Annamalai : செந்தில்பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கவேண்டும்..! அண்ணாமலை அறிக்கை
மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனே நீக்க வேண்டும் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
“ ஆளுங்கட்சியின் அமைச்சராக இருப்பதால் வழக்குகளில் இருந்து எளிதில் தப்பித்து விடலாம் என்று பகல் கனவு கண்டுகொண்டிருந்த மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி சற்று கதிகலங்கி போயுள்ளார். போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது ஓட்டுனர், நடத்துனர் பணி நியமனத்திற்கு லஞ்சம் வாங்கிய வழக்கில் மீண்டும் உச்சநீதிமன்றத்தில் சிக்கியிருக்கிறார். உச்சநீதிமன்றத்தில் சிக்கியது செந்தில்பாலாஜி மட்டுமில்ல, இந்த வழக்கில் தமிழக அரசின் நடவடிக்கையும், உச்சநீதிமன்றம் கடுமையாக விமர்சித்துள்ளது.
2014ம் ஆண்டு போக்குவரத்து துறைக்கு ஆட்கள் சேர்ப்பதற்கு தன்னுடைய உதவியாளராக இருந்த சண்முகம் மூலம் சுமார் 40 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக அருள்மணி என்பவர் ஒரு புகாரை காவல்துறையினரிடம் சமர்ப்பித்தார். அதில், தனக்கு எம்.டி.சி.யில் வேலை பெற்றுத்தருவதாக கூறி ஏமாற்றியதாக அமைச்சர் செந்தில்பாலாஜி, அமைச்சரின் சகோதரர் அசோக் அமைச்சரின் உதவியாளர் சண்முகம் மற்றும் ராஜ்குமார் பெயரிலும் புகார் அளிக்கப்பட்டது. இதன்பிறகு, இதே குற்றச்சாட்டுடன் சுமார் 13 லட்சம் சாட்சியாக முன்வந்தனர்.
இதில், எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் ஒருவழியாக பல கட்டப் போராட்டங்களின் மூலம் அருள்மணியின் புகாரை காவல்துறை விசாரித்து இறுதிக்கட்ட அறிக்கையை பாராளுமன்றம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் 2018ம் ஆண்டு சமர்ப்பித்து, 2021ம் வரை எந்த நடவடிக்கையும் இல்லாமல் அது நிலுவையில் இருந்தது.
2018ம் ஆண்டு செந்தில்பாலாஜி தி.மு.க.வில் இணைந்தார். 2021ம் ஆண்டு தி.மு.க. தமிழகத்தில் ஆட்சி அமைத்த பிறகு இந்த வழக்கில் இருந்து தப்பிக்க பல நடவடிக்கைகளை அவர் எடுக்கத் தொடங்கினார். அதில், ஒரு அம்சமாக அவரது உதவியார் சண்முகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வழக்குத் தொடர்ந்தார்.
அதற்கு ஏற்றவாறு, புகார் அளித்த அருள்மணியும் கொடுத்த பணத்தை குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் இருந்து திரும்பப் பெற்று சமரசம் ஏற்பட்டதால் தனது புகாரை திரும்ப பெறுவதாக நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இதன் அடிப்படையில், சென்னை உயர்நீதிமன்றமும் வழக்கைத் தள்ளுபடி செய்தது. இதன்பிறகு, ஒரு வழியாக வழக்கு முடிந்துவிட்டது என்று நிம்மதி அடைந்தார் செந்தில்பாலாஜி.
ஆனால், இந்த வழக்கு அவரின் கழுத்தை சுற்றிய பாம்பை போல மீண்டும் விசாரணைக்கு வந்தது. இந்த ஊழலினால் நியாயமான வாய்ப்பை இழந்த தர்மராஜ் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின் மேல்முறையீட்டை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அதையேற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம், இந்த வழக்கில் தி.மு.க. அரசின் கீழ் இருக்கும் காவல்துறையின் மந்தமான செயல்பாட்டின் கீழ் கேள்வி எழுப்பியது.
மேலும், நீதிபதிகள் எப்படி ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் சுமத்தப்பட்ட வழக்கை விசாரிக்காமல் தள்ளுபடி செய்ய முடியும் என்று கேள்வி எழுப்பி, தள்ளுபடி செய்யப்பட்ட வழக்கை விசாரிக்குமாறு கூறியுள்ளது.
முன்னர், உயர்நீதிமன்றம் கொடுத்த உத்தரவு மூலம், தான் குற்றமற்றவர் என்றும், ஊழல் என்றால் என்னவென்று தெரியாதவர் போல தன்னைக் காட்டிக்கொள்ள முயற்சிக்கும் செந்தில்பாலாஜியை இதற்கு முன்னர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் மிகப்பெரிய ஊழல்வாதி என்றும், செந்தில்பாலாஜியும், அவருடைய சகோதரரும்தான் கரூரில் நடக்கும் குற்றங்களுக்கு துணைபோவதாகவும் கூறியிருந்தார்.
ஆனால், தற்போது செந்தில்பாலாஜி தி.மு.க.வில் ஐக்கிய ஆகியிருப்பதால்,, அவரின் மேல் எண்ணற்ற குற்றச்சாட்டை அடுக்கிய அதே தி.மு.க.தான் தற்போது காப்பாற்ற முயற்சி செய்கிறது. ஊழல்வாதியான செந்தில்பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை உடனடியாக நீக்க வேண்டும். மேலும், அவரின் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் எந்தவித அரசியல் மற்றும் அரசு வழக்கறிஞர்களின் தலையீடும் மற்றும் உதவிகள் இல்லாமல் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெறுவதற்கு இந்த தி.மு.க. அரசு ஒத்துழைக்க வேண்டும்.”
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.