Duraimurugan : ”துரைமுருகனிடமிருந்த கனிம வளத்துறை பறிப்பு” முதல்வரின் கோபம் காரணமா..? முழு பின்னணி..!
"மணல் வியாபாரிகளிடம் தொடர்பில் இருந்தது குறித்து உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட், செயல்பாடுகள் மீது முதல்வர் அதிருப்தி” இதன் காரணமாகவே கனிம வளத்துறை துரைமுருகனிடமிருந்து பறிப்பு..!

திமுக பொதுச்செயலாளரும் சட்டப்பேரவையின் முன்னவருமான அமைச்சர் துரைமுருகனிடமிருந்த கனிமம் மற்றும் சுரங்கத்துறையை அதிரடியாக பறித்து முதல்வர் உத்தரவிட்டிருக்கிறார். துரைமுருகனின் செயல்பாடுகளிலும் அவர் மீதான தொடர் புகார்கள் காரணமாகவும் இந்த முடிவை முதல்வர் எடுத்திருப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
துறை பறிப்பு ஏன்?
நீர்வளத்துறை அமைச்சராக இருக்கும் துரைமுருகன் வசமே மிக முக்கியமான கனிமம் மற்றும் சுரங்கத்துறையும் இருந்தது. மணல் விவகாரத்தில் அமைச்சர் துரைமுருகன் மீது அடுக்கடுக்கான புகார்கள் முதல்வர் வசம் சென்றிருந்தது. குறிப்பாக, மணல் வியாபாரிகளிடம் துரைமுருகனும் அவரது மகன் கதிர் ஆனந்தும் தொடர்பில் இருந்தது குறித்து உளவுத்துறை ரிப்போர்ட் அளித்திருந்தது. அதே நேரத்தில் அமலாக்கத்துறையும் இந்த விவகாரத்தில் வழக்கு பதிவு செய்து மாவட்ட ஆட்சியர்கள் உள்பட முக்கிய அதிகாரிகளை விசாரித்து வந்த நிலையில், திடீரென முதல்வர் மு.க.ஸ்டாலின், துரைமுருகனிடமிருந்த கனிமம் மற்றும் சுரங்கத் துறையை அதிரடியாக பறித்துள்ளார்.
#BREAKING | துரைமுருகனிடம் இருந்த கனிம துறை பறிப்புhttps://t.co/wupaoCz9iu | #Duraimurugan #DMK #Tamilnadu #Tngovt #Ragupathi #Tamilnews #ABPNadu pic.twitter.com/Gv0I4UCiis
— ABP Nadu (@abpnadu) May 8, 2025
ஸ்டாலின் பெயரில் வந்த அறிக்கை
வழக்கமாக, கட்சியின் முடிவுகள், அறிவிப்புகள், பொறுப்புகள் உள்ளிட்ட அனைத்து அறிவிப்புகளும் திமுவை பொறுத்தவரை பொதுச்செயலாளர் பெயரிலேயே வெளிவருவதுதான் வழக்கம். ஆனால், பொன்முடி பெண்கள் குறித்து தவறாக பேசிய நிலையில் அவரது துணைப் பொதுச்செயலாளர் என்ற பொறுப்பை கட்சியின் தலைவரான முதல்வர் மு.க.ஸ்டாலினே பறித்து, அவர் பெயரிலேயே அறிவிப்பை வெளியிட்டார். இது பலருக்கும் ஆச்சரியமாக இருந்தது. துரைமுருகன் பெயரில் அறிவிப்பு வராமல், ஸ்டாலின் பெயரில் அறிவிப்பு வந்தது துரைமுருகனுக்கே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அந்த நேரத்தில் மாற்றுத்திறனாளிகள் குறித்து துரைமுருகன் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரடியாக பொன்முடி பதவியை பறித்த நிலையில், அவசர அவசரமாக மாற்றுத்திறனாளிகளிடம் மன்னிப்புக் கேட்டார் துரைமுருகன். அப்போது முதலே துரைமுருகன் மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் பெயரில் அதிருப்தியி இருந்ததாக கூறப்பட்டது.
அமைச்சர்கள் வயிற்றில் புளியை கரைத்த அறிவிப்பு
கட்சியை விட வேறு யாரும் பெரிதல்ல என்பதை நிரூபணம் செய்யும் விதமாக திமுகவின் பொதுச்செயலாளரான துரைமுருகன் வசம் இருந்த வளம் கொழிக்கும் முக்கிய துறையான கனிமம் மற்றும் சுரங்கத் துறையை அவரிடமிருந்து பறித்தது மூலம் அனைத்து அமைச்சர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இதன் மூலம் எச்சரிக்கை விடுத்திருக்கிறார். புகார்களுக்கும் குற்றச்சாட்டுக்களுக்கும் உள்ளானால் யாருடைய பதவியும் எப்போது வேண்டுமானாலும் பறிபோகலாம் என்பதற்கான சான்றுதான் துரைமுருகனின் துறை பறிப்பு.
துரைமுருகனுக்கு கனிமத்திற்கு பதில் சட்டத்துறை
அமைச்சர் துரைமுருகனிடமிருந்து கனிமம் மற்றும் சுரங்கத்துறையை பறித்தாலும் அவருக்கு அமைச்சர் ரகுபதி வசமிருந்த சட்டத்துறையை நீர்வளத்துறையோடு சேர்த்து கூடுதலாக ஒதுக்கியிருக்கிறார் முதல்வர். இருப்பினும், இந்த துறை மாற்றம் என்பது துரைமுருகனுக்கு பெரும் பின்னடைவாகவே கருதப்படுகிறது.





















