செந்தில்பாலாஜியிடம் விரைவில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தும்...! அண்ணாமலை பரபரப்பு பேட்டி..!
தமிழக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியிடம் அமலாக்கத்துறை விரைவில் விசாரணை நடத்தும் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பேட்டி அளித்துள்ளார்.
சென்னையில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகமான கமலாலயத்தில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை நிருபர்களைச் சந்தித்தார். அப்போது, அவர் கூறியதாவது, “ அமலாக்கத்துறையினர் விரைவில் அமைச்சர் செந்தில்பாலாஜியிடம் விசாரணை நடத்துவார்கள். ஆவின் பால் எடை விவகாரத்தில் தமிழக அரசு தெளிவுப்படுத்த வேண்டும். ஏனென்றால், மக்கள் தினமும் ஆவின் பால் எடையை சரிபார்க்க முடியாது. நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் தமிழில் பேசினார். அப்படி பேசியும் தமிழக எம்.பி.க்கள் தர்ணா என்ற பெயரில் தமிழக மக்களின் பெயருக்கு களங்கம்தான் விளைவித்துள்ளனர்.
ஒரு பாராளுமன்ற எம்.பி.க்குரிய தகுதி, கண்ணியத்தின் அடிப்படையில் அவர்களின் நடவடிக்கை அமையவில்லை. மத்திய அரசின் அமலாக்கத்துறை காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாகாந்தியை அலுவலகத்திற்கு எவ்வாறு அழைக்கலாம் என்பதுதான் முரசொலி தலையங்கத்தில் உள்ள கோபம். இந்தியாவை பொறுத்தவரை அனைவரும் சமம்தான்.
குஜராத்தின் முதல்வராக மோடி இருந்தபோது அவர் மீது வழக்குத் தொடரப்பட்டபோது மோடி நேரில் விசாரணைக்கு சென்றார். அப்போது, தொண்டர்கள் கூச்சலிடவில்லை. போராட்டம் நடத்தவில்லை. பேருந்துகளை எரிக்கவில்லை. சோனியாகாந்தி கேட்ட நேரத்திலும், தேதியையும் அமலாக்கத்துறையினர் கொடுத்தனர். அவர் கொடுத்த தேதியில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. பின்னர், அவர் கேட்ட புதிய தேதியையும் கொடுத்தனர்.
பின்னர், எதற்காக காங்கிரசின் தொண்டர்கள், தலைவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்? சோனியாகாந்தியை யாரும் குண்டுகட்டாக தூக்கிச்செல்லவில்லை. கருணாநிதியை வீட்டில் இருந்து குண்டுகட்டாக தூக்கிச்சென்றபோது முதன் ஆளாக குரல் கொடுத்தவர் அடல்பிகாரி வாஜ்பாய். கருத்துச்சுதந்திரத்திற்காக பா.ஜ.க. நின்றிருக்காது. சம்மன் கொடுத்து வரச்சொன்னதில் என்ன பிரச்சினை?
பாராளுமன்றத்தில் நிதியமைச்சர் விளக்கம் அளிக்கும்போது அதை கேட்கக்கூட எம்.பி.க்கள் தயாராகவில்லை என்றால், எம்.பி.க்களே ஜனநாயகத்தை மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம். தமிழக எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தார்கள். மக்களுக்கு யார் கருத்துரிமை பக்கம் நிற்கிறார்கள் என்று தெரியும்.”
இவ்வாறு அவர் கூறினார். மேலும், தமிழ்நாட்டில் 50 லட்சம் வீடுகளில் தேசிய கொடி ஏற்றும் இயக்கமும் நடைபெறும் என்றும் அண்ணாமலை அறிவித்தார். இதன்படி, சுதந்திர தின விழாவை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் 50 லட்சம் வீடுகளில் தேசிய கொடியை ஏற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்