(Source: ECI/ABP News/ABP Majha)
Congress MP: "தமிழ்க் கடவுள் முருகன் மீது" திரும்பி பார்க்க வைத்த மயிலாடுதுறை எம்.பி.யின் பதவியேற்பு!
MP Sudha Ramakrishnan: மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்ற சுதா ராமகிருஷ்ணன், தமிழ் கடவுள் முருகன் மீது உளமாற என கூறி பதவியேற்றது பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற தமிழக எம்.பி.க்கள் இன்று பதவியேற்றனர். அவர்களில் ஒருவரான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சுதா ராமகிருஷ்ணன், இன்று நாடாளுமன்றத்தில் பதவியேற்றுக் கொண்டார்.
மக்களவை உறுப்பினராக பதவியேற்பு:
18வது மக்களவைக்கான தேர்தல் முடிவுகளானது, கடந்த ஜூன் மாதம் 4 ஆம் தேதி வெளியானது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்றதையடுத்து, ஆட்சியமைக்கும் உரிமையை பெற்றது. தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளிலும் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றது.
இந்நிலையில், டெல்லியில் உள்ள நாடாளுமன்றத்தில், தமிழ்நாட்டில் உள்ள தொகுதிகளில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள், இன்று இடைக்கால சபாநாயகர் பருத்ருஹரி மஹ்தாப் முன்னிலையில் மக்களவை உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டனர்.
அதில் மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் சுதா ராமகிருஷ்ணன், முருக கடவுளை கூறி பதவியேற்றது கவனம் பெற்றுள்ளது.
தமிழ்க்கடவுள் முருகப்பெருமான் மீது உளமாற:
அவர் பதவியேற்றபோது தெரிவித்ததாவது, ”மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியிலிருந்து மக்கள் சபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சுதா ராமகிருஷ்ணன் எனும் நான், சட்டப்பூர்வமாக நிறுவப்பட்டுள்ள , இந்திய அரசியலமைப்பின்பால், உண்மையான நம்பிக்கையும் பற்றும் கொண்டிருப்பேன் என்றும் இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டையும் நிலை நிறுத்துவேன் என்றும், நான் மேற்கொள்ளும் பணியை நேர்மையுடன் நிறைவேற்றுவேன் என்றும் தமிழ்க் கடவுள் முருகப்பெருமானின் மீது உளமாற உறுதி கூறுகிறேன். தமிழ் மக்கள் வாழ்க! இந்தியாவின் நம்பிக்கை நாயகன் ராகுல் காந்தி வாழ்க! ஜோடோ ஜோடோ பாரத் ஜோடோ” என தெரிவித்து மக்களவை உறுப்பினராக சுதா ராமகிருஷ்ணன் பதவியேற்றுக் கொண்டார். அப்போது, அவரது கையில் அரசியலமைப்பு புத்தகம் இருந்தது.
அதே நேரத்தில், திமுக எம்.பி. கதிர் ஆனந்த், வாழ்க தமிழ்நாடு, வெல்க திமுக, வாழ்க தளபதி ஸ்டாலின், வருங்காலம் எங்கள் உதயநிதி என்று முழக்கமிட்டார். அதேபோல சி.என்.அண்ணாதுரை, தரணிவேந்தன் உள்ளிட்ட எம்.பி.க்களும் உதயநிதியை வருங்காலம் என்று குறிப்பிட்டனர். தொடர்ந்து பதவியேற்ற பெரும்பாலான அமைச்சர் உதயநிதி, எ.வ.வேலு ஆகியோரைக் குறிப்பிட்டு உறுதிமொழி எடுத்தனர்