Sushilkumar Shinde: முன்னாள் முதலமைச்சர், முன்னாள் உள்துறை அமைச்சர்! அரசியலில் இருந்து ஓய்வு பெற்றார் சுஷில்குமார் ஷிண்டே - காங்கிரஸ் அதிர்ச்சி
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் உள்துறை அமைச்சருமான சுஷில்குமார் ஷிண்டே அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
![Sushilkumar Shinde: முன்னாள் முதலமைச்சர், முன்னாள் உள்துறை அமைச்சர்! அரசியலில் இருந்து ஓய்வு பெற்றார் சுஷில்குமார் ஷிண்டே - காங்கிரஸ் அதிர்ச்சி Sushilkumar Shinde ex-Union Home Minister and Congress leader, announces retirement from politics Sushilkumar Shinde: முன்னாள் முதலமைச்சர், முன்னாள் உள்துறை அமைச்சர்! அரசியலில் இருந்து ஓய்வு பெற்றார் சுஷில்குமார் ஷிண்டே - காங்கிரஸ் அதிர்ச்சி](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/25/917d63f3798884e1bca26e10fc77d8161698232306554102_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
இந்தியாவின் மிகப்பெரிய கட்சியான காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மகாராஷ்ட்ரா மாநில முன்னாள் முதலமைச்சருமானவர் சுஷில்குமார் ஷிண்டே. முதலமைச்சர், மத்திய அமைச்சர் என பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். அடுத்தாண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இவர் தற்போது அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
அரசியலில் இருந்து ஓய்வு:
மகாராஷ்ட்ராவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது அவரது ஆதரவாளர்களுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம், வரும் மக்களவைத் தேர்தலில் தனக்குப்பதிலாக பரினீதி ஷிண்டே போட்டியிடுவார் என்று அறிவித்துள்ளார்.
1941ம் ஆண்டு செப்டம்பர் 4-ந் தேதி பிறந்தவர் சுஷில்குமார் சம்பாஜி ஷிண்டே. மகாராஷ்ட்ராவின் சோலாபூரில் உள்ள தயானந்த் கல்லூரியில் ஹானர்ஸ் டிகிரியை முடித்தவர்களும், பம்பாயில் சட்டப்படிப்பையும் முடித்தவர். பின்பு, மகாராஷ்ட்ரா காவல்துறையில் கான்ஸ்டபிளாக பணியாற்றினார். மகாராஷ்ட்ரா சி.ஐ.டி.யில் 6 ஆண்டுகள் பணியாறறிய அவர் எஸ்.ஐ.யாகவும் பதவி உயர்வு பெற்றார்.
காங்கிரஸ் முக்கிய தலைவர்:
பின்னர், 1971ம் ஆண்டு காங்கிரசில் இணைந்தார். பின்னர், 1974ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் அவருக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டது. அந்த தேர்தலில் வெற்றி பெற்ற அவர் அடுத்தடுத்து நடந்த தேர்தல்களிலும் அபார வெற்றி பெற்று அம்மாநிலத்தில் அசைக்க முடியாத காங்கிரஸ் கட்சியின் தலைவராக உருவெடுத்தார்.
1980, 1985, 1990, 1992 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். 1992ம் ஆண்டு முதல் 1998ம் ஆண்டு வரை மகாராஷ்ட்ராவில் இருந்து ராஜ்ய சபா உறுப்பினராகவும் தேர்வாகியுள்ளார். 1999ம் ஆண்டு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அமேதி தொகுதியில் போட்டியிட்டபோது அவருக்காக தேர்தல் பிரசாரக்குழு தலைவராக பணியாற்றியுள்ளார்.
முதலமைச்சர், உள்துறை அமைச்சர்:
அரசியலில் பல்வேறு அனுபவமிக்க ஷிண்டே கடந்த 2003ம் ஆண்டு முதல் 2004ம் ஆண்டு வரை மகாராஷ்ட்ராவின் முதலமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். பின்னர், 2004ம் ஆண்டு ஆந்திராவின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். 2006ம் ஆண்டு மார்ச் 20-ந் தேதி மகாராஷ்ட்ராவில் இருந்து ராஜ்யசபாவிற்கு போட்டியின்றி தேர்வானார். 2006ம் ஆண்டு முதல் 2012ம் ஆண்டு வரை நாட்டின் மின்துறை அமைச்சராக பதவி வகித்த சுஷில்குமார், கடந்த 2012ம் ஆண்டு நாட்டின் பிரதமர் பதவிக்கு அடுத்த மிகப்பெரிய பதவியான உள்துறை அமைச்சராக பதவியேற்றார்.
இவர் உள்துறை அமைச்சராக இருந்தபோதுதான் தீவிரவாதிகளான அஜ்மல் கசாப் மற்றும் அப்சல்குரு தூக்கிலிடப்பட்டனர். கடந்த 2 முறையும் மக்களவைத் தேர்தலில் சோலாபூரில் போட்டியிட்ட சுஷில்குமார் ஷிண்டே தோல்வியை தழுவினார். கடந்த மக்களவைத் தேர்தல் பரப்புரையின்போதே, இதுதான் தன்னுடைய கடைசி மக்களவைத் தேர்தல் என்று கூறியிருந்தார்.
மகளை களத்தில் இறக்கிய ஷிண்டே:
இந்த நிலையில், அதிகாரப்பூர்வமாக அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அவரது மூன்று மகள்களில் ஒருவரான பிரனிதி ஷிண்டே தற்போது சோலாபூர் எம்.எல்.ஏ.வாக உள்ளார். இவர்தான் வரும் மக்களவைத் தேர்தலில் சுஷில்குமார் ஷிண்டேவிற்கு பதிலாக போட்டியிட உள்ளதாக அவர் கூறியுள்ளார்.
நாட்டின் மிக முக்கியமான காங்கிரஸ் தலைவரான சுஷில்குமார் ஷிண்டே அரசியலில் இருந்து ஒதுங்கியிருப்பது அவரது ஆதரவாளர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது முடிவு காங்கிரசுக்கும் பெரும் பின்னடைவு ஆகும்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)