TN Assembly : ”கூடுகிறது தமிழக சட்டப்பேரவை” ஜூன் 10ல் நடத்த திட்டம்..!
Tamil Nadu Assembly : போதை பொருள் விவகாரம், காவிரி நதி நீர் பிரச்னை, சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட பிரச்னைகளை பேரவையில் எழுப்ப அதிமுக திட்டமிட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் முடிந்துவிட்ட நிலையில், மற்ற மாநிலங்களில் தேர்தல்பல்வேறு கட்டமாக நடைபெற்று வருகிறது. வரும் ஜூன் 4ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ள நிலையில், அதே சூட்டோடு சூடாக தமிழக சட்டப்பேரவையையும் கூடவிருக்கிறது.
ஜூன் 2வது வாரத்தில் கூடுகிறது பேரவை..?
பட்ஜெட் தாக்கலுக்கு பிறகு வழக்கமாக நடைபெறும் மானியக்கோரிக்கை மீதான விவாதம் தேர்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் அதனை நடத்த தமிழக சட்டப்பேரவை செயலகம் முடிவு எடுத்துள்ளது. அதன்படி, ஜூன் 2வது வாரத்தில் தமிழக சட்டப்பேரவை கூடவுள்ளது. ஜூன் 10ஆம் தேதியான திங்கள்கிழமை அன்று சட்டப்பேரவை கூடும் என தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஒரு மாதம் நடக்கப்போகும் சட்டப்பேரவை – பரபரப்புகளுக்கு இருக்காது பஞ்சம்
ஒவ்வொரு துறை வாரியாக மானியக்கோரிக்கைகளும் அதன் மீது விவாதங்களும் நடைபெறவுள்ளதால், சட்டப்பேரவை கூட்டத் தொடர் கிட்டத்தட்ட ஒரு மாத காலம் வரை நடைபெறும். இந்த கூட்டத் தொடரின்போது பல்வேறு பிரச்னைகளை எழுப்ப அதிமுக ஏற்கனவே திட்டமிட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளும் தமிழக சட்டப்பேரவையில் எதிரொலிக்கும் என்பதால் கூட்டம் நடைபெறும் ஒரு மாதமும் பரபரப்புகளுக்கு பஞ்சமே இருக்காது.
போதை பொருள் பிரச்னையை எழுப்ப அதிமுக திட்டம்
அதிமுக ஆட்சி காலத்தில் தமிழ்நாட்டில் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட போதை பொருட்கள் தடை செய்யப்பட்டும், அவை தங்கு தடையின்றி கிடைக்கிறது என்பதை உணர்த்தும்விதமாக சட்டப்பேரவைக்குள்ளேயே குட்காவை திமுக எம்.எல்.ஏக்கள் எடுத்துச் சென்றனர். அப்போது அவர்கள் மீது உரிமை மீறல் விதியின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்நிலையில், இந்த முறை மானியக்கோரிக்கை நடைபெறவுள்ள நிலையில், தமிழகத்தில் திமுக ஆட்சியில்தான் போதை கலாச்சாரம் அதிகரித்துள்ளது என்பதை நிரூபணம் செய்யும் விதமாக போதை பொருட்களை பேரவைக்குள் கொண்டுச் சென்று சபநாயகரிடம் காட்ட அதிமுக திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதே நேரத்தில், திமுக அயலக அணி நிர்வாகியாக இருந்த ஜாபர் சாதிக் போதை பொருள் விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளதையும் சுட்டிக் காட்டி பேரவையில் பிரச்னையை எழுப்ப, அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் யோசித்து வருவதாக தெரியவந்துள்ளது.
காவிரி நீர் உரிமை பிரச்னையையும் பேரவையில் எதிரொலிக்கும்
தமிழ்நாட்டிற்கு காவிரி நீரை தர முடியாது என காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அம்மாநில முதல்வர் சித்தராமையாவும், துணை முதல்வரான டி.கே.சிவக்குமாரும் தொடர்ச்சியாக பேசிவரும் நிலையில், கூட்டணி கட்சியாகவும் ஆளுங்கட்சியாகவும் உள்ள திமுக ஏன் அவர்களிடம் இது குறித்து பேசவில்லை. அவர்கள் பேச்சுக்கு நேரடியாக கடுமையான கண்டனத்தை தெரிவிக்கவில்லை என்று கேட்டு பேரவையிலேயே பிரச்னையை செய்ய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தன்னுடைய எம்.எல்.ஏக்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். காவிரி நீர் முறையாக தமிழ்நாட்டிற்கு கிடைக்காததால், மேட்டூர் அணையில் இருந்து திட்டமிட்டப்படி ஜூன் 12ல் தண்ணீர் திறக்கப்படுமா ? என்ற கேள்வியையும் பேரவையிலேயே முன் வைக்க அதிமுக திட்டமிட்டிருக்கிறது.
தேர்தல் முடிவு எப்படி வந்தாலும் இந்த மானியக்கோரிக்கையில் திமுக அரசு, மக்களுக்கான அரசாக தமிழ்நாட்டில் செயல்படவில்லையென்பதை வெளிப்படுத்தும் விதமாக அதிமுகவின் முயற்சிகள் இந்த பேரவை கூட்டத் தொடரில் இருக்கும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
எது எப்படி இருந்தாலும் ஜூன் மாதம் நடைபெறப்போகும் தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரில் சுவாரஸ்சியங்களுக்கும் பரபரப்புகளுக்கும் வெளிநடப்புகளுக்கும் குறைவிருக்காது.