பாஜக முதல் பாமக வரை... விசிக கடந்து வந்த கூட்டணி சொல்லும் கதை என்ன?
Viduthalai Chiruthaigal Katchi : தமிழ்நாட்டின் முக்கிய கட்சியாக இருக்கும் விடுதலை சிறுத்தை கட்சியின் கூட்டணி வரலாறு குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம்
தமிழ்நாட்டு அரசியலில் தற்போது முக்கிய காட்சிகளில் ஒன்றாக விடுதலை சிறுத்தை கட்சி இருந்து வருகிறது. குறிப்பாக கடந்த சில நாட்களாக ஊடகங்களில் ஒலிக்கும் பெயராக திருமாவளவன் பெயர் இருந்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக திருமாவளவன் அனைத்து பேட்டிகளிலும், மறக்காமல் பாஜக மற்றும் பாமக உடன் கூட்டணி இல்லை என பேசி வருகிறார். திமுக கூட்டணியில் தொடர்வதாகவும் தெரிவித்து வருகிறார். கூட்டணி மாறப்போவதில்லை திமுக கூட்டணியில் தொடர்வோம் என விசிக கூறி வந்தாலும், கடந்த கால வரலாறுகள் இப்படி இருந்ததில்லை , திருமாவளவனின் கூட்டணிகுறித்து முழுமையாக பார்ப்போம்.
விடுதலை சிறுத்தை கட்சி
மராட்டிய மாநிலத்தில் உருவாக்கப்பட்ட தலித் பேந்தர் இயக்கத்தின் தமிழ்நாடு தலைவராக இருந்த மலைச்சாமி படுகொலை செய்யப்பட்ட பிறகு அதன் தலைவராக தொல். திருமாவளவன் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து அந்த கட்சி விடுதலை சிறுத்தை கட்சியாக பெயர் மாற்றப்பட்டது. சாதி ஒழிப்பு, தமிழ் தேசியம், சனாதன எதிர்ப்பு ஆகிய கொள்கைகளை முன்வைத்து கட்சி செயல்பட்டு வருகிறது.
கூட்டணி நிலைப்பாடு என்ன ?
ஆரம்பத்தில் விடுதலை சிறுத்தை கட்சி தேர்தல் புறக்கணிப்பை மேற்கொண்டு வந்தது. 1999 நாடாளுமன்றத் தேர்தலில் தமாகாவுடன், விடுதலைச் சிறுத்தைகள், புதிய தமிழகம் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்துப் முதல்முறையாக போட்டியிட்டது. இந்த கூட்டணியில் விடுதலை சிறுத்தை கட்சிக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இரண்டு தொகுதிகளிலும் தோல்வியை சந்தித்தது.
தேசிய ஜனநாயக் கூட்டணி
2001 சட்டமன்றத் தேர்தலில் விடுதலை சிறுத்தை கட்சி கூட்டணி மாறியது. திமுக - பாஜக அங்கம் வகித்த கூட்டணியில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தை கட்சி, உதய சூரியன் சின்னத்தில் 8 தொகுதியில் போட்டியிட்டு கடலூர் , மங்களூர் தொகுதியில் திருமாவளவன் வெற்றி பெற்றார். எட்டு தொகுதியில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தை கட்சி ஒரே இடத்தில் மட்டும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
2004 நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் கூட்டணி மாறினார் திருமாவளவன். நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றாவது அணியாக மக்கள் கூட்டணி என்ற பெயரில், ஐக்கிய ஜனதா தளம், விடுதலைச் சிறுத்தைகள், புதிய தமிழகம், மக்கள் தமிழ் தேசம் போன்ற கட்சிகள் இந்தக் கூட்டணியில் இடம் பெற்றிருந்தது. இந்த கூட்டணியில் போட்டியிட்ட அனைவரும் தோல்வியை தழுவினார்.
மீண்டும் 2006 சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி மாறினார் திருமாவளவன். அதிமுக கூட்டணிக்கு சென்ற விடுதலை சிறுத்தை கட்சி கோவில் மணி சின்னத்தில் 9 தொகுதிகளில் போட்டியிட்டது. இரண்டு தொகுதிகளை கைப்பற்றி இருந்தது.
2009 தேர்தலில் மீண்டும் கூட்டணி மாறியது விடுதலை சிறுத்தை கட்சி. குறிப்பாக காங்கிரஸ் அங்கம் வகித்த இந்த கூட்டணியில் விடுதலை சிறுத்தை கட்சி சென்றதால் திருமாவளவன் மிகவும் விமர்சிக்கப்பட்டார். குறிப்பாக அந்த சமயத்தில் ஈழ பிரச்சனை தமிழகத்தில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது. திமுக மற்றும் காங்கிரசுக்கு எதிராக தொடர் போராட்டங்களை நடத்தி இருந்த திருமாவளவன், தேர்தலின் போது அதே திமுக காங்கிரஸ் கூட்டணியில் இணைந்தது குறிப்பிடத்தக்கது. இரண்டு இடங்களில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தை கட்சி சிதம்பரத்தில் மட்டும் திருமாவளவன் வெற்றி பெற்றார்.
2011 தேர்தலில் திமுகவுடன் இணைந்து தேர்தலை சந்தித்தது. அப்போது இந்த கூட்டணியில் காங்கிரஸ், பாமக ஆகிய கட்சிகள் இணைந்திருந்தது. பத்து தொகுதிகளில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தை கட்சி அனைத்து தொகுதிகளிலும் விடுதலை சிறுத்தை கட்சி தோல்வியை சந்தித்தது.
2014 நாடாளுமன்ற தேர்தலிலும் திமுக தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்ற விடுதலை சிறுத்தை கட்சி இரண்டு இடங்களில் போட்டியிட்டு தோல்வியை சந்தித்தது.
2016 தமிழ்நாடு சந்தித்ததில் வித்தியாசமான தேர்தலில் ஒன்று இந்த தேர்தல். இதில் மக்கள் நல கூட்டணியில் தேர்தலை சந்தித்தது விடுதலை சிறுத்தை கட்சி. 25 சட்டமன்ற தொகுதிகளில் விடுதலை சிறுத்தை கட்சி போட்டியிட்டு ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாமல் தோல்வியை சந்தித்தது.
2019 தேர்தல், மக்கள் நல கூட்டணியில் இருந்த போது திமுகவை பெரிதும் விமர்சனம் செய்திருந்த திருமாவளவன், மீண்டும் திமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்தார். இரண்டு இடம் ஒதுக்கப்பட்டது. சிதம்பரத்தில் பானை சின்னத்திலும், விழுப்புரத்தில் உதயசூரியன் சின்னத்திலும் போட்டியிட்டது. இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றது விடுதலை சிறுத்தை கட்சி.
2021 தேர்தலில் மீண்டும் திமுக உடனே பயணித்த விடுதலை சிறுத்தை கட்சி, ஆறு சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட்டு நான்கு சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்றது. சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலிலும் திமுகவுடன் போட்டியிட்ட விடுதலை சிறுத்தை கட்சி விழுப்புரம் மற்றும் சிதம்பரம் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் பானை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றதால் மாநில கட்சி என்ற அந்தஸ்தை பெற்றுள்ளது.
இந்தநிலையில் தான் விடுதலை சிறுத்தை கட்சி குறித்து பல்வேறு பேச்சுகள் அரசியல் அரங்கில் ஒலிக்க தொடங்கியுள்ளன. இருந்தும் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் மக்கள் நலனை கருதி தொடர்ந்து, திமுக கூட்டணியில் தான் இருப்போம் என பேசி வருவதும் குறிப்பிடத்தக்கது.