"கள்ளக்குறிச்சி மாணவி தற்கொலைக்கு தமிழக முதல்வர் பொறுப்பேற்க வேண்டும்" - அர்ஜுன்சம்பத்
கள்ளக்குறிச்சி சம்பவம் துரதிஷ்டவசமானது, எதிர்க்கட்சியினர் சார்பில் மாணவியின் மரணம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டு வரவேண்டும் .
நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு சுதந்திரப் போராட்ட வீரர்களை நேரில் சந்தித்து நமது அடுத்த தலைமுறைக்கு சுதந்திர உண்மை வரலாற்றை எடுத்துச் செல்ல வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி சார்பில் "வந்தே மாதர யாத்திரை" நடைபெறுகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள இரண்டாம் கார்கில் போரில் பயன்படுத்தப்பட்ட பீரங்கி முன்பு நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டார். சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் ராணுவ வீரர்களுக்கு முழக்கங்களை எழுப்பி மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், சேலத்தில் உள்ள சுதந்திரப் போராட்ட வீரர்களான விஜயராகவாச்சாரியார் மற்றும் ராஜாஜி ஆகியோரின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதைத் தொடர்ந்து சேலம் மாவட்ட ஆட்சியரிடம் ஆடி மாதம் மாரியம்மன் கோவில்களில் கூழ் வார்க்க தானியங்கள் வழங்கப்பட வேண்டும் என்றும், ஏழை இந்து மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கிட வேண்டும் என்றும் கோரிக்கை மனுக்கள் அளித்துள்ளோம். கள்ளக்குறிச்சி சம்பவம் துரதிஷ்டவசமானது, எதிர்க்கட்சியினர் சார்பில் மாணவியின் மரணம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டு வரவேண்டும் என்றும் கோரிக்கைகள் பலமுறை வைக்கப்பட்டும் தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் போராட்டம் வன்முறையாக மாறிவிட்டது, போராட்டக்காரர்கள் என்ற பெயரில் யாரோ சதி செய்து பள்ளி சொத்துகளுக்கு சேதம் விளைவித்துள்ளனர். இதற்குக் காரணம் தமிழக முதல்வரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும்தான், தமிழகத்தில் உளவுத்துறை செயல் இழந்து விட்டது என்று கூறினார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது, நிர்வாக சீர்கேடு அதிகரித்துள்ளது. கள்ளக்குறிச்சி மாணவி தற்கொலைக்கு முழுக்க முழுக்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை பொறுப்பேற்க வேண்டும். வன்முறையில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.
தமிழகத்தில் பள்ளிக்கூடங்கள் கல்லூரிகளில் முஸ்லிம் கிறிஸ்டின் மாணவர்களுக்கு மட்டும்தான் நிதி உதவி கொடுக்கப்படுவதாகவும் பெரியார் பல்கலைக்கழகத்தில் ஜாதி ரீதியான சர்ச்சை குறித்த கேள்வி விவகாரத்தில், 75 ஆண்டுகளாக சமூகநீதி என்று பேசி வந்தவர்கள் ஆட்சியில் ஜாதி வன்மத்தை தூண்டும் வகையில் பட்டிலின மக்களை அவமானப்படுத்தும் வகையில் கேள்வித்தாள் தயாரித்து உள்ளனர். எனவே அவர்கள் மீது தீண்டாமை ஒழிப்பு கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்