தல் ஆணையம் வெளியிட்டு உள்ள புள்ளி விவரங்களின்படி, மேற்கு வங்கத்தில் வெற்றி பெற்ற மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் ரூ.154.28 கோடியை செலவித்து உள்ளது. அக்கட்சி நிதியை 2 ஆக பிரித்து செலவிட்டுள்ளது. கட்சித் தலைமை செலவுக்கு ரூ.79.66 கோடியும், வேட்பாளர்களுக்கான செலவுக்கு ரூ.74.61 கோடியும் செலவிட்டுள்ளது. கட்சி தலைமைக்கு ஒதுக்கப்பட்ட பணத்தில் ரூ.33.2 கோடி ரூபாய் நட்சத்திர வேட்பாளர்களின் பிரச்சாரத்திற்காகவும், ரூ.11.93 கோடி ரூபாய் விளம்பரத்துக்கும் செலவிடப்பட்டுள்ளது.
- திராவிட முன்னேற்றக் கழகம்
இந்த பட்டியலில் திமுக 2வது இடத்தில் உள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய இரண்டு மாநிலங்களில் தேர்தலில் போட்டியிட்ட தி.மு.க, மொத்தமாக ரூ.114.14 கோடியை செலவிட்டுள்ளது. இதில், ரூ.39.78 கோடி ரூபாய் ஊடக விளம்பரங்களுக்காக மட்டும் செலவழிக்கப்பட்டு உள்ளது. அதே போல், நிலுவையில் உள்ள குற்றச்செயல்கள் குறித்த விவரங்களை வெளியிடுவதற்காக ரூ.54.47 கோடி ரூபாயை வேட்பாளர்களுக்கு என வழங்கி இருக்கிறது.
3. காங்கிரஸ்
மேற்கு வங்கம், தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா மற்றும் அஸ்ஸாம் மாநிலங்களில் தேர்தலில் போட்டியிட்ட காங்கிரஸ் 5 மாநிலங்களுக்கும் மொத்தமாகவே ரூ.84.93 கோடியை மட்டுமே செலவிட்டுள்ளது.
4. அதிமுக
தேர்தலுக்கு முன் தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்த அதிமுக, தமிழ்நாடு, புதுச்சேரி மாநில சட்டப்பேரவை தேர்தல் மற்றும் கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலுக்கும் தேர்தலுக்கும் ரூ.57.33 கோடியை செலவிட்டுள்ளது. இதில், பிரச்சாரத்தை விட செய்தித்தாள், தொலைக்காட்சி விளம்பரம், ஆன்லைன், SMS விளம்பரங்களுக்கு பெரும்பங்கு தொகை, அதாவது ரூ.56.65 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
- இந்திய கம்யூனிஸ்டு கட்சி
5 மாநில தேர்தல்களில் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சி மொத்தமாகவே ரூ.13.19 கோடியை மட்டுமே செலவிட்டுள்ளது.
தேர்தலுக்காக ஆன்லைன் பிரச்சாரத்தில் இந்தியாவிலேயே அதிக நிதியை செலவழித்ததாக சமூக வலைதள நிறுவனங்களால் தெரிவிக்கப்பட்ட ஆளும் பாரதிய ஜனதா கட்சி தேர்தல் செலவு விவரங்களை இதுவரை தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்கவில்லை.