Senthil Balaji Health: தனியார் மருத்துவமனையில் செந்தில்பாலாஜிக்கு அறுவை சிகிச்சையா..? தயாராகும் மருத்துவ குழு..!
Senthil Balaji Health: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Senthil Balaji Health: ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஆஞ்சியோ பரிசோதனை செய்யப்பட்டது. அதில், அவரது ரத்தக்குழாயில் மூன்று அடைப்புகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால், அவருக்கு பைபாஸ் சர்ஜரி செய்ய வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை செய்யப்படவுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ரத்தக்குழாயில் அடைப்பு:
அமலாக்கத்துறையினர் அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டதன் அடிப்படையில், அவரை கைது செய்தனர். அப்போது அவருக்கு நெஞ்சு வலி ஏற்படவே, உடனே ஓமந்துரார் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவரை தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் என திமுக மூத்த தலைவர்கள் சந்தித்து நலம் விசாரித்தனர்.
இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஆஞ்சியோ பரிசோதனை (இதயத்திற்கு செல்லக்கூடிய ரத்தக்குழாய்களில் இருக்கும் அடைப்புகள் குறித்து கண்டறிய செய்யப்படும் பரிசோதனை) செய்யப்பட்டது. பரிசோதனை முடிவில் அவருக்கு ரத்தக்குழாய்களில் 3 அடைப்புகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
பை பாஸ் சர்ஜரி:
ஆஞ்சியோ பரிசோதனை தொடர்பாக, மருத்துவமனை சார்பில், வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ”மின்சாரதுறை மற்றும் மதுவிலக்குத்துறை அமைச்சர் செந்தில் பாலஜிக்கு இன்று அதாவது ஜூன் 14ஆம் தேதி காலை 10.40 மணியளவில் ஆஞ்சியோ பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் அவரது உடலில் முக்கியமான ரத்த நாளங்களில் மூன்று அடைப்புகள் இருப்பது கண்டறியப்பட்டது. அதற்கு விரைவில் பை - பாஸ் அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரைக்கப்படுகிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது.
அமைச்சருக்கு காவேரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூத்த மருத்துவர் ரகுராம் தலைமையில், மருத்துவக்குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜி ஓமந்துரார் அரசு மருத்துவமனையில் இருந்து காவேரி மருத்துவமனைக்கு அழைத்து வரப்படவுள்ளதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நேற்று அதாவது ஜூன் 13ஆம் தேதி, காலை 8 மணிக்கு அமைச்சர் வீட்டிற்கு சோதனையிட வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் 17 மணி நேரம் சோதனை நடத்தினர். சென்னையில் இருந்த அமைச்சரின் வீடு மட்டும் இல்லாமல், சென்னை, கரூர், ஈரோடு ஆகிய இடங்களில் உள்ள அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீட்டிலும் சோதனை நடைபெற்றது. அதேபோல், தமிழ்நாடு தலைமைச் செயலகத்திலும் சோதனைகள் நடைபெற்றது. சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற இந்த சோதனைக்கு பின்னர், அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் சோதனை நடத்த மேலும் ஒரு அதிகாரியும், மத்திய பாதுகாப்பு படை காவலர்களும் குவிக்கப்பட்டனர். அதன் பின்னர் அவர் கைது செய்யப்பட்டதால் தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.