"பாஜகவிற்கு பாடம் புகட்ட எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு" : பூசாரிகள் முடிவு.
பாதுகாவலர் என தம்பட்டம் அடித்துக் கொள்ளும் பாஜக அரசு கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் பூசாரிகளின் நலனுக்காக எந்தவொரு திட்டத்தையும் செயல்படுத்தவில்லை என பூசாரிகள் நல சங்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
தமிழ்நாடு கோவில் பூசாரிகள் நலச்சங்கத்தின் 19 ஆவது ஆண்டு விழா மற்றும் மாநாடு சேலத்தில் இன்று நடைபெற்றது. சங்கத்தின் மாநிலத் தலைவர் வாசு தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர். இதில் பூசாரிகளின் ஓய்வூதியத்தை நான்காயிரமாக உயர்த்தியதற்கும், கிராமப்புற கோயில்களில் திருப்பணி மேற்கொள்வதற்கான நிதியை 4.5 லட்சமாக உயர்த்தியதற்கும் தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பின்னர் தமிழ்நாடு கோவில் பூசாரிகள் நல சங்கத்தின் மாநில தலைவர் வாசு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது, "கிராமப்புற பகுதிகளில் உள்ள திருக்கோயில்களில் திருப்பணிகளை மேற்கொள்ள ஆண்டுக்கு 2500 திருக்கோயில்களுக்கு தமிழ்நாடு அரசு நிதி ஒதுக்குகிறது. ஆனால் தமிழ்நாடு அரசின் இந்தத் திட்டத்தை முடக்க வேண்டும் என்கிற நோக்கில் கோயில் திருப்பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு ஜிஎஸ்டி எனும் பெயரில் 18 சதவீதம் வரிப்பிடித்தம் செய்கிறது என குற்றம் சாட்டினார்.
மேலும் கோயில் திருப்பணிகள் மீதான ஜிஎஸ்டியை ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாட்டைச் சேர்ந்த பூசாரிகள் தொடர்ந்து வலியுறுத்தியும் மத்திய அரசு இதுவரை ஜிஎஸ்டியை ரத்து செய்யவில்லை. ஒட்டுமொத்த இந்துக்களுக்கும் பாதுகாவலர் என தம்பட்டம் அடித்துக்கொள்ளும் பாஜக அரசு கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் பூசாரிகளின் நலனுக்காக எந்தவொரு திட்டத்தையும் செயல்படுத்தவில்லை.
இதனால் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் பாஜகவிற்கு பாடம் புகட்டும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள 2 லட்சம் திருக்கோயில்களில் பணியாற்றும் பூசாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் அனைவரும் திமுக கூட்டணிக்கு ஆதரவு அளிக்க உள்ளதாக தெரிவித்தார்.
மேலும் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலின் போது திமுகவிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வது குறித்து ஒரு வாரத்திற்குள் முதல்வரை நேரில் சந்தித்து பின்னர் அதை பற்றி அறிவிக்கப்படும் எனவும் கூறினார்.